தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அருண் குமார் மிஸ்ரா நியமனம் ! அகில இந்திய வழக்கறிஞர்கள் கவுன்சில் எதிர்ப்பு !!சென்னை : தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்த முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து கடந்த டிசம்பர் மாதம் 2020 அன்று ஓய்வு பெற்ற நிலையில் கடந்த 6 மாதங்களாக அந்தப் பதவி காலியாக இருந்து வந்தது. புதிய தலைவரை தேர்ந்தெடுக்க பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. அதில் புதிய தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அருண் குமார் மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டார். அருண் குமார் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டதற்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் அமைப்பான ஆல் இந்தியா லாயர்ஸ் கவுன்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆல் இந்தியா லாயர்ஸ் கவுன்சில் தமிழக தலைவர் வழக்கறிஞர் ஜஹாங்கீர் பாதுஷா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மனித உரிமை பாதுகாப்பு சட்டம், 1993 பிரிவு 4-இன் படி புதிய தலைவரை தேர்ந்தெடுக்க பிரதமர் மோடியை தலைமையாகக் கொண்ட 5 பேர் கொண்ட உயர்மட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. அதில் உறுப்பினராக உள்ள மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. மல்லிகார்ஜுன கார்கே அந்த தேர்வு குழுவில் பங்கு பெறாமல் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்பையும், இந்திய மனித உரிமை பாதுகாப்பு சட்ட மரபுகளை மீறியும் புதிய தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி திரு. அருண் குமார் மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நீதிபதி திரு. அருண்குமார் மிஸ்ரா உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, பாரதிய ஜனதா கட்சியைப் பற்றியும், பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்தும் அவர்களுக்கு ஏற்றவாறு பல முக்கிய வழக்குகளில் சாதகமாக செயல்பட்டதாக பலராலும் குற்றம்சாட்டப்பட்டு வந்த நிலையில் அதை மெய்ப்பிக்கும் விதமாக தற்போது பாஜக அரசாங்கம் அவரை தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமித்திருப்பது அவர் பாஜக அரசுக்கு சாதகமாக செயல்பட்டதற்குக் கிடைத்த சன்மானமாக சாமானிய மக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. மேலும், பாஜக ஆட்சியின் கீழ் காவல்துறையினரின் மற்றும் பாதுகாப்புப்படையினரின் எதேச்சதிகாரமும், அதிகார துஷ்பிரயோகமும் நாடு முழுவதும் பரவலாகியிருக்கும் சூழலில் இதுபோன்ற சுயலாப அரசியல் நியமனங்கள் மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் செயலேயன்றி வேறில்லை.

மேலும் இப்படிப்பட்ட செயல் சுதந்திரமான நீதித்துறையின் கண்ணியத்திற்கு எதிராகவும் நீதிபதிகள் எதிர்கால பதவிக்கு ஆசைப்பட்டு அரசுக்கு அடிபணியத் தூண்டும் விதமாகவும் இருப்பதால் தற்போது நீதிபதி திரு. அருண் குமார் மிஸ்ரா அவர்களின் தலைவர் பணி நியமனத்தை இரத்து செய்ய வேண்டுமென்றும், மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் விதிகளின் படி தகுதியான புதிய நபரை தலைவராகவும், உறுப்பினராகவும் தேர்வு செய்ய வேண்டும் எனவும் ஆல் இந்தியா லாயர்ஸ் கவுன்சில் தமிழக கமிட்டி மத்திய அரசை கேட்டுக்கொள்கிறது என தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :