இந்திய முஸ்லிம்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் முயற்சி ! பாப்புலர் ஃப்ரண்ட் குற்றச்சாட்டுபுதுடெல்லி: இந்திய முஸ்லிம்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் முயற்சிப்பதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தேசிய தலைவர் ஓ. எம். ஏ. சலாம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது,

உத்தரப்பிரதேசத்தில் முஸ்லீம்கள் மத்தியில் குழப்பத்தை‌ ஏற்படுத்தி லாபமடையும் நோக்கில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் உருவாக்கப்பட்ட அதன் துணை அமைப்பான முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்ச் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் "இங்கு முஸ்லீம்கள் வாழக் கூடாது என ஒரு இந்து கூறுகிறார் என்றால், அவர் ஒரு இந்து அல்ல." என்று கூறியுளளார். அடித்து படுகொலை என்பது நாட்டில் நடக்கும் ஒரு யதார்த்த நிகழ்வுதான் என்பதை ஏற்றுக்கொண்ட பாகவத், இந்த குற்றத்தை வெட்கமின்றி ஆர்.எஸ்.எஸ்.ஸிடமிருந்து சாதாரண இந்துக்களின் மீது மடை மாற்ற முயற்சிக்கிறார்.
இந்திய முஸ்லிம்களுக்கு இந்நாட்டின் இந்துக்களுடன் எந்த பிரச்சனையும் இல்லை. பிரச்சனை ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே தான். இந்துக்களும்,. முஸ்லீம்களும் பல நூற்றாண்டுகளாக நல்லுறவை பேணி வாழ்ந்து வருகின்றனர். இந்துத்துவா என்ற கருத்தாக்கம் பிறக்கும் வரை சமூகங்களுக்கு இடையே இவ்வளவு தீவிரமான பகைமை உணர்வு ஒரு கணம் கூட வரலாற்றில் இருந்ததில்லை.

ஆரம்பகால இந்துத்துவா சிந்தனையாளர்களின் இனப்படுகொலை குறித்த நோக்கங்களும் நாசிசம் மற்றும் பாசிசத்தின் மீதான அவர்களின் பற்றும் இந்தியர்களுக்கு புதியவையாகும். நூற்றுக்கணக்கான படுகொலைகள், பாபரி மஸ்ஜித் இடிப்பு, முஸ்லீம் வழிபாட்டுத் தலங்கள் மீது நடந்து வரும் தாக்குதல்கள், அடித்துப் படுகொலைகள், இவற்றில் ஏதேனும் ஒன்று சுதந்திர இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் இன் நேரடி அல்லது மறைமுகமான தலையீடு இல்லாமல் எப்போதாவது நடந்துள்ளதா? மோகன் பகவத்தின் வார்த்தைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டுமானால், இந்து ராஷ்டிரம் பற்றிய ஆர்.எஸ்.எஸ்.ஸின் கருத்தாக்கத்தையும், இந்திய முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் ஆகியோர் இந்நாட்டிலிருந்து துடைத்தெறியப்படவேண்டிய உள்நாட்டு எதிரிகள் என்ற அதன் பார்வைகளையும் முதலில் அவ்வமைப்பு கைவிடட்டும். அதுதான் பிரச்சினையின் ஆணிவேர்.

இஸ்லாம் ஆபத்தில் இருக்கிறது' என்ற பயத்தை உருவாக்கும் சதி வலையில் சிக்கி விட வேண்டாம் என்று முஸ்லீம்களுக்கு அறிவுரை கூறும் பாகவத், மோடி ஆட்சியின் கீழ் சிறுபான்மையினர் ஒருபோதும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்ததில்லை என்பதை மூடி மறைக்க முயல்கிறார்.முரண்நகையாக மோகன் பாகவத் பேசிய கருத்துக்கள் வெளியான அதே நாளில் தான் பாஜகவின் ஹரியானா செய்தித் தொடர்பாளரும், கர்ணி சேனா தலைவருமான சூரஜ் பால் அமு முஸ்லிம்களை "இந்த நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும்" என்று அழைப்பு விடுத்தார். ஆர்.எஸ்.எஸ்ஸின் கட்டுப்பாட்டில் உள்ள மோடி அரசு இன்னமும் சிஏஏ மற்றும் என்.ஆர்.சி போன்ற நடவடிக்கைகளின் மூலம் முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்கும் முயற்சிகளை கைவிடவில்லை.

சில நல்லெண்ணம் கொண்ட மக்கள் பாகவத்தின் பேச்சை ஆர்.எஸ்.எஸ்ஸில் ஒரு வகையான மிதவாத போக்கின் அடையாளமாக கருதுகின்றனர்.எந்தவித நெருக்கடியும் இல்லாமல் சங்க்பரிவார் அனைவரையும் உள்ளடக்கும் தாராளவாத மொழியை ஏன் பயன்படுத்துகிறது? என்ற உண்மையை அவர்கள் கவனிக்க தவறுகிறார்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் மதவெறியை பகிரங்கமாக வெளிப்படுத்தினால், தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் ஏற்படும் பின்னடைவுகளுக்கு அஞ்சுகிறார்கள். உண்மையில் அவர்களின் செயல்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இது மோசமான நிலை. அவர்கள் ஆட்சியில் இருக்கும் இடங்களில் முஸ்லிம்களைத் தொடர்ந்து துன்புறுத்துகிறார்கள். அவர்கள் உண்மையில் "கட்டாய மதமாற்றம்" மற்றும் "லவ் ஜிஹாத்" போன்ற குற்றச்சாட்டுக்கள் மூலம் முஸ்லிம்களை இழிவுபடுத்தவும் அந்நியப்படுத்தவும் புதிய வழிமுறைகளை கண்டுபிடித்து வருகின்றனர். முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ய பகிரங்கமாக அழைப்பு விடுக்கும் பாஜக தலைவர்கள் அரசியல் ரீதியான வெகுமதிகளை பெறுகிறார்களே தவிர எந்தவொரு சட்டரீதியான நடவடிக்கைகளையும் எதிர்கொள்வதில்லை.
ஆர்.எஸ்.எஸ்ஸால் பரப்புரை செய்யப்படும் வகுப்புவாத பாசிச சித்தாந்தம் மற்றும் 'இந்து ராஷ்ட்ரா' கருத்தாக்கம் தான் இந்தியாவின் கூட்டு கலாச்சாரம், மத நல்லிணக்கம் மற்றும் அமைதியான சகவாழ்வுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. என்றைக்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாகவத் அதை கண்டித்து, பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்கிறார்களோ அன்று தான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே பேச்சுவார்த்தை என்று அழைக்கப்படுவதற்கு ஏதேனும் அர்த்தம் இருப்பதாக கருத முடியும்.
என்று தெரிவித்துள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :