1000 ரூபாய் நாள் சம்பளத்துக்காக தொழிலாளர்கள் 20 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும் என்ற மஸ்கெலியா கம்பனியின் நிர்ப்பந்தத்தை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
மஸ்கெலியாவில் தொழிலாளர் தேசிய சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது:
மஸ்கெலியா பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் தமது நாளாந்த சம்பளத்துக்காக இதுவரை காலமும் 18 கிலோ தேயிலை கொழுந்தைப் பறித்து வந்தனர்.
ஆனால் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு அறிவிக்கப்பட்ட நாள் முதல் மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களிடம் 20 கிலோ கொழுந்து பறித்தால் மாத்திரமே ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்று நிர்பந்தித்து வருகிறன.
இந்த நிர்ப்பந்தத்தை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒருநாள் சம்பளத்துக்காக 18 கிலோவை தவிர ஒரு கிலோ கூட மேலதிகமாக கொழுந்தைத் தொழிலாளர்கள் பறிக்கப் போவதில்லை. இதற்குத் தொழிலாளர்கள் எவ்விதத்திலும் உடன் படப் போவதுமில்லை. இந்த நிலையில் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் தொழிலாளர் தேசிய சங்கம் தொடர்ந்து போராடும்.
0 comments :
Post a Comment