நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை மாற்றத்தினால் அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் மின்சார தடை மற்றும் சில நிறுவனங்களின் தொடர்பாடல் வலைமைப்பு சீரின்மை என்பன தொடர்பாக அனைவரும் அறிவீர்கள்.
இந்த இக்கட்டான காலப்பகுதியில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின், அம்பாறை மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அலுவலகம் இந்த மாவட்ட மக்களுக்கு தொடர்ந்தும் சிறந்த சேவையினை வழங்கும் பொருட்டு எமது புலன் விசாரணை உத்தியோகத்தர்கள் தயாராக உள்ளனர்.
நுகர்வோரான நீங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக் கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள், தங்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பாக அறிந்து கொள்ளுங்கள்.
1. மரக்கறி கடை, மீன் வியாபாரம் உட்பட அனைத்து வியாபார நிலையங்களிலும் தெளிவான முறையில் விலை காட்சிப்படுத்தப்பட்டிருத்தல் அல்லது விலைப்பட்டியல் வைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
2. இலத்திரனியல் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபார நிலையங்கள், தாங்கள் விற்பனை செய்யும் அனைத்து இலத்திரனியல் (Electrical) பொருட்களுக்கும் குறைந்து 6 மாதகாலம் உத்தரவாதம் அல்லது கட்டுறுத்து (warranty) வழங்க வேண்டும்.
3. எமது மாவட்டத்தின் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளமையால், பலர் மின்தோற்றி (Generator) வியாபாரம் செய்வதை அவதானிக்க முடிகின்றது. இவ்வியாபார நடவடிக்கையின்போது மின்தோற்றிக்கு (Generator) குறைந்து 6 மாத காலம் உத்தரவாதம் அல்லது கட்டுறுத்து (warranty) வழங்குவதுடன் விற்பனை செய்யும் நிறுவனத்தின் பெயர், கொள்வனவு திகதி, பொருளின் விபரம், நிறுவனத்தின் விலாசம், பற்றுச்சீட்டு இலக்கம், விலை, தொடர்பு இலக்கம் போன்ற விபரங்கள் அடங்கிய சட்டரீதியான பற்றுச்சீட்டு (bill) வழங்க வேண்டும். அத்துடன் நுகர்வோருக்கு சிரமம் ஏற்படாத வகையில் நியாயமான விலையில் தரமான பொருட்ளைக் கொண்டு வியாபார நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
4. அனைத்து வியாபார நிறுவனங்களும் விற்பனை, கொள்வனவு மற்றும் சேவை வழங்கும் போது கட்டாயம் வியாபார நிறுவனத்தின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பற்றுச்சீட்டு (bill) வழங்க வேண்டும். பற்றுச் சீட்டை கேட்டுப் பெற்றுக்கொள்ளும் சட்ட ரீதியான உரிமை நுகர்வோருக்கு உள்ளது.
5. பொருட்களில் பொறிக்கப்பட்ட விலையைவிட அதிக விலைக்கு விற்பனை செய்தல் அல்லது விலையில் மாற்றம் செய்தல் அல்லது விலையினை அகற்றுதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.
6. காலவதியான பொருட்களை விற்பனை செய்தல் அல்லது விற்பனைக்கு காட்சிப்படுத்தல் அல்லது தனது உடமையில் வைத்திருத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.
7. அத்தியாவசியப் பொருட்களை மேலதிகமாக களஞ்சியப்படுத்தல் அல்லது பதுக்கி வைத்திருத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறு யாராவது பதுக்கி வைத்திருந்தால் இது குறித்து பொதுமக்கள் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அறிவிக்க முடியும்.
8. வியாபார நிறுவனத்தில் அல்லது களஞ்சியசாலைகளில் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்தல் தண்டனைக்குரிய குற்றமாகும். இது பற்றி அறிந்தால் அதனை நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு தெரிவிக்கவும்.
9. அரசாங்க கட்டுப்பாட்டு விலையைவிட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தால் குறித்த வியாபார நிறுவனத்திற்கு குறைந்து ஒரு இலட்சம் ரூபாய் தொடக்கம் தண்டப்பணம் விதிப்பதுடன் மேலதிக தண்டணையினையும் வழங்க நீதி மன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.
10. தரமற்ற பொருட்களை வியாபார நிறுவனத்தில் அல்லது சந்தையில் விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.
11. எரிபொருள் வினியோகிக்கும் நிலையம் தவிர்ந்த ஏனைய வியாபார நிறுவனங்களில் அல்லது தனிநபர், வியாபார நோக்கத்திற்காக பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருட்களை தனது உடமையில் வைத்திருத்தல், விற்பனை செய்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே, மேற்படி சட்டதிட்டதிற்கு மாறாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபார நிறுவனங்கள் அல்லது தனி நபர்களுக்கு எதிராக 2003ம் ஆண்டு 9ம் இலக்க நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் புகார்கள் இருப்பின், அம்பாறை மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அலுவலகத்தை தொடர்புகொண்டு பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் 24 மணித்தியால இலவச துரித தொடர்பு இலக்கமான 1977க்கும் முறைப்பாடு செய்ய முடியும் என்பதையும் அறியத் தருகின்றேன்.
மாவட்ட பொறுப்பதிகாரி
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை
மாவட்ட செயலகம், அம்பாறை.
077 011 0068

0 comments :
Post a Comment