மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி
எம்.ஏ.முகமட்-ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பத் திகதி 2021.09.15ந் திகதி நள்ளிரவுடன் முடிவுறுத்தப் பட்டதாக அறிவித்திருப்பது அடிப்படை உரிமை மீறல் ஆகும் என கிண்ணியா நகர சபையின் உறுப்பினரும் மக்கள் காங்கிரஸின் மூதூர்த் தொகுதி கொள்கை பரப்புச் செயலாளருமான எம். எம். மஹ்தி தெரிவித்துள்ளார்.
இன்று கிண்ணியாவில் இடம் பெற்ற ஊடக சந்தப்பின் போது இவ்வாறு உரையாற்றினார்.அவர் தொடர்ந்து கருத்து நிகழ்த்துகையில் ஆசிரியர்கள் அதிபர்கள் தங்களது சம்பள முரண்பாடுகளை தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடமை தவிர்ப்புப் போராட்டங்களை தொடராக நடத்திவருகின்றனர்.
மாணவர்கள் பாடசாலைக்கு சமூகம் தருகின்ற போதிலும் அவர்களுடைய பரீடசை விண்ணப்பங்களை பூரணப்படுத்தும் பணிகளை செய்ததற்கு அதிபர்களோ ஆசிரியர்களோ சமூகமளிக்காமையினால் விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பங்கள் இல்லாமல் செய்யப்படுகின்றன.
அது மாத்திரமன்றி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் போக்குவரத்து தடை, மற்றும் முடக்கங்கள் என்பவற்றாலும் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப் பட்டிருக்கின்றனர்.
அரசாங்கத்திற்கும் அதிபர் ஆசிரியர்களுக்கும் இடையே நடைபெறுகின்ற முரண்பாடுகள் காரணமாக மாணவர்களின் பரீட்சை எழுதுகின்ற வாய்ப்புகளானது இல்லாமல் செய்யப்படுவதென்பது அடிப்படை உரிமையை மீறுவதும் காலங்களை வீணடிப்பதுமாகும்.
எனவே விண்ணப்பிப்பதற்கான தகுந்த சூழ்நிலை ஏற்படுத்தப் படும் வரை மாணவர்களுக்கு கால அவகாசத்தை வழங்கி அவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு அரசாங்கமும் அதிபர் ஆசிரியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசை கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
0 comments :
Post a Comment