இன, மத, குல பேதங்களுக்கு அப்பால் ஆளும் அரசுக்கு எதிராகவும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் காலிமுகத்திடலில் முகாமிட்டிருக்கும் பொது மக்களின் போராட்டத்திற்கான தீர்வு தாமதமாதல் மிகப்பெரும் ஆபத்தாக மாறலாம் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம் மஹ்தி அச்சம் வெளியிட்டுள்ளார்.
இன்று(15) வெள்ளிக்கிழமை அவரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, ஊழல் மோசடிகளுக்கு எதிராக எதிர்க் கட்சிகளால் நடாத்தப் பட்ட போராட்டங்கள் நலிவடைந்திருக்கும் தருணத்தில் இன,மத, கட்சி பேதங்களுக்கு அப்பால் பொது மக்களால் அணி திரண்டு நடாத்தப் படும் போராட்டம் மேலும் வலுப் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இப்போராட்டத்தை நலிவடையச் செய்ய எத்தனிக்கும் ஒரு நாசகாரக் கூட்டம் ஒற்றுமைப் பட்டிருக்கும் மக்களிடத்தில் இன, மத வாதங்களை தூண்டுகின்ற படு மோசமான செயற்பாடுகளை மீண்டும் கையில் எடுக்கின்றனர்.
காலிமுகத் திடல் போராட்டமானது மாவட்ட, பிரதேச ரீதியாக விரிவு படுத்தப் படலாம் என எதிர்பார்க்கப் படும் அதேநேரம் அரசியல் கட்சிகளும் தங்களது அரசுக்கெதிரான போராட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க தயாராகின்றனர்.
பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இத்தருணத்தில் போராட்டக் காரர்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு எட்டப்படா விட்டால் போராட்டங்களின் விளைவு மேலும் பொருளாதார ரீதியான நட்டங்களையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தலாம் எனவும் தனது அச்சத்தை வெளியிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment