பனங்காடு வைத்தியசாலை 4வது நாளாக பூட்டு! டாக்டர் மீதான தாக்குதலின் எதிரொலி.



காரைதீவு சகா-
னங்காடு வைத்தியசாலை 4வது நாளாக பூட்டப் பட்டுள்ளது.டாக்டர் மீதான தாக்குதலின் எதிரொலியாகவே இது இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்ததாவது..

கடந்த மூன்று தினங்களுக்கு முன் அளிக்கம்பை பிரதேசத்திலிருந்து குண்டு போன்ற ஒரு வெடிபொருள் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டிருந்தனர். உடனடியாகவே அவர்களை பார்வையிட்ட வைத்திய அதிகாரி ஷகீல் அவர்கள் நோயாளிகளை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து பார்வையிட்ட பொழுது குண்டு வெடிப்பில் ஏற்பட்ட துகள்கள் காயத்தினுள் காணப்பட்டதன் காரணத்தினாலும் இது சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையிடலுக்கு உட்பட வேண்டியிருந்ததாலும் ஆரம்ப சிகிச்சையின் பின்னர் நோயாளிகளை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றம் செய்வதற்கு அம்புலன்ஸ் வண்டியை ஆயத்தப்படுத்தியிருந்த வேளையில் தங்களின் காயங்களுக்கு மருந்து மட்டும் போட்டு விட்டு வீடு செல்ல அனுமதிக்குமாறு அவர்களை கூட்டி வந்திருந்த இன்னுமொருவர் தகராறு பண்ணி இருந்தார்.
இவர் சற்று காலத்திற்கு முன் தான் பிரான்ஸ் நாட்டில் இருந்து திரும்பி வந்திருந்தவராக கதைக்கப்படுகிறது. இங்கு அவர் ஒரு பாதாளஉலகக்குழு போன்ற ஒன்றை நடத்தி கொள்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில் இந்த குற்றவாளி வைத்தியருடன் தகராறு செய்தது மட்டுமன்றி மிகமோசமாக வைத்தியரை தாக்கியதுடன் அருகிலிருந்த இன்னுமொரு உத்தியோகத்தரையும் மோசமாக தாக்கி இருந்தார்.
அத்துடன் அங்கிருந்த அரச பொருட்களை சேதப்படுத்தி வைத்தியசாலை ஆவணங்களை கிழித்தெறிந்து பெரும் ரகளை செய்து விட்டு அடாவடித்தனமாக அனுமதிக்கப்பட்டிருந்த அந்த காயப்பட்ட நோயாளர்களை குண்டுகட்டாக முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு மறைந்து விட்டார்.
பின்னர் பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் ராணுவத்தினரும் குண்டுவெடிப்பாகையால் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
இருந்தாலும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அந்த குற்றவாளி மென்மையாக கையாளப்பட்டு பிணையில் வெளியே விடப்பட்டு மீண்டும் வைத்திய அதிகாரிக்கும் உத்தியோகத்தர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளார்.
இப்படி இருக்கையில் மனிதாபிமானமிக்க அர்ப்பணிப்பு மிக்க இந்த சவாலான சந்தர்ப்பத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் வைத்திய துறையினருக்கு பாதுகாப்பளிப்பது யாருடைய கடமை.
அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணாமல், உரியவர் வெளியில் அச்சமூட்டும் விதத்தில் வைத்து கொண்டு மீண்டும் வைத்தியசாலைக்கு உயிரை பணையம் வைத்து வாருங்கள் என்று கூப்பிடுவது எந்த விதத்தில் நியாயமானது.
மலையகத்தில் வைத்தியர்கள் சங்கம் ஏற்கனவே இப்படியான இடங்களில் மாதக்கணக்கில் வைத்தியசாலையிலிருந்து வைத்திய அதிகாரிகளை திருப்பி அழைத்து இருந்தது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
பொதுமக்களும் சரி ஏனையவர்களும் சரி பொலிசாரும் சரி நிலைமைகளை சீராக அவதானித்து கடமையாற்ற முடியாவிட்டால் துர்ப்பாக்கியமான சம்பவங்கள் நீண்டு கொண்டேதான் இருக்கும்.
திட்டமிட்டு பலகாலம் கவனிப்பாரற்று கிடந்த பனங்காடு பிரதேச வைத்திய சாலையை பலபடிகள் முன்னே கொண்டுவந்து கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை ஒதுக்கி சேவைகளை மேம்படுத்திக் கொண்டுவரும் எனக்கு இந்த வைத்தியசாலையின் அவசியமும் அந்த பிரதேசத்து மக்களின் வைத்தியச் சேவையின் தேவையையும் உணர முடியாத நிலையிலா இருப்பேன்.
எனது சக்திக்குள் நின்றுகொண்டு இந்த பிரச்சனையை மிக விரைவில் தீர்த்து வைப்பேன்.
என்றார்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :