- நமது மக்களின் வெற்றி என்கிறார் தமுகூ தலைவர் தலைவர் மனோ கணேசன்
தேர்தல் ஆணைக்குழுவினால், தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. “டோர்ச் லைட்” என்ற மின்சூள் சின்னம் கூட்டணியின் அதிகாரபூர்வ சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதத்தை தேர்தல் ஆணைக்குழு ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா, தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளர் சந்திரா சாப்டருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுபற்றி கூட்டணி தலைவர் மனோ எம்பி ஊடகங்களுக்கு கூறியுள்ளதாவது,
2015 வருடம் ஜூன் 3ம் திகதி கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில், ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சி தலைவர்களால் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று ஆறு ஆண்டுகளை கடந்த நிலையில், இடையில் இரண்டு பாராளுமன்ற தேர்தல்கள், ஒரு ஜனாதிபதி தேர்தல், ஒரு உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆகியவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு இந்நாட்டின் தேசிய அரங்கில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் இயக்கமாக வளர்ந்து, இன்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவினால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளோம்.
தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள், தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் கட்சிகள், தேசிய அரங்கில் ஒன்றுசேர வேண்டும் என்ற பேரவா இன்று தமிழ் முஸ்லிம் மக்கள் மனங்களில் ஆழமாக வேரூன்றி இருப்பதை நானறிவேன். எமது மக்களின் இந்த மன உணர்வுக்கு உயிர் கொடுத்து முழு நாட்டுக்கும் முன்மாதிரியாக நாம் இன்று நிற்கிறோம்.
“ஒற்றுமை நிலைக்க வேண்டும்” என எதிர்பார்த்த பெருந்திரள் மக்கள் மத்தியில், இது “தேர்தல் வரையிலான உறவு”, ஆகவே தேர்தல்கள் முடிந்த பின் உடைந்து விடும், உடைய வேண்டும் என்று எதிர்பார்த்த வினோதமானவர்களும் நம் மத்தியில் இருந்தார்கள். இருக்கிறார்கள். அவர்களை நாம் இன்று ஏமாற்றி இருக்கிறோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
ஆகவே, கட்சிகள் “ஒன்றுசேர வேண்டும், ஒன்றுசேர வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்படும், அதேவேளை இன்று ஒன்றுபட்டு நின்று, பல சவால்களுக்கு மத்தியில் ஆறு ஆண்டுகளை கடந்து, எம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு துயருடன் விடை கொடுத்து விட்டு, புதியவர்களை உள்வாங்கி, எமது தேசிய பயணத்தை மாத்திரம் நிறுத்தி விடாமல் பயணித்து, இன்று அதிகாரபூர்வ பதிவையும், தமிழ் முற்போக்கு கூட்டணி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு பின்னால் எங்கள் ஒவ்வொருவரினதும் கடும் உழைப்பு, நேர்மை, துணிச்சல், தூரப்பார்வை, நிதானம், இன உணர்வு ஆகியவை இருக்கின்றன.
எங்கள் மின்சூள் சின்னம், நாடு முழுக்க இருளை அகற்றி, ஒளி பாய்ச்சும் இயக்கமாக இன்னமும் முன்னேற்றம் பெற, அனைத்து உடன்பிறப்புகளினதும், இரத்தத்தின் இரத்தங்களினதும் வாழ்த்துகளையும், ஆதரவுகளையும் எதிர்பார்க்கிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
0 comments :
Post a Comment