- முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா பெருநாள் வாழ்த்துச் செய்தி-
மினுவாங்கொடை நிருபர்-
பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் நாடும் நாட்டு மக்களும் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், நோன்புப் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்து இஸ்லாமிய உள்ளங்களுக்கும் புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. மத்திய கொழும்பு அமைப்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
பொருளாதார நெருக்கடியில் அவதியுற்றுக் கொண்டிருக்கும் நிலையில், மக்கள் இன்றைய நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர். பொருளாதார நெருக்கடி விரைவில் எம்மை விட்டும் அகழ, எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இரு கரமேந்தி இன்றைய நாளில் பிரார்த்திப்போமாக.
கடந்த 2019 இல் ஈஸ்டர் தாக்குதலுடன் வந்த நோன்புப் பெருநாளை மிகவும் மன உளைச்சலோடு கழித்தோம். அதனையடுத்து, 2020 மற்றும் 2021 ஆகிய வருடங்களில் வந்த புனித நோன்புப் பெருநாளை கொவிட் - 19 தொற்று ஏற்பட்ட காலகட்டத்தில் கழித்தோம்.
அதற்கு மாற்றமாக, இவ்வருட (2022) நோன்புப் பெருநாளை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கழித்துக் கொண்டிருக்கின்றோம். இவைகள் அனைத்தும், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கும் என்பதை மனதில் நிறுத்தி, மிகப் பொறுமையுடன் புனித நோன்புப் பெருநாளைக் கழிப்பதே, இன்றைய நாளில் நாம் மேற்கொள்ளும் மிகச் சிறந்த செயலாகும்.
புனித ரமழான் மாதத்தில் முப்பது நாட்கள் நோன்பு நோற்ற நாம், இருப்பதைக் கொண்டு இன்றைய நாளில் போதுமாக்கிக் கொள்ள உறுதி பூணவேண்டும். அத்துடன், இருப்பவர்கள் இன்றைய தினத்தில் இல்லாதோருக்கு இயன்றளவு உதவி ஒத்தாசைகளை வழங்க முன்வர வேண்டும். இது, இத்தருணத்தில் அல்லாஹ்வை சந்தோஷப்படுத்தக் கூடியதொன்றாக அமைந்துவிடும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
எனவே, அல்லாஹ்வுக்காக பொறுமை காத்து, புனித நோன்புப் பெருநாளை இல்லாதோர் இருப்போர் அனைவரும் கொண்டாடி மகிழ வேண்டும்.
புனித ரமழானின் மகிமையைக் கொண்டு, ஏழை எளியோர், தொழிலாளர், பணக்கார வர்க்கத்தினர் அனைவரினது சகல செயற்பாடுகளும் மேன்மை பெற்று சிறப்புற வேண்டும் என, இன்றைய நன்நாளில் பிரார்த்திக்கின்றேன்.
நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும், மிக விரைவில் நம்மை விட்டு அகழவும், இதன் மூலம் அனைத்து மக்களும் நிம்மதி, சந்தோஷம் மற்றும் சுபீட்சம் அடையவும், நாட்டில் இருள் அகன்று மீண்டும் ஒளி பிறக்கவும், இன்றைய புனித நோன்புப் பெருநாள் நன்நாளில் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இரு கரமேந்திப் பிரார்த்திப்போமாக! ஆமீன்...!
0 comments :
Post a Comment