மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கு அரச காணி வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது முஸ்லிம், சிங்கள ஊடகவியலாளர்கள் புறக்கணிப்பட்டுள்ளதாகவும், இது இன ரீதியானதும், அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடாகும் என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஏறாவூர் நகர சபை உறுப்பினருமான எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.
இந்த விடயமாக முன்னாள் அமைச்சர் சுபைர் (24) ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
ஊடகவியலாளர்கள் யுத்த காலத்திலும், தற்போதைய காலகட்டத்திலும் மக்களின் நடப்பு விவகாரங்களை வெளிக்கொண்டு வந்து குரலற்ற மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருப்பவர்கள். அதேவேளை மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் ஒரு இணைப்புப் பாலமாகவும் இருந்து வருபவர்கள்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக நிலையான இன ஐக்கியத்திற்காகவும் இந்த நாட்டுக்காகவும் அவர்கள் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அர்ப்பணிப்போடு பணியாற்றும் இத்தகைய ஊடகவியலாளர்களின் பணியை எவரும் இன,மத ரீதியாக குறைத்து மதிப்பிட முடியாது. ஆயினும் இந்த புறக்கணிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளிப்படையாக இடம்பெற்றிருப்பது கவலையளிக்கிறது.
மட்டக்களப்பில் கடந்த வாரம் 33 தமிழ் சமூக ஊடகவியலாளர்கள் என்று கூறப்படுகின்றவர்களை மாத்திரம் தெரிவுசெய்து அரச அதிகாரிகளும், அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சரும் கலந்துகொண்ட அரச நிகழ்வொன்றில் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதில் காத்தான்குடி ஏறாவூர் கல்குடா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் ஊடவியலாளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தின் சிங்கள ஊடகவியலாளர்களும் வேறு சமூகம் என்ற அடிப்படையில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
2019ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் வதிவிடக் காணி இல்லாத ஊடகவியலாளர்களுக்கு அரச காணி வழங்கும் நேர்முகப் பரீட்சைக்கு ஊடகவியலாளர்கள் சமூகமளித்திருந்தபோதும், அதிலிருந்து முஸ்லிம், சிங்கள சமூகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அனைவரும் புறக்கணிக்கப்பட்டு, தமிழ் சமூக ஊடகவியலாளர்கள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு அரச காணிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
எனவே, இனம், மதம், சமூகம் என்ற அடிப்படையில் பிரித்து, அரச நிர்வாகத்தின் மூலம் பேதங்களை வளர்க்காது, காணி வழங்கப்படாமல் விடுபட்டிருக்கின்ற முஸ்லிம், சிங்கள ஊடகவியலாளர்களுக்கும், அரசியல் பின்னணிகளைக் கருத்திற்கொண்டு, காணி வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கின்ற ஏனைய தமிழ் ஊடவியலாளர்களுக்கும் உடனடியாகக் காணி வழங்கப்பட வேண்டும். குறித்த விடயம் ஏறாவூர் நகர சபை அமர்விலும் பேசப்பட்டு, ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானத்தினை ஜனாதிபதி, ஊடக அமைச்சர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அனுப்புவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் கடந்த காலங்களைப் போன்று இத்தகைய இன, மத ரீதியான அநீதி அரசாங்க நிருவாகத்திற்கூடாக இனிவரும் காலங்களிலும் இடம்பெறக் கூடாது என்பதில் கரிசனையாக உள்ளோம். எனவே, இந்த விடயத்தில் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தவிடயமாக ஏறாவூர் நகர சபை அமர்வின் போது முன்னாள் மாகாண அமைச்சரும், நகரசபை உறுப்பினருமான சுபைர் அவசர பிரேரணை ஒன்றினை சமர்ப்பித்து உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment