பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகள் தொடர்பில் பனபலம எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் விதந்துரையை வர்த்தமானியில் பிரசுரித்து நடைமுறைப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் முன்வராமல் இருப்பது, சட்ட விரோதமானதும், பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்குவதுமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் செவ்வாய்கிழமை (30) உரையாற்றும் போது குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த விவாதத்தை செவிமடுப்பதற்காக அமைச்சர் சமல் ராஜபக்ஷ வருகை தந்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
2000ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய நியமிக்கப்பட்ட பனபலம ஆணைக்குழு, பிரதேச செயலாளர் அலுவலக எல்லைகளை நிர்ணயிப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் இரண்டு பிரதேச செயலக பிரிவுகள் தொடர்பில் செய்த விதந்துரைகளை மாவட்டத்தின் உயரதிகாரிகள் நடைமுறைப்படுத்தாதிருப்பதால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலேயே எங்களது கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இந்த ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையைக் கோரி இருந்தனர்.
பிரஸ்தாப பனபலம ஆணைக்குழு கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் அலுவலகத்தின் கீழ் 18 சேவகர் பிரிவுகளையும் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் அலுவலகத்தின் கீழ் 11 கிராம சேவகர் பிரிவுகளையும் எல்லை நிர்ணயம் செய்து சிபாரிசு செய்திருக்கத்தக்கதாக, மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அதனை வர்த்தமானியில் பிரசுரித்து நடைமுறைப்படுத்த முன்வராததையிட்டு இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அது சட்டபூர்வமானதல்ல.
பனபலம் ஆணைக்குழு பரிந்துரைத்தவாறு வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நிலத் தொடர்பற்ற வகையில் எவ்வித சம்பந்தமும் இல்லாமல் இன்று சில கிராம சேவகர் பிரிவுகளை சில பிரதேச செயலகங்கள் நிர்வகித்து வருகின்றன. ஆனால், சட்டத்திற்கு முரணாக , அதிலும் குறிப்பாக, ஏற்கனவே அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிட்ட பிரகாரம் இந்த கிராம சேவகர் பிரிவுகளின் எல்லைகளும், பிரதேச செயலகத்திற்குரிய நிலப்பரப்பும் சரியாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டு அந்த எல்லைகள் நிர்ணயிக்கப்படாதிருக்கும் சூழலில், இன்று கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் எல்லைகள் சம்பந்தமாகப் பாரிய பிரச்சினைகள் உருவாகியிருக்கின்றன.
குறிப்பாக, வாழைச்சேனை ஏ38 வீதியை கிழக்கு திசையாகக் கொண்டு ஏழு கிராம சேவகர் பிரிவுகளை கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு இவ் ஆணைக்குழு பரிந்துரை செய்தது. அதற்கு மேலதிகமாக மேலும் நான்கு கிராம சேவகர் பிரிவுகளும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. வாழைச்சேனை 206, 206பி, 206டீ, பிறந்துறைச்சேனை 206ஏ, பிறந்துறைச்சேனை 206சீ, மாவடிச்சேனை 208ஏ, செம்மண்ணோடை 208டீ போன்றவை அவையாகும்.
அதேபோன்று கோரளைப்பற்று மேற்கு பிரதேசத்தின் கீழ் இருந்த 210சி கிராம சேவகர் பிரிவை கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு அந்த ஆணைக்குழு பரிந்துரை செய்தது. கோரளைப்பற்று வடக்கு பிரதேசத்தில் இருந்த கிராம சேவகர் பிரிவுகள் பின்வருமாறு மறுசீரமைக்கப்பட்டு கோரளைப்பற்று மத்தி செயலகத்துடன் இணைக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டது. அதாவது, புணானை கிழக்கு 211பி, ரிதீதென்ன 211எச், காரமுனை 211ஜி2, என்ற மேற்படி 11கிராம சேவகர் பிரிவுகளில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகளை கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தில் புதிதாக உருவாக்கப்பட வேண்டும் என ரிதீதென்ன 211எச், காரமுனை 211ஜி2 என அந்த ஆணைக்குழு சிபாரிசு செய்திருந்தது.
ஆனால், அதற்குப் புறம்பாக இன்று என்ன நடக்கிறது என்றால், புணானை கிழக்கு 211பி கிராம சேவகர் பிரிவுக்குள் வருகின்ற ஒரு பகுதியான ரிதிதென்ன, ஜெயந்தியாய கிராமங்கள் தற்காலிகமாக நிலத் தொடர்பற்ற ரீதியில் கோரளைப்பற்று மத்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், முழு கிராம சேவகர் பிரிவும் உள்வாங்கப்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கையாகவுள்ளது.
அதேபோன்று, கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற ஏனைய கிராமங்கள் கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தினால் 211 பி கிராம சேவை பிரிவு என்று நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. ஒரு கிராம சேவகர் பிரிவு இரண்டு கிராம சேவகர்களால் நிர்வாகிக்கப்பட்டு வருகின்றது. குறித்த கிராம சேவகர் பிரிவு கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு ஆணைக்குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டதாக இருந்தாலும், அதற்கு புறம்பாக, இவ்வாறு குழப்பமான முறையில் இன்று நிர்வாகம் நடந்து கொண்டி ருக்கின்றது.
தியாவட்டுவாண் பிரதேசத்தை எடுத்துக்கொண்டால், அந்த பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு வந்துவிட்டுப் போகலாம். ஆனால், அம்மக்களுடைய நிர்வாக வேலைகளை முடித்துக்கொள்வதற்காக , கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்திற்கு 30,40 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து செல்ல வேண்டிய இக்கட்டான நிலைமையை அந்த மக்கள் சந்திக்கின்றனர். இப்படி தேவையற்ற விதத்தில் மக்களை குழப்பியடிக்கின்ற நிலையில் இந்த எல்லை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது.
இதே பிரச்சினை ஏறாவூர் பிரதேசத்திலும் இருக்கின்றது. ஏறாவூர் பிரதேச செயலக பிரிவில் மிச்சி நகர், மீராகேணி, ஐயங்கேணி ஆகிய பிரதேசங்கள் ஏறாவூர் நகர செயலகத்தோடு அண்மித்திருக்கின்ற நிலையில் அதனோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டியதற்கு மாறாக, ஏறாவூர் பிரதேச செயலகத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் பிரதேச செயலகம் என்பது சாமான்யமானதொரு சிறு பிரதேசம் அல்ல. ஏறாவூர் நகர பிரதேசத்திற்குள் இருப்பது3.745 சதுர கிலோமீட்டர் மாத்திரம் தான். ஆனால், ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு வந்தாறுமூளையிலிருந்து பெரிய புல்லுமலை வரை கொம்மாந்துறை இருப்பறிச்சேனை, கரடியனாறு ஆகிய மிகப் பெரிய நிலப்பரப்பை அதாவது ஏறத்தாழ 900சதுர கிலோமீட்டரை உள்ளடக்கிய ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகத்திற்கு 4 கிராம சேவகர் பிரிவுகளின் தேவை இருக்கின்ற இப் பிரதேசத்திற்கு தற்போது வெறுமனே 3 கிராம சேவகர் பிரிவுகள் மாத்திரமே இருக்கின்றன. இந்தப் பிரதேசங்கள் இணைக்கப்பட்டால் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்திற்கு இன்று இருக்கின்ற 3.745 சதுர கிலோமீட்டர் 9.5 சதுரகிலோமீட்டராக மாறும்.
எனவே, கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு 240 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு சேர்க்கப்பட வேண்டுமென ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்த வேளையில், அதற்கு இடம் கொடுக்காமல் ஏறத்தாழ 680 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்திற்குள்ள அனைத்து அனுமதியையும் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாகம் வழங்கியிருக்கின்றது. அது தான் விசித்திரமான விடயமாகவுள்ளது.
ஒரு மாவட்ட நிர்வாகம் இரண்டு பிரதேச செயலகங்களுக்கு வித்தியாசமான முறையில் தன்னுடைய நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற விடயத்தில் பாரபட்சத்தோடு நடந்துகொள்கின்றார்கள். ஆணைக்குழுவால் பரிந்துரை செய்யப்பட்டது போல இரண்டு பிரதேச செயலகத்திற்கும் வர்த்தமானியை பிரசுரிப்பதில் தாமதம் ஏற்பட்டு பிரச்சினை இருந்தாலும், அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளவாறு ஏன் இந்த கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலக்திற்குரிய 240 சதுரகிலோமீட்டரை நிர்வகிப்பது போன்று கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்திற்கு ஏன் அனுமதிக்கக் கூடாது?
உத்தியோகபூர்வமாகப் பிரசுரிக்கின்ற ஆவணங்களில் ஏன் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்திற்கு அனுமதியை கொடுக்க வேண்டும்? என்ற பாரபட்சம் சம்பந்தமாக இந்த விடயம் தொடர்பான அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அது மாத்திரமல்ல, இந்த பிரதேசங்களில் தேவையற்ற இன ரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதற்கு சில அரசியல்வாதிகள் காரணமாக இருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய விடயமாகவுள்ளது.
வாழைச்சேனையில் நீதிமன்ற கட்டடமொன்று அமைப்பது சம்பந்தமாக அனைத்து நடவடிக்கைகளையும் நீதிமன்றங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் மேற்கொண்ட பிறகு அதையும் வேறு பிரதேசத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று அடம் பிடிப்பதும், அதேவேளை வாழைச்சேனை வைத்தியசாலையில் இருக்கின்ற பிறப்பு, இறப்பு பதிவாளரை மாற்றி, அவருக்கு பதிலாக இன்னொருவரைக் கொண்டு அவரது கருமங்களைச் செய்யும் விதத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ஒரே மொழி பேசுகின்ற இரு சமூகங்களுக்கிடையில் தேவையற்ற பாகுபாடு காட்டி பிரச்சினைகளை ஏற்படுத்துகின்ற முயற்சி மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
அண்மையில் புணானை கிழக்கு பிரதேசத்தில் பெரும்பான்மையின மக்கள் பலவந்தமாக குடியமர்த்தப்படப் போகின்றார்கள் என்பதை அறிந்து பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உட்பட மேலும் சில உறுப்பினர்கள் தலையிட்டு முஸ்லிம்களோடு சேர்ந்து தமிழ் மக்களும் ஆர்பாட்டம் செய்தார்கள். இதன் பிற்பாடு பலவந்தமான குடியேற்றம் நிறுத்தப்பட்டது.
தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக சில விடயங்களுக்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு அவற்றைச் சாதிக்கின்ற அதேவேளை, இவ்வாறான நிர்வாக விடயங்களில் பாகுபாட்டை ஏற்படுத்தி ஏன் மனக் கசப்புகளைத் தோற்றுவிக்க மாவட்டத்தின் அரச நிர்வாகிகள் முற்படுகின்றனர் என்பதை இவ்விடயம் தொடர்பான அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்று ஆணைக்குழு பரிந்துரை செய்த விதத்தில் வர்த்தமானி வெளியிடப்பட வேண்டும். அது மாத்திரமல்ல, இதனை தனி சமூகத்திற்குரிய பிரச்சினையாக நோக்காமல், சகல சமூகங்களும் வாழ்கின்ற பிரதேசங்களாகவே கோரளைப்பற்று மத்தி அமைய வேண்டும் என்பதே எங்களுடைய அவாவாகஇருக்கின்றது என்றார்.
0 comments :
Post a Comment