உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா தீநுண்மியை இலங்கையில் கட்டப்படுத்துவதற்காக நாட்டுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இதற்கென மாகாண ரீதியாக சனத்தொகை அதிலும் 30வயது மற்றும் 60வயதுக்கும் மேலுள்ள சனத்தொகை கணக்கிடப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட ரீதியாக தடுப்பூசி செலுத்தவென மத்திய நிலையங்கள் தயார்படுத்தப்பட்டுவருகின்றன.
அந்தவகையில் 17லட்சத்து 45ஆயிரத்து 711பேரைச் சனத்தொகையாக கொண்டுள்ள கிழக்கு மாகாணத்தில் தடுப்பூசி வழங்கவென மாகாண சுகாதாரத்திணைக்களம் தயாராகிவருகிறது.
46சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளைக்கொண்ட கிழக்கு மாகாணத்தில் 859 நிலையங்களில் கொரோனாத்தடுப்பூசி வழங்கத்திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி 14 சுகாதாரவைத்தியஅதிகாரி பிரிவுகளைக்கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் 338 நிலையங்களும் 13 சுகாதாரவைத்தியஅதிகாரி பிரிவுகளைக்கொண்ட கல்முனைப்பிராந்தியத்தில் 223 நிலையங்களும் 12 சுகாதாரவைத்தியஅதிகாரி பிரிவுகளைக்கொண்ட திருகோணமலை மாவட்டத்தில் 229 நிலையங்களும் 07 சுகாதாரவைத்தியஅதிகாரி பிரிவுகளைக்கொண்ட அம்பாறைப்பிராந்தியத்தில் 69 நிலையங்களுமாக மொத்தம் 859 தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் தயார்படுத்தப்பட்டவருகின்றன.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 5லட்சத்து 85ஆயிரத்து 436பேரும் கல்முனைப்பிராந்தியத்தில் 4லட்சத்து 57ஆயிரத்து 911பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 4லட்சத்து 26ஆயிரத்து 503பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 2லட்சத்து 75ஆயிரத்து 862பேரும் இருப்பதாக சுகாதாரத்திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களில் 30வயது மற்றும் 60வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலையங்கள் தயாராகிவருகின்றபோதிலும் பொதுமக்களுக்கு எப்போது தடுப்பூசி செலுத்தப்படும் என்று இன்னும் குறிப்பிடப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment