அன்று யுத்தத்தை வெல்ல முடியாதென பிரிட்டன் பிரதமரும் கூறினார் , ஆனால் யுத்தத்தை வென்றோம்:- பிரதமர் மஹிந்த தெரிவிப்பு!ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
LTTE அமைப்புடனான யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வரும் விடயத்தில் எமது ராணுவத்தினர் மீது நம்பிக்கை கொள்ளாமல் வெளிநாட்டு ராணுவத்தினருக்கும், வெளிநாடுகளின் தலையீடுகளுக்கும் இடமளித்திருந்தால் நாட்டில் இன்றும் ரத்தமே ஓடியிருக்கும். பலம் வாய்ந்த நாடுகளுடன் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து எமது ராணுவத்தினரை கொண்டு யுத்தத்தை நிறைவு செய்தோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் அங்கவீனமடைந்த ராணுவத்தினரை பெருமைப்படுத்தும் வகையில் அநுராதபுரத்தில் நிர்மானிக்கப்பட்ட 'சந்தஹிரு செய' தூபி நேற்று முன்தினம் இரவு மக்களின் வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்:-
ரத்த வெள்ளத்தை நிறுத்தி, மரண அச்சத்தை இல்லாதொழித்து, நாட்டை பாதுகாத்த ராணுவத்தினரை கௌரவப்படுத்தும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட சந்த ஹிரு தூபியிடம் நாட்டில் மீண்டும் யுத்த சூழல் தோற்றம் பெறக்கூடாது என பிரார்த்தித்துக் கொள்கிறேன். நாட்டின் சுதந்திரத்துக்காக உயிரிழந்த ராணுவத்தினர் பெற்றுக் கொடுத்த சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டியது அரச தலைவர்களினதும் எதிர்கால அரச தலைவர்களினதும் பொறுப்பாகும். நாட்டின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக போராடியுள்ளோம். யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து பலரை விடுதலை செய்தோம். பலருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. யுத்தம் நிறைவடைந்ததை தொடர்ந்து ராணுவத்தினரை மறக்கவில்லை. 1984ம் ஆண்டு டொலர்பாம், கென்ட் பாம் மற்றும் கொக்கிளாய் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல்களில் 91 பேர் கொல்லப்பட்டார்கள். அத்துடன் இலங்கையின் வதிவிட பிரதிநிதிகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதி J.R ஜயவர்தன தொடக்கம் 2004ம் ஆண்டு வரையில் ஆட்சியில் இருந்த அனைத்து அரச தலைவர்களும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். J.R ஜயவர்தன முன்னெடுத்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த காரணத்தினால் அவர் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக இந்தியா ராணுவத்தை வரவழைத்து வடக்கை அவர்களுக்கு பொறுப்பாக்கினார். இலங்கை ராணுவம் ஒரு எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டது. இலங்கை ராணுவத்தினர் முகாம்களில் இருந்து வெளியே செல்ல வேண்டுமாயின் இந்திய ராணுவத்தினரின் அனுமதியை பெற வேண்டிய நிலை ஏற்படுத்தப்பட்டது. இலங்கையின் முப்படையினர் தொடர்பிலும் அவர்களின் பலம் தொடர்பிலும் அப்போது எவரும் கவனம் செலுத்தவில்லை.

அதன்பிறகு ஜனாதிபதி பிரேமதாஸவின் காலத்தில் LTTE அமைப்பின் தலைவர் விமானத்தில் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டு அவருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது. 800 பொலிஸார் அக்காலத்தில் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள். அதுமாத்திரமல்ல LTTEயினருக்கு ஆயுதங்களும் வழங்கப்பட்டன. அரசாங்கம் வழங்கிய ஆயுதங்களாலேயே ராணுவத்தினர் இறுதியில் பலியானார்கள்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் வெண் தாமரை, தவலம ஆகிய செயற்றிட்டங்கள் ஊடாக கண்டிக்கு சென்று பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. அக்காலக்கட்டத்தில் ராணுவம் என்ற சொற்பதம் நீக்கப்பட்டமை நினைவில் உள்ளது. ராணுவத்தினர் அரசாங்க பாதுகாப்பு படையினர் என்ற சொற்பதத்தில் அழைக்கப்பட்டனர். ராணுவத்தினருக்கு மதிப்பளித்தல் தேசிய நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் என கருதப்பட்டது. இருப்பினும் அவர் மீதும் தற் கொலைக் குண்டுத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.

அதன் பின்னர் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க LTTE அமைப்புடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு போர் நிறுத்த உடன்படிக்கைக்கு சென்றார். LTTE அமைப்பின் நிர்வாகத்துக்காக தனி பிரதேசம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது. நோர்வே போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டது. ராணுவத்தினரது முகாம்கள் மட்டுப்படுத்தப்பட்டது. பயங்கரவாதிகளின் முகாம்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. ஆட்சியில் இருந்த எவரும் எமது ராணுவத்தினர் மீது அதுவரை காலமும் நம்பிக்கை கொள்ளவில்லை. பிரதமராக நான் பதவி வகித்த போது வட மாகாணத்துக்கு செல்ல தீர்மானித்தேன். அப்போது போர் நிறுத்த ஒப்பந்தத்துக்காக நியமிக்கப்பட்ட நோர்வே நாட்டு பிரதிநிதிகள் என்னிடம் வடக்குக்கு செல்ல வேண்டுமாயின் LTTEயிடம் அனுமதி பெறவேண்டும் எனக் கூறினர். நாட்டின் பிரதமர் நாட்டுக்குள் செல்வதற்கு அனுமதி பெற வேண்டுமாயின் அது வேறொரு நாட்டை போன்ற நிலைக்கு அர்த்தப்படும் என்பதை உணர்ந்தேன். பிறரது அனுமதியை பெற்று என் நாட்டுக்குள் செல்ல தேவையில்லை. என்றாவது சுதந்திரமாக வட மாகாணத்துக்கு செல்வேன் என குறிப்பிட்டேன்.

நாட்டின் ராணுவத்தினர் மீது நம்பிக்கை வைக்காவிடின் தேசிய பாதுகாப்பு கேள்விக்குள்ளாகும் என அனைவரும் நம்பினார்கள். எமது நாட்டு ராணுவத்தினை மறந்து பிற நாட்டு ராணுவத்துக்கும் வெளிநாட்டு தலையீடுகளுக்கும் இடமளித்திருந்தால் இன்றும் ரத்த வெள்ளம் ஓடும். LTTE அமைப்புடன் யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னர் UK பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்பு நினைவில் உள்ளது. LTTE அமைப்பினை நிராயுதபாணிகளாக்கி சுதந்திரத்தை பெற வேண்டும் என குறிப்பிட்டேன் அதற்கு அது சாத்தியமானது என்று எண்ணவில்லை என குறிப்பிட்ட அவர் அதற்கான காரணிகளையும் குறிப்பிட்டார். அவர் அன்று குறிப்பிட்ட விடயங்கள் தற்போது சர்வதேச அரங்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அதாவது போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அதற்கு பல சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. தற்போது அதிலிருந்து எம்மால் விடுப்பட முடியாது. தற்போது LTTE அமைப்புக்கு தனித்து நிர்வாக பிரதேசம் ஒன்று உள்ளது. தனியான வங்கி உள்ளது. தனியான நாணயம் உள்ளது. தனிப்பட்ட நிர்வாக முறைமை உள்ளது. இவையனைத்தும் இடம்பெறும் வரை அரசாங்கம் பார்த்துக் கொண்டுள்ளது. ஆகவே அதற்கு எதிராக தற்போது ஒன்றும் செய்ய முடியாது என UK பிரதமர் குறிப்பிட்டார். அத்துடன் LTTE அமைப்பில் தற்கொலைக் குண்டுதாரிகள் உள்ளார்கள். அவர்களிடம் கப்பல், போர்க் கப்பல் இயந்திரங்கள், விமானங்கள் உள்ளன. ஆகவே அவர்களுக்கு கடல் பகுதியையும் வழங்க முடியுமா என்ற கேள்வியை UK பிரதமர் என்னிடம் வினவினார். எனினும் ராணுவத்தினர் மீது எமக்கு முழுமையான நம்பிக்கை இருந்தது. உலகில் பலம்வாய்ந்த நாடுகள் ஒன்றிணைந்து கைச்சாத்திட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தோம். ராணுவத்தினருக்கு எதிராக சர்வதேச மனித உரிமை பேரவை யில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அனுசரணை வழங்குவதில் இருந்து தற்போது விலகியுள்ளோம். அதன் தாக்கம் எமக்கு எதிராக வரும் என்பதை அறிவோம். அனைத்தையும் காட்டிலும் எமது சுதந்திரம் எமக்கு முக்கியம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :