சாய்ந்தமருது நகரசபையை வைத்து வாக்குப் பெற நினைப்பது இனிமேல் வெறும் கனவாக மட்டுமே அமையும் : பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர் ஏ.எல்.எம். சலீம்.



நூருல் ஹுதா உமர்-
சாய்ந்தமருது நகர சபை கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு கடந்த காலங்களில் பல தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. நகர சபைக்கு வாக்களித்த எமது மக்கள் பலமுறை முஸ்லிம் அரசியல் தலைமைகளால் ஏமாற்றப்பட்ட வரலாறுகள் இன்றும் ஆறாக் காயங்களாக இருக்கின்றன. குறிப்பாக, 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல், 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத்தில் நடைபெற்ற பாாளுமன்றத் தேர்தல், 2018ஆம் ஆண்டில் பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல், 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல், 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் என்று பல தேர்தல்களை கடந்து செல்லும் எமது நகர சபை கோரிக்கை மற்றுமொரு தேர்தலுக்கு எப்படியும் ஒரு பேசு பொருளாக வரமுடியாது என்ற ஒருமித்த நிலைப்பாட்டில் எமது மக்கள் அனைவரும் இருக்கின்றனர் என தேசிய காங்கிரசின் கடந்த பொதுத்தேர்தல் வேட்பாளரும் சிரேஷ்ட இலங்கை நிர்வாக சேவை அதிகாரியுமான, பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர் ஏ.எல்.எம். சலீம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்,

2014ஆம் ஆண்டு முதல் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல அரசியல் வாதிகளால் ஏமாற்றப்பட்ட சாய்ந்தமருது மக்கள், சாய்ந்தமருது ஜும்மாபள்ளிவாசல் தலைவர் வை எம் ஹனீபாவின் தலைமையில் 2017ஆம் ஆண்டு ஒக்டோபர், நவம்பரில் போராட்டம் நடத்தி ஒன்றுபட்டு , 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் பெற்ற ஜனநாயக ரீதியான வெற்றியானது இப்பிரதேச அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க படிப்பினையை ஏமாற்றிய அனைவருக்கும் ஏற்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக எம்மை ஏமாற்றிய அனைவரையும் புறந்தள்ளி, 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றுமொரு பாரிய படிப்பினையாகும்.

இத்தேர்தலில், பிரதம மந்திரி, நிதி அமைச்சர் ஆகிய இருவரும் எமது பிரதேசத்தில் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் இன்றைய ஜனாதிபதியை ஆதரித்து வெற்றி பெற்றதன் விளைவாக, 2020ஆம் ஆண்டில் சாய்ந்தமருது நகர சபைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. இதன் மூலம் இவ்வாட்சியில் வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது. தேசிய காங்கிரசின் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுன்ற உறுப்பினருமான ஏ.எல். எம். அதாஉல்லா இவ்வர்த்தமானி வெளியிடுவதற்கு காரணமாக இருந்தார். இதற்கு முன்னோடியாக கடந்த 2020 பெப்ரவரி மாதம் பிரதம மந்திரியின் தலைமையில் அலறி மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற காரணமாக இருந்தவரும் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் என்பது யாவரும் அறிந்ததே.

இவ்வாறு பெற்ற வர்த்தமானியை தென்னிலங்கை மக்களை சூடேற்றி குறுகிய அரசியல் இலாபத்திற்காக இல்லாமல் செய்ய முயற்சித்தவர்கள் யார் என்பது எமது மக்களுக்கு தெளிவாக அறிந்த ஒன்று. எமது மக்கள் வெண்ணெய் திரண்டு வருகின்ற நேரத்தில் தாளியை உடைப்பவர்கள் அல்ல. அன்று ஏமாற்றியவர்கள் இன்று சிந்திப்பது போன்று நகர சபை கிடைத்தால் தங்களால் எதிர்காலத்தில் அரசியல் செய்யமுடியாது. ஆகையினால் இதனை எவ்வாறாயினும் தடுத்து எதிர்வரும் தேர்தலில் மீண்டும் பேசு பொருளாக ஆக்கி வாக்குப் பெற நினைப்பது இனிமேல் வெறும் கனவாக மட்டுமே அமையும் என்பதில் எவ்வித ஐய்யமுமில்லை. கடந்த இறுக்கமான காலங்களில் கூட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களுடன் பல சந்திப்புக்கள் இடம்பெற்றன. இச்சந்திப்புக்கள் எல்லாவற்றிலும் நாங்கள், பள்ளிவாசல் தலைவர், செயலாளர் மற்றும் கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது உறுப்பினர்கள் எல்லோரும் கிழக்கு வாசலில் சந்தித்து அறிந்த வகையில் எமது நகர சபை சம்பந்தமாக பல முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவது எமது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் விடயமாகும்.

குறிப்பாக கடந்த ஜூலை மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதி அவர்களை சந்தித்து வழங்கப்பட்ட 4 பக்க கடிதம் எமது நகர சபை கோரிக்கையின் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியது மட்டுமல்லாது, பிரதமர், உள்ளூராட்சி மாகாண சபைகளுக்கான அமைச்சர், ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஜனாதிபதி ஆலோசகர் ஆகியோருக்கும் அக்கடிதத்தின் பிரதிகள் வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் எதிர்வரும் நாட்களில் பிரதம மந்திரி அவர்களை சந்தித்து எமது நகர சபை வர்த்தமானி அறிவித்தல் தற்காலிக தடையை நீக்க ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் இறுதி நடவடிக்கை எடுத்துவரும் இத்தருணத்தில் நாம் ஒற்றுமையுடன் செயற்பட்டு எமது சபைக்கான வர்த்தமானி தடையை விரைவில் நீக்க ஒத்துழைக்க வேண்டியது எமது எல்லோர்களினதும் கடமையாகும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :