சமகால இலங்கை கள நிலவரம் தொடர்பிலும் சர்வகட்சி அரசாங்கம் உடனடியாக சாத்தியமில்லை என்ற விடயம் தொடர்பாகவும் சட்ட முதுமாணி வை. எல். எஸ். ஹமீட் இன்று (12) வெளியிட்டுள்ள அறிக்கை.



எஸ்.அஷ்ரப்கான்-
னாதிபதியின் ராஜினாமாவும் அதனோடு தொடர்புபட்ட சட்டங்களும்- சர்வகட்சி அரசாங்கம் உடனடியாக சாத்தியமில்லை.

ஜனாதிபதி எதிர்வரும் 13ம் திகதி (13/07/2022, புதன்) ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து பலவித செய்திகளும் கருத்துக்களும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இவற்றில் பல சட்டத்திற்கு அப்பாற்பட்ட கருத்துக்களாக இருக்கின்றன.

தெளிவுகள்
——————

ஜனாதிபதி ராஜினாமா செய்தால் பாராளுமன்றம் தனது ஒரு உறுப்பினரை தேர்தல்மூலம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யும். [அ. அமைப்பு சரத்து 40(1)]. (இத்தேர்தல் முறை தொடர்பாக வேறாகப் பார்ப்போம்)

இவ்வாறு தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதி பதில் ஜனாதிபதி அல்ல. அவர் மிகுதிக் காலத்திற்கான முழுமையான ஜனாதிபதியாகும். இத்தேர்தல் ஜனாதிபதிப் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டதன்பின் ஆனால் ஒரு மாதத்திற்கு பிந்தாத காலப்பகுதிக்குள் நடாத்தப்படுதல் வேண்டும்.

பதில் ஜனாதிபதி
————————-

ஜனாதிபதிப்பதவி வெற்றிடினமானதில் இருந்து புதிய ஜனாதிபதி பதவியேற்கும்வரை, பிரதமர் பதில் ஜனாதிபதியாக கடமையாற்றுவார்.

இங்கு புரிந்துகொள்ள வேண்டியது, பாராளுமன்றம் ஒருவரை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யும்வரை பிரதமர் தற்காகலிகமாக ஜனாதிபதியாகத் செயற்படுவதுதான் “பதில் ஜனாதிபதி” ஆகும்.

அடுத்தது;

இங்கு பதில் ஜனாதிபதி ‘ஒரு மாதகாலம்’ பதவி வகிப்பார்; என்று எங்குமில்லை. தேர்தல்தான் வெற்றிடம் ஏற்பட்டதில் இருந்து ஒரு மாதகாலத்திற்கு பிந்தாமல் நடாத்தப்படவேண்டும். புதிதாக ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுபவர் தெரிவுசெய்யப்பட்டதில் இருந்து இரண்டு வாரங்களுக்குள் பதவியேற்கலாம். அதுவரை பிரதமரே பதில் ஜனாதிபதி.

அது ஒரு மாதத்தைவிட சற்று அதிகமாகவும் இருக்கலாம். தேர்தல் நேரகாலத்தோடு நடந்து புதிய ஜனாதிபதியும் உடனடியாக பதவியேற்றால் ஒரு மாதத்திற்கு குறைவாகவும் இருக்கலாம். இந்த நுணுக்கத்தை எப்போதும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது; என்பதனால் நடைமுறையில் ( அண்ணளவாக) ஒரு மாதம் எனக்கூறப்படுவதுண்டு. அதற்காக 30 நாட்கள் எனக்கூறப்படுவது பிழை. சிலர் அவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.

பதில் ஜனாதிபதி பெரும்பான்மையை நிரூபித்தல்
———————————————————————-

பலர் அறியாத்தனமாக, பிரதமர் பதில் ஜனாதிபதியாகி தனது பெரும்பான்மை நிரூபித்தால் அவர் மிகுதிக்காலத்திற்கு ஜனாதிபதியாக இருப்பார்; எனக்குறிப்பிடுகிறார்கள். இதற்கு டி பி விஜேதுங்கவை உதாரணமாகவும் காட்டுகிறார்கள். இதுவும் பிழையாகும். “அவ்வாறு பெரும்பான்மையை நிரூபித்தல்” என்ற ஒன்றே இவ்விடயத்தில் இல்லை. பதில் ஜனாதிபதியும் தேர்தலில் போட்டியிடலாம். டீ பி விஜேதுங்கவும் அவ்வாறு போட்டியிட்டுத்தான் தெரிவுசெய்யப்பட்டார்.

தற்போதைய பிரதமர் ஒரு நாள்கூட ஜனாதிபதிக் கதிரையில் அமரக்கூடாது. அவர் ராஜினாமா செய்யவேண்டும்; என போராட்டக்காரர்களும் எதிர்க்கட்சிகளும் கோருகின்றன. அவ்வாறு பிரதமர் ராஜினாமா செய்தால் சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக செயற்படுவார்.

இன்னுமொரு பிழையான கருத்து: பிரதமர் பதில் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுதல்” என்ற ஒரு கருத்து இருக்கிறது. இங்கு பிரதமர் ஒருபோதும் பதில் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படுவதில்லை. இங்கு “தெரிவு” என்ற ஒன்று இல்லை. இங்கு பிரதமர் by operation of law, பதில் ஜனாதிபதியாக செயற்படுவார். அவர் பிரதம நீதியரசர் அல்லது ஓர் உயர்நீதிமன்ற நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவேண்டும்.

பிரதமர் ராஜினாமா செய்யாவிட்டால் நிலைமை என்ன?
————————————————————————

இங்கு இரண்டு விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

ஒன்று: ஜனாதிபதி ராஜினாமா செய்யும்போது பிரதமர் பதவியில் இருந்தால் அதன்பின் அவர் ராஜினாமா செய்யமுடியாது. ஏனெனில் பிரதமர் தனது பதவியை ஜனாதிபதிக்கு விலாசமிட்டுத்தான ராஜினாமா செய்யவேண்டும். ( சரத்து 47(2)(b)) இல்லாத ஜனாதிபதிக்கு எவ்வாறு விலாசமிடுவது? எவ்வாறு ராஜினாமாவை சமர்ப்பிப்பது?

இரண்டு: சரத்து 40(1)(c) இன் பிரகாரம் ஜனாதிபதிப்பதவி வெற்றிடமாகும்போது, இரண்டு சந்தர்ப்பங்களில்தான் சபாநாயகர் பதில் ஜனாதிபதியாகலாம்.

ஒன்று: அச்சமயத்தில் பிரதமர் பதவி வெற்றிடமாக இருந்தால் சபாநாயகர் பதில் ஜனாதிபதியாகலாம். பிரதமர் முன்கூட்டியே ராஜினாமா செய்யாவிட்டால் அந்நிலைமைக்கு இடம் இல்லை.

இரண்டு: பிரதமர் பதவியில் இருந்தால், பிரதமரால் “பதில் ஜனாதிபதியாக செயற்பட முடியாதபோது” சபநாயகர் பதில் ஜனாதிபதியாக செயற்படமுடியும்.
உண்மையில் “பிரதமரால் பதில் ஜனாதிபதியாக செயற்பட முடியாதபோது” என்ற சொற்பதம் ‘சுகயீனம்’ போன்ற விடயங்களுக்காக கொண்டுவரப்பட்டது. இந்த “ அழுத்தம்” போன்ற விடயங்களும் அதற்குள் வருமா? என்பது ஒவ்வொருவரின் வியாக்கியானத்தையும் பொறுத்தது.

எது எவ்வாறிருந்தபோதிலும் ‘பிரதமர் தன்னால் பதில் ஜனாதிபதியாக செயற்பட முடியாது; என்று தெரிவித்தால் சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக செயற்படலாம். ஆனால் பிரதமர் அவ்வாறு கூறாதபோது அவர்தான் பதில் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்வார். அதனைத் தடுக்க சட்டத்தில் ஏற்பாடுகள் இல்லை.

அமைச்சரவை கலையுமா?
—————————————-

பிரதமர் பதில் ஜனாதிபதியாவதால் அமைச்சரவை கலையாது. அவர் இன்னுமொரு அமைச்சரை ‘பதில்’ பிரதமராக நியமிக்க வேண்டும். எனவே, பிரதமர் பதில் ஜனாதிபதியானால் தற்போது அமைச்சராக இல்லாத ஒருவரை பதில் பிரதமராக நியமிக்க முடியாது; என்பது கவனத்திற்கொள்ளப்படல் வேண்டும்.

சர்வகட்சி அரசாங்கம் உடனடியாக சாத்தியமில்லை.
—————————————————

எனவே, இன்று பேசப்படுகின்ற சர்வகட்சி அரசாங்கம், அவர் ஜனாதிபதி, இவர் பிரதமர் என்பதெல்லாம் ஜனாதிபதி ராஜினாமா செய்ததும் நடைமுறைக்கு கொண்டுவரக்கூடியதல்ல.

முதலாவது பாராளுமன்றத்தில் ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற வேண்டும். அதில் இவர்களின் உடன்பாட்டை பெரும்பான்மையை வழங்குவதன்மூலம் செயற்படுத்தலாம். அவ்வாறு தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதி இவர்களின் உடன்பாட்டின்படி ஓர் பிரதமரை நியமிக்கலாம். ஆனால் ஜனாதிபதி ராஜினாமா செய்ததும் இந்தத் திட்டங்கள் எதையும் நடைமுறைக்கு கொண்டுவர முடியாது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :