பட்ஜட்டை கட்சி ரீதியாக ஆதரிப்பது பற்றி இரு முஸ்லிம் தலைமைகளும் ஆலோசிக்க வேண்டும் : வபா பாரூக்.


நூருல் ஹுதா உமர்-

நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவால் வாசிக்கப்பட்ட பட்ஜட் உரை அவரினால் மட்டும் தயாரிக்கப்பட்டதல்ல. ஜனாதிபதி, நிதியமைச்சர் உட்பட இன்னும் எத்தனையோ துறைசார் அதிகாரிகளும் இணைந்து தயாரித்த பட்ஜட் அது. பட்ஜட் தயாரிப்பில் பிரதான அம்சம் கொள்கை தீர்மானமாகும். திறந்த பொருளாதாரமா அல்லது மூடிய பொருளாதாரமா என்ற இரண்டிலொரு கொள்கையின் அடிப்படையிலேயே ஏனைய விடையங்கள் தீர்மானிக்கப்படும். 

என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பொருளாளரும், அரசியல் செயற்பாட்டாளருமான வபா பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும், அரசியல் களம் மிக சூடாக இருக்கின்றது. அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களும் அரசை கவிழ்த்துவிடக்கூடாது என்ற ஆதங்கமும் சமாந்திரமாய் இயங்குகின்றன. ஜனாதிபதி கோத்தாபாயவிடமிருந்து மக்கள் எதையோ எதிர்பார்க்கின்றார்கள்.

ஜனாதிபதி கோத்தாபாய அரசியலுக்கு புதியவர் என்றாலும் அவருக்கென்று தனித்துவமான வியூகத்தை கொண்டவர் என்பதில் இன்னும் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

 தற்காலிக சிரமங்களை சகிக்க முடியாமல் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவை வீட்டுக்கு அனுப்பி இலங்கையை வெளிநாடுகளின் உற்பத்திகளில் நூறு வீதம் தங்கும் நாடென்ற சாபத்தை தாமாகவே தேடிக்கொண்டதுபோல் ஜனாதிபதி கோத்தாபாயவின் ஆட்சியையும் கவிழ்த்து அந்த சாபத்தை நீட்டிக்கொள்ள மக்கள் விரும்பவில்லை என்பதை கள நிலவரத்தை உற்று நோக்கும் எந்தவொரு அரசியல் அவதானியும் புரியாமலிருக்க வாய்ப்பில்லை

உதாரணமாக மின்கட்டணத்துக்கு பத்து வீத விலை குறைப்புக்கான முன்மொழிவானது எரிபொருள் இறக்குமதியின் தேவையை இயன்றளவு குறைத்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரப்பாவனையை அதிகரிக்கும் நோக்கம் கொண்டது.

 சமையலறை முதற்கொண்டு வாகனங்கள் வரை எவ்லாமே மின்சாரத்தில் இயங்கினால் எரிவாயுவின் தொடங்கி அனைத்து எரிபொருள் இறக்குமதியையும் இயன்றளவு நிறுத்தலாம் என எதிர்பார்ப்பதில் தவறு ஏதுமில்லை. மின்சார உற்பத்திக்கு முன்னர் போல் பாரிய மின்னுற்பத்தி ஆலைகள் தேவையில்லை.

ஒவ்வொரு வீட்டின் மாடியிலும் சூரிய சக்தியூடாக மின் உற்பத்தியை செய்யலாம். ஏற்கனவே இது அறிமுகமாகிவிட்டது. நூறு வீதம் மின்சாரத்தில் இயங்கும் உள்நாட்டு கார் உற்பத்தியும் ஆரம்பமாகி விட்டது.

ரயில் சேவையை மின்சாரத்தில் இயக்குவதற்கான வேலைத்திட்டமும் வகுக்கப்பட்டாயிற்று. எரிபொருள் இறக்குமதிக்கான பாரிய அன்னியச்செலாவணி மீதப்படுத்தப்படும். 

பால் தேவையை ஈடு செய்ய மாடு வளர்ப்பு ஊக்குவிக்கப்படுகிறது. மாடறுப்பு தடை வராவிட்டால் மாடு வளர்ப்பு இன்னும் பெருகும். யார் தலைகீழாய் நின்றாலும் இரசாயன உரம் இறக்குமதி சாத்தியமில்லை. அமைச்சர் அலி ஷப்ரியா அல்லது ஞானசார தேரரா என்ற இழுபறியில் அலி ஷப்ரியை ஜனாதிபதி தேர்ந்தது போலல்ல இரசாயனமற்ற விவசாய விவகாரம்.

இரசாயனமற்ற விவசாயம் இலங்கையின் அடையாளமாகும் வரை ஜனாதிபதி அசையப்போவதில்லை. "வீட்டுக்கு ஐந்து உள்ளூர் பயிர்" என்ற கட்டாய திட்டமொன்றை அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது. பழம், மரக்கறிகளின் சுயதேவைகளை இயன்றளவு இத்திட்டத்தினூடாக பூர்த்தி செய்யலாம் என்பதை புரிவதில் யாருக்கும் சிரமம் இருக்காது. 

என்றாலும் சட்டம் போடாமல் சுயமாய் இயங்கும் பண்பு இலங்கையிலில்லை.

ஆக, ஒட்டுமொத்தமாக உள்ளூர் உற்பத்திகளில் மட்டும் தங்கியிருக்கும் மூடிய பொருளாதார கொள்கையையே ஜனாதிபதி கோத்தாபய அரசு முன்னெடுக்கின்றது. அதனால்தான் இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் இன்னும் இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று எவரும் விரும்பவில்லை. இது தவிர சஜித் பிரமதாஸாவை ஆளுமையானவராக மக்கள் கருதவில்லை. ஜனாதிபதி கோத்தாபய மீது ஆத்திரம் இருந்தாலும் சஜித்தை மாற்றீடாக அடையாளம் காண எவரும் தயாரில்லை. 

சுமார் இருபது இலட்சம் சமுர்த்தி பயனாளிகளை கிராமிய அபிவிருத்திக்கு ஈடுபடுத்தலில் தொடங்கி அரச உத்தியோகஸ்தர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் ஓய்வூதியத்துகான வயது, கால அதிகரிப்பு போன்ற விடையங்கள் வரை அனைத்தையும் ஆழமாக ஆராய்ந்தால் அந்த முன்மொழிவுகளினால் எதிர்பார்க்கப்படும் நலவுகள் என்ன என்பதை புரியலாம்.

பட்ஜட் மீதான விவாதத்துக்காக ஒதுக்கிப்பெற்ற நேரத்தில் ரஊப் ஹகீமும், ரிஷாத் பதியுத்தீனும் அரசின் கடந்தகால, நிகழ்கால இனவாத செயற்பாடுகளை காத்திரமாக விமர்சித்தார்கள். 

நிதி அமைச்சரின் பட்ஜட் உரையிலிருந்தே எடுகோள் எடுத்து ஜனாஸா எரிப்பு கொடுமையை மிக நுட்பமாகவும் காரசாரமாகவும் ரஊப் ஹகீம் சாடினார். மட்டுமல்ல இனியும் ஓட்டமாவடிக்கு ஜனாஸாக்களை கொண்டு செல்ல வேண்டும் என்ற படத்தை ஓட்டாமல் அந்தந்த ஊரகளிலேயே அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக கூறினார்.

 பிரதமரிடம் இதுவிடையமாக மேலும் கலந்துரையாடி ஜனாஸாக்களை அந்தந்தந்த ஊர்களிலேயே அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற புரிதலுடன் பட்ஜட்டை கட்சி ரீதியாக ஆதரிப்பது பற்றி இரு தலைமைகளும் ஆலோசிக்க வேண்டும்.

சமர்ப்பிக்கப்பட்டுள்ள பட்ஜட் எதிர்க்கப்பட வேண்டியதல்ல. சபீட்சமான இலங்கைகாகான முன்மொழிவுகள் அவை. ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். சஜித்துக்காக பிழையான நிலைப்பாட்டை முஸ்லிம் தலைமைகள் தேர்வது ஆரோக்கியமானதல்ல. 

அலி ஷப்ரி-ஞானசார தேரர் விடையத்தில் ஜனாதிபதியால் இந்தளவு இறங்கி வர முடியுமெனில் இன்னும் சாதிக்க சாத்தியமுண்டு . ஆரோக்கியமான அரசியலை நோக்கி முஸ்லிம் தலைமைகள் நகரவேண்டும். பட்ஜட் வெற்றிபெற முஸ்லிம்களின் ஆதரவு தேவையில்லை. ஆனால் முஸ்லிம் அரசியல் வெற்றி பெறவேண்டும். சாதுர்யமான காய் அரசியல் நகர்த்தலே அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :