நாட்டு நிலைமையைக் கருத்தில் கொண்டு, பொருத்தமான ஒரு ஜனாதிபதியைத் தெரிவு செய்வோம் - வை.எம்.எம்.ஏ. தேசிய தலைவர் சஹீத் எம். ரிஸ்மி வேண்டுகோள்



மினுவாங்கொடை நிருபர்-
நாட்டினதும் நாட்டு மக்களினதும் நலனைக் கருத்தில் கொண்டு, புதிய ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல் மும்முனைப் போட்டியில், அனுபவமும் ஆளுமையுமிக்க அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவர், எவ்விதப் போட்டியுமின்றி ஏகமனதாகத் தெரிவு செய்யப்படல் வேண்டும். இதற்கு பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து எம்.பி.க்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி அறிக்கை ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் பேரவையின் தேசியத் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
போதிய அளவு அரசியல் அனுபவமும் முதிர்ச்சியும் உள்ள ஒரு தேசிய இனமாகிய நாம், சில விடயங்கள் சம்பந்தமாக இன்றைய காலகட்டத்தில் சிந்திக்க வேண்டிய கட்டாய நிலையில் இருக்கின்றோம்.
இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி மும்முனைப் போட்டித் தேர்தல், நாட்டு மக்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். இது, பாராளுமன்றில் நடைபெறும் தேர்தல் மட்டுமல்லாது, முழு நாட்டுக்குமான தேர்தலாகும். இத்தேர்தல், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நடாத்தப்பட்டாலும், முழு நாடும் முழு உலகமும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் தேர்தல் என்பதால், இத்தேர்தல் மூலம் அனுபவமும் ஆற்றலுமிக்க ஒரு ஜனாதிபதி தெரிவாக வேண்டும் என்பதே மக்களது பாரிய எதிர்பார்ப்பாகும்.
எனவே, பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒட்டு மொத்த 225 எம்.பி. க்களும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற எவ்விதப் பாகுபாடுமில்லாமல் கட்சி பேதங்களின்றி ஆளுமைமிக்க சிறந்த ஒரு ஜனாதிபதியை, போட்டியின்றித் தேர்வு செய்ய வேண்டும் என்பதே மக்களது பேரபிலாஷையாகும்.
இவ்வாறு தெரிவு செய்யப்படுபவர், சர்வ கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்கும் ஒருவராக இருக்க வேண்டும்.
ஆளுங்கட்சிக்குள் இருந்து ஜனாதிபதி தெரிவானால், பிரதமர் எதிர்க்கட்சிக்குள் இருந்து தெரிவாக வேண்டும். ஜனாதிபதியை எதிர்க்கட்சிக்குள் இருந்து தெரிவு செய்தால், பிரதமரை ஆளுங்கட்சிக்குள் இருந்து தெரிவு செய்ய வேண்டும். இவ்வாறு நடைமுறைப் படுத்தப்பட்டால், நாட்டினதும் மக்களதும் எதிர்காலம் நிச்சயம் நல்லதாக அமையும்.
நமது நாடு அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிக்குள் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நாட்டை மீட்டு மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர அனைவரும் முன்வர வேண்டும். இதை விட்டு, ஜனாதிபதித் தேர்தலில் அனைவரும் மும்முனைப் போட்டியில் ஈடுபட்டு, அதன் விளைவாக மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத எவராவது ஒருவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், நமது நாடு அரசியல், பொருளாதார, சமூக ரீதியில் இதை விடவும் ஒரு நெருக்கடியான நிலைமைக்கு பின்னோக்கித் தள்ளப்பட்டு விடும் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.
இதை திரும்பத் திரும்ப சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வலியுறுத்துவதோடு, அதை துணிச்சலுடன் தைரியமாக முன்னின்று செயற்படும் தற்றுணிவு கொண்ட, இலங்கை வாழ் மக்களின் மிக நீண்ட கால அரசியல் அபிலாசைகளை அடைவதற்காக, கொள்கைப்பற்றுடன் செயற்படக்கூடிய அரசியல் பிரதிநிதி ஒருவரையே ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய வேண்டும்.
வருமானத்துக்கும், சலுகைகளுக்குமாக நாம் ஒரு அரசியல்வாதிக்கு வாக்களிப்போமாக இருந்தால், அது நாம் நமது தேசத்துக்கும் தேச மக்களுக்கும் செய்யும் பாரிய சமூகத் துரோகமாகும்.
எனவே, எமது அரசியலை தூய்மைப் படுத்த, பொருத்தமான ஒருவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய வேண்டும்.
அல்லது, இறுதிக் கட்டத்திலேனும் இவ்வாறான உடன்பாடு ஒன்றுக்கு வர முடியாமல் போகுமாக இருந்தால், நடுநிலையாகச் சிந்திக்கக் கூடிய உதாரணமாக சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் போன்ற ஒருவரை, தேசியப் பட்டியலில் உள்வாங்கப்பட்டு ஆறு மாதத்திற்கோ அல்லது ஒரு வருடத்திற்கோ உருவாக்கப்படும் இடைக்கால அரசாங்கத்தில் நடுநிலையாகச் செயற்படக்கூடிய ஜனாதிபதியாக நியமனம் வழங்க முடியும். அதன் பின்னர் தேர்தல் ஒன்றுக்குச் செல்ல முடியும் என்ற பாரிய பொறுப்பும் எம் முன்னே எழுந்து நிற்கின்றது.
எம்மிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், எமது பொது நோக்கங்களுக்காக இத்தருணத்தில் சகோதர கட்சிகளுடன் கை கோர்க்க வேண்டிய கட்டாயம் எமக்கு இருக்கின்றது.
ஆகவே, தடி எடுத்தவர்களெல்லாம் வேட்டைக் காரர்கள் என்ற உணர்வை அடியோடு மறந்து, எம்மிடையே பகை வளர்க்கும் வார்த்தைப் பிரயோகங்களையும், கருத்துக்களையும் தவிர்த்து, எதிர்வரும் ஜனாதிபதி மும்முனை தேர்வுப் போட்டியில் பொருத்தமான ஒருவரை போட்டியின்றி தேர்ந்தெடுப்பதற்கு, அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது கவனத்தைக் குவிக்க வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :