மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காணிகளை காணவில்லை : பாராளுமன்றில் புள்ளிவிபரங்களை முன் வைத்து நீதி கேட்டார் ஹாபிஸ் நசீர் எம்.பி !



நூருல் ஹுதா உமர்-
1992 இல் காத்தான்குடி நகருக்கு 9.96 சதுர கிலோமீட்டரை காணிப்பரப்பளவாக காட்டப்பட்டுள்ளது. ஆனால் 2015 இல் 6.6 சதுர கிலோமீட்டரே காட்டப்பட்டுள்ளது. மீண்டும் 2020 இல் 6 சதுர கிலோமீட்டராகவும் காட்டப்பட்டுள்ளது. மட்டுமின்றி ஏறாவூர் நகர எல்லை 1992 இல் 3.74 சதுர கிலோமீட்டரும், 2015 இல் 2.86 சதுர கிலோமீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. 1992 இல் கோறளைப்பற்று மேற்கு அதாவது ஓட்டமாவடி 176 சதுர கிலோமீட்டராக இருந்து 2015 இல் வெறும் 17 சதுர கிலோமீட்டராக குறைவடைந்துள்ளது. பின்னர் வந்த நல்லாட்சியில் 31 சதுர கிலோமீட்டராக மாற்றப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட கோறளைப்பற்று மத்தி 2001 இல் 240 சதுர கிலோமீட்டராக இருந்து 2006 இல் 148 சதுர கிலோமீட்டராக அடையாளப்படுத்தப்பட்டு 2013 இல் 80 சதுர கிலோமீட்டராக மாற்றப்பட்டு 2015 இல் 7.78 சதுர கிலோமீட்டராக காட்டப்பட்டுள்ளது. கடந்த நல்லாட்சி காலத்தில் 6 சதுர கிலோமீட்டராக அரசாங்க அதிபர் காரியாலயத்தினால் காட்டப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பார்த்தால் 24.9 சதவீதம் வாழும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கு 1.30 சதவீத காணிகள் தான் வழங்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினருமான எந்திரி அல்ஹாபிழ் இஸட்.ஏ. நஸீர் அஹமட் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் தெரிவித்தார்.

தனிநபர் பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய அவர், தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் மட்டுமாவட்ட நிர்வாக கட்டமைப்பு 1992 ஆம் ஆண்டு அரச சேவையை பொதுமக்கள் இலகுவாக பெரும் நோக்குடன் எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் அப்போது இருந்த 12 உள்ளுராட்சி மன்றங்களை அடிப்படையாக கொண்டு 12 பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டம் ஏறத்தாழ 2854 சதுர பரப்பளவு கொண்டது. அதில் நிலப்பரப்பளவு அண்ணளவாக 2640 சதுர பரப்பளவு கொண்டது. 1992 ஆண்டைய புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தமிழ் மக்கள் 73.3 சதவீதமும் 24.9 சதவீதமும் ஏனையோர் 1.8 சதவீதமும் இருந்தனர்.

உருவாக்கப்பட்ட பிரதேச செயலகங்களில் 09 தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட பிரதேச செயலகங்களாகவும் ஏனைய 03 பிரதேச செயலகங்களும் முஸ்லிங்களை பெரும்பான்மையாக கொண்ட பிரதேச செயலகங்களாகவும் அமைந்திருந்தது. அதன் போது காத்தான்குடி நகருக்கு 9.96 சதுர கிலோமீட்டரை பரப்பளவாக கொண்டு காணியெல்லை வழங்கப்பட்டது. ஏறாவூர் நகர எல்லைக்கு 3.74 சதுர கிலோமீட்டரும், கோறளைப்பற்று மேற்கு அதாவது ஓட்டமாவடிக்கு 176 சதுர கிலோமீட்டரும் வழங்கப்பட்டது. இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணிப்பகிர்வானது தமிழ் பிரதேசங்களுக்கு 2449 (92.6 சத வீதம்) சதுர கிலோமீட்டரும், முஸ்லிம் பிரதேசங்களுக்கு 189.7 (7.4 சத வீதம்) சதுர கிலோமீட்டரும் வழங்கப்பட்டிருந்தது. இதனால் புலிகளின் கெடுபுடியினாலும் ஏனைய பல காரங்களினாலும் நிர்வாக ரீதியாக முஸ்லிங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

1999 ஜூன் 03ம் திகதி முன்னாள் உள்ளுராட்சி அமைச்சர் ரத்னஸ்ரீ விக்ரமநாயக்க அவர்களின் காலத்தில் பலம்பலான ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரினால் அமைக்கப்பட்டது. மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஸ்ரப் மரணிக்க 02 மாதங்களுக்கு முன்னர் அந்த எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை 2000 ஜூலை 13ம் திகதி அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு அஸ்ரப் அமைச்சரவையில் இருக்கும் போதே அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. இந்த பலம்பலான ஆணைக்குழு 06 மாவட்டங்களில் 08 பிரதேச செயலகங்களையும், 02 கிராம சேவகர் பிரிவுகளையும் அமைக்க சிபாரிசு செய்தது. அதில் மட்டக்களப்பில் பரிந்துரைக்கப்பட்ட கோறளைப்பற்று மத்தி மற்றும் கோறளைப்பற்று தெற்கு ஆகிய பிரதேச செயலகங்களை தவிர ஏனைய 06 செயலகங்களும் வர்த்தமானியில் அறிவிப்பு செய்யப்பட்டது. மட்டு மாவட்ட நிர்வாக பயங்கரவாதத்தினாலும், எங்களின் அரசியல் தலைமைகளின் இயலாமையினாலும் எங்களின் பிரதேச செயலகங்கள் வர்த்தமானி அறிவிப்பு செய்யப்படவில்லை.

அந்த ஆணைக்குழுவின் சிபாரிசின் படி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் 11 கிராம நிலதாரி பிரிவுகளையும், 240 சதுர கிலோமீட்டர் பரப்பளவுகளையும் கொண்டது. கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகம் 18 கிராம நிலதாரி பிரிவுகளையும், 686 சதுர கிலோமீட்டர் பரப்பளவுகளையும் கொண்டதாக அமைந்திருந்தது. கிரான் பிரதேச செயலகம் அமைந்த போது 05 கிராம நிலதாரி பிரிவுகள் ஓட்டமாவடி பிரதேசத்திலிருந்து எடுக்கப்பட்டதுடன் கோறளைப்பற்று பிரதேசத்திலிருந்து 13 கிராம நிலதாரி பிரிவுகள் எடுக்கப்பட்டே அமைக்கப்பட்டது. கோறளைப்பற்று மத்தியும் அவ்வாரே முறைகேடான முறையில் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த அடிப்படையிலையே 2002- 2005 ஆம் ஆண்டுவரைக்குமான வாக்காளர் பதிவேடுகளும் பதியப்பட்டு வந்துள்ளன. ஆனால் 2006 இல் சட்டவிரோதமாகவும் கபடத்தனமாகவும் மட்டு அரசாங்க அதிபர் காரியாலயத்தினால் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது. அதற்கான அதிகாரத்தை அவர்களுக்கு கொடுத்தது யார்? மட்டு அரசாங்க அதிபர் காரியாலயத்தினால் வருடாந்தம் வெளியிடப்படும் புள்ளிவிபர புத்தகத்தில் இந்த விடயங்கள் தெளிவாக உள்ளது. மத்தியரசின் எந்த அங்கீகாரமுமின்றி விரும்பியவாறு மாற்றங்களை செய்துள்ளார்கள்.

இந்த அநீதிக்கான நியாயத்தை கோரி மக்கள் சார்பில் கேட்கிறேன். இந்த அநியாயத்தை அமைச்சர் தலையிட்டு நிபர்த்தி செய்து தர வேண்டும். ஆணைக்குழுவொன்றை அமைத்து சட்டவிரோதமாக செய்யப்பட்ட இந்த விடயங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும். காணியில்லாமல் கஷ்டப்படும் எங்கள் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :