சிறப்பாக நடைபெற்ற சுவாமி விபுலானந்த அடிகளாரின் சிலை திறப்பு விழாவும் ,75 ஆவது மகாசமாதி தின நிகழ்வும்



காரைதீவு சகா-
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 75 ஆவது மகாசமாதி தின நிகழ்வும், அடிகளாரின் சிலை திறப்பு விழாவும் நேற்று 19.07.2022 (செவ்வாய்க்கிழமை) காலை அவர் அவதரித்த காரைதீவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.
விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணி மன்றத்தினரின் ஏற்பாட்டில், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு கண்ணகை அம்மன் ஆலய முச்சந்தியில் நிறுவப்பட்ட அடிகளாரின் மார்பளவிலான சிலையை மட்டக்களப்பு, இராமகிருஷ்ண மிஷன், உதவிப் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜீ மஹராஜ் திருமுன்னிலை அதிதியாக கலந்து கொண்டு சுபவேளையில் திறந்து வைத்தார்.

சுவாமிகளின் "வெள்ளை நிற மல்லிகையோ.. " என்ற பாடல் இசைக்க ,அதிதிகளால் சுவாமிகளின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டன.
இது சுவாமி பிறந்த காரைதீவு மண்ணில் நிறுவப்படும் ஐந்தாவது சிலையாகும்.இச் சிலையை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் வழங்கி இருந்தார்

சிலை திறப்பு விழாவின் பின்னர், அங்கிருந்து அதிதிகள் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரமுகர்கள் ஊர்வலமாக சுவாமி விபுலாநந்தர் மணிமண்டபத்தை அடைந்ததும், அங்கு பணி மன்றத்தின் தலைவர் வெ. ஜெயநாதன் தலைமையில் 75 ஆவது ஆண்டு மகா சமாதி தின வைபவம் ஆரம்பமாகியது.

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம்ஜெகதீஸன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். முன்னதாக ,மணி மண்டபத்தில் சுவாமி விபுலானந்தரின் திருவுருவப் படங்கள் ,அதனை அன்பளிப்பு செய்த சிவனருள் பவுண்டேசன் நிறுவன லண்டன் பிரதிநிதி டாக்டர் சிவனேசன் சார்பில் நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட செயலாளர் கே.வாமதேவன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டன.

மண்டப நிகழ்வில் ,கௌரவ ,சிறப்பு அதிதிகளாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ,பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் ,, திருக்கோவில் வலய பிரதி கல்வி பணிப்பாளர் சோ.ஸுரநுதன், சம்மாந்துறை வலய உதவி கல்வி பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

சுவாமி விபுலாநந்தர் கற்கை நிலைய மாணவர்களின் கலை நிகழ்வுகள், இந்து கலாசார ஒன்றிய அறநெறிப் பாடசாலை மற்றும் முருகன் ஐக்கிய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பேச்சு நிகழ்வுகள், இலங்கை தொலைக்காட்சி புகழ் கல்முனை சிவா அவர்களின் விபுலகீதங்கள் சிறப்பிசை நிகழ்வு, சிறப்புரைகள், பாராட்டுப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வுகள் ஆகியவை இடம்பெற்றன .
நிகழ்வுகளை, பணிமன்ற முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா நெறிப்படுத்சிறப்புரை வழங்கினார்.

மாவட்டத்தில் ஆன்மீக பணியாற்றி வரும் சிவனருள் பவுண்டேசன் நிறுவன மாவட்ட செயலாளர் கே.வாமதேவன் பொன்னாடை போர்க்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.ஒட்டுமொத்த நிகழ்வையும் ஏற்பாடு செய்த
பணிமன்ற செயலாளர் கு.ஜெயராஜி நன்றி தெரிவித்து உரையாற்றினார்.

மேலும்,பாடசாலை அதிபர்கள், நற்பணி மன்ற நிறுவுனர்கள், அறங்காவலர் ஒன்றிய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :