சாய்ந்தமருது கிரிக்கட் சம்மேளனம் ஒழுங்கு செய்து நடாத்திய 15 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடின பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் இன்று (17) சாய்ந்தமருது பொலிவேரியன் பொதுவிளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளையும் சேரந்த 32 விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்ற இந்த சுற்றுப் போட்டி கடந்த 6 மாத காலமாக இடம்பெற்று வந்தநிலையில் இந்த சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக் கழகத்திற்கும் சம்மாந்துறை விளையாட்டுக் கழகத்திற்கும் இடையில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சம்மாந்துறை விளையாட்டு கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 15 ஓவர்கள் முடிவில் 03 விக்கட்டுக்களை மட்டுமே இழந்து 151 ஓட்டங்களை பெற்றது. இதில் அதிரடியாக களமிறங்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் முஹம்மத் இஸ்மத் 33 பந்துகளில் 65 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பதிலுக்கு 152 ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டு கழகம் ஆரம்பம் முதல் தடுமாறிவந்த நிலையில் நான்காம் விக்கட்டுக்கான இணைப்பாட்டத்தின் போராட்டத்தின் காரணமாக 05 விக்கட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களை மட்டுமே பெற்றனர். சாய்ந்தமருது பிளாஸ்டர் வி.கழகம் சார்பில் மின்ஹாஜ் 52 ஓட்டங்களை பெற்றார். இதனடிப்படையில் சம்மாந்துறை வி.கழகம் 31 ஓட்டங்களினால் சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. இறுதியாட்டத்தின் ஆட்டநாயகனாகவும், தொடராட்டகாரராகவும் சம்மாந்துறை வி.கழக வீரர் முஹம்மத் இஸ்மத் தெரிவு செய்யப்பட்டார்.
சாய்ந்தமருது கிரிக்கட் சம்மேளனத்தின் தவிசாளர் ஹக்கீம் சரிப் தலைமையிலும் தலைவர் ரீ.கே.எம்.ஜலீல் மற்றும் செயலாளர் இல்யாஸ் அஸீஸ் ஆகியோரின் நெறிப்படுத்தலிலும் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்விற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதேச முக்கியஸ்தர் றிஸ்லி முஸ்தபா பிரதம அதிதியாகவும், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் , கல்முனை மாநகரசபை பிரதி மேயர் றஹ்மத் மன்சூர் , ஜே. எம்.எச். வைத்தியசாலை நிர்வாகி டாக்டர் முனீர், டவுன் ரெவல்ஸ் முகாமைத்து பணிப்பாளர் ஏ.ஜே.எம்.ஜலீல் , அல் அமானா நற்பணி மன்ற தலைவர் ஏ.எல்.எம்.பரீட் , றபீக் கென்ஸ்ரெக்ஸன் பணிப்பாளர் யு.எல்.றபீக் , டெலிகொம் பொறியியலாளர் எஸ்.எம். ஹலீம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் , அம்பாறை மாவட்ட கிறிக்கட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் சிதத் லியனாராய்ச்சி சொர்ணம் நகை மாளிகை பணிப்பாளர் ஜீ.குணபாலசந்திரன் சார்பில் அஹமட் லெப்பை, சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம். ஸைபுதின், ப்ரவுன் வூட் நிறுவன தலைவர் எம்.எச்.நாசர், ஆகியோர் விசேட அதிதிகளாகவும், மேலும் விளம்பரதாரர்கள், அனுசரணையாளர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள், விளையாட்டு கழகங்களின் நிர்வாகிகள், சாய்ந்தமருது விளையாட்டு கழகங்களின் சங்க நிர்வாகிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற கழகத்திற்கு 25,000 ரூபா பணப்பரிசும் , சம்பியன் கிண்ணமும் , 2வது இடம்பெற்ற கழகத்திற்கு 15,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டதுடன் சர்வதேச அளவில் சாதனை புரிந்த நால்வர் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
0 comments :
Post a Comment