மகாநாயக்க தேரர்களால், கூட்டு சங்க பிரகடனமொன்று வெளியிடப்படும் என எச்சரிக்கை!



ஆர்.சனத்-

'20' இற்கு முடிவு கட்டவும்! மகாநாயக்க தேரர்கள் கூட்டாக வலியுறுத்து.

புதிய அமைச்சரவையை ஏற்கவும் மறுப்பு.

'21' குறித்து ஆராயும் விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று.

நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கத்துக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவித்து, அரசியல் நெருக்கடிக்கு வழிவகுத்துள்ள அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் கூட்டறிக்கை ஊடாக நேற்று வலியுறுத்தியுள்ளனர்.
 
19 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த சிறப்பம்சங்களை உள்ளடக்கிய வகையில் அரசமைப்பு மறுசீரமைப்பை மேற்கொள்ள மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மகாநாயக்க தேரர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
 
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு, அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்தி, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வைக் காண நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், மகாநாயக்க தேரர்களால், கூட்டு சங்க பிரகடனமொன்று வெளியிடப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி நிலைமையைக் கருத்திற்கொண்டு, இவற்றுக்கு தீர்வைக்காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, யோசனைகளையும் முன்வைத்து மகாநாயக்க தேரர்களால் நேற்று கூட்டறிக்கையொன்று வெளியிடப்பட்டது.
 
ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் குறித்த கூட்டறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
 
அஸ்கிரிய , மல்வத்த, அமரபுர மற்றும் ராமான்ய ஆகிய பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களால் வெளியிடப்படும் கூட்டறிக்கை தெற்கு அரசியலில் பெரும் தாக்கத்தை செலுத்தக்கூடியது.

ஆட்சியாளர்களால் அவ்வளவு எளிதில் தட்டிகழித்துவிடவும் முடியாது. எனவே, கூட்டு சங்க பிரடகனமொன்றை வெளியிட அவர்கள் எடுத்துள்ள முடிவு தற்போதைய நெருக்கடி சூழ்நிலையில் முக்கியத்துவம்மிக்கதாக கருதப்படுகின்றது.

புதிய அமைச்சரவை நியமனம் பிரச்சினைக்கு தீர்வு அல்லவெனவும் சுட்டிக்காட்டியுள்ள மகாநாயக்க தேரர்கள், கடந்த 4 ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தாமை தொடர்பில் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர்.
 " நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இந்நிலைமைக்கு இந்நாட்டை ஆட்சிசெய்த அனைத்து அரசுகளும் பொறுப்புக்கூறவேண்டும்.” - எனவும் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கூட்டறிக்கை தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கு நேற்று ஊடக சந்திப்பொன்றும் மேற்படி மகா சங்கத்தினரால் நடத்தப்பட்டது. இதன்போது கருத்து வெளியிட்ட ஓமல்பே சோபித தேர (ராமான்ய நிகாய),
“ பிரதமர் உள்ளடங்கலான அமைச்சரவை நீக்கப்பட வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் கோரினர். அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
 
புதிய அமைச்சரவையை மகாசங்கத்தினர் ஏற்கவில்லை. எனவே, ஆசிர்வாதம் பெறுவதற்கு விகாரைகளுக்கு வரவேண்டாம் என கூறிவைக்க விரும்புகின்றோம். “ - என்றார்.
 
" நாட்டு மக்களுக்கான தீர்மானத்தை அரசு எடுக்காவிட்டால், அரசுக்கு எதிராக மகா சங்கத்தினரும் அணி திரள்வார்கள்." என்ற எச்சரிக்கையும் இதன்போது விடுக்கப்பட்டது.

அதேவேளை, அரசமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக சபாநாயகர் தலைமையில் இன்று (21) விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இடம்பெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியும் '21' தொடர்பில் தமது யோசனையை முன்வைக்கவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :