ஜனாஸா நல்லடக்கத்திற்கான நகர்வுகள் திருப்தியற்ற முறையில் அமையுமாயின் மாற்று நடவடிக்கைகளில் இறங்க தயங்க மாட்டேன்; -ஹரீஸ் எம்.பி.தெரிவிப்புஅஸ்லம் எஸ்.மௌலானா-
கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்காமல் புதைக்கலாம் என்கிற நிபுணர் குழுவின் பரிந்துரையை அமுல்படுத்துகின்ற விடயத்தில் முன்னெடுக்கப்படும் நகர்வுகள் திருப்தியற்ற முறையில் அமையுமாயின் சமூகம் எடுக்கின்ற தீர்மானத்தோடு ஒன்றித்து மாற்று நடவடிக்கைகளில் இறங்கத்தயங்க மாட்டேன் என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

தனது கல்முனை அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சமகால அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டத்திற்கு ஆதரவளித்த 07 முஸ்லிம் எம்.பி.க்களுக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விடயம் பாரிய சவாலாக மாறியுள்ளது. நாங்கள் அதனை ஆதரவளிப்பதற்கு முன்னர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பஷில் ராஜபக்ஷ உட்பட முக்கிய தலைவர்களுடன் ஜனாஸா எரிப்பு, முஸ்லிம் தனியார் சட்டம், காதி நீதிமன்றம், மத்ரஸா விவகாரம், பிராந்திய ரீதியிலான விடயங்கள் உட்பட முஸ்லிம்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தோம். அதன்போது தரப்பட்ட உத்தரவாதங்களின் அடிப்படையிலேயே நாங்கள் அச்சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம்.

அதன்படி கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்காமல், அடக்கம் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதற்கு நாங்கள் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷ போன்றோர் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர். இரண்டு அமைச்சரவைக் கூட்டங்களில் இவ்விடயம் ஆராயப்பட்டு, அந்த ஜனாஸாக்களை மன்னார், மறிச்சிக்கட்டைப் பகுதியில் அடக்குவதற்தற்கான தீர்மானம் கூட எடுக்கப்பட்டிருந்தது. அதனை அமைச்சர் அலி சப்ரி வெளிப்படுத்தியிருந்தார்.

அப்போது தொளஹீத் ஜமாஅத் அமைப்பு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து, சிங்கள மொழியில் கடிதம் எழுதி, சிங்கள ஊடகங்களில் அது வெளிவந்ததும் சிங்கள கடும்போக்காளர்கள் கடுமையையாக எதிர்க்கும் நிலையை ஏற்படுத்தியது. ஆனால் நாங்கள் தளர்ந்து விடவில்லை தொடர்ந்தும் பல மட்டங்களிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். அமைச்சர் அலி சப்ரியும் இது விடயத்தில் மிகவும் கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றார். அவர் எங்களது செயற்பாடுகளுக்கும் பக்கபலமாக இருந்து வருகின்றார். அவரது ஈமானிய பலம் மிகவும் கனதியாக இருப்பது கண்டு நான் ஆச்சரியமடைகின்றேன்.

ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள், சிரேஷ்ட அமைச்சர்கள், வெளிநாடுகளின் தூதுவர்கள், சிங்கள ஊடக முக்கியஸ்தர்கள் என பல தரப்பினரையும் சந்தித்து, இப்பிரச்சினை தொடர்பில் தெளிவுபடுத்தி, அவர்கள் மூலமாக ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றோம். முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அணில் ஜெயசிங்க கூட முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்க அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதியை அறிவுறுத்தி வருகின்றார்.

எமது கோரிக்கையின் காரணமாக ஒரு நிலையான தீர்வு வரும்வரை ஜனாஸாக்களை எரிக்காமல் பாதுகாப்பதற்கான குளிரூட்டிகளை பயன்படுத்துவதற்கும் சுகாதார அமைச்சு மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதற்கு எமது தரப்பில் வழங்க வேண்டிய பங்களிப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தோம். ஆனால் காலியில் ஒரு ஜனாஸா விடயத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு இந்த ஆவணம் வெளிப்படுத்தப்பட்டதால் அதிலும் சில இழுபறிகள் காணப்படுகிறன.

அதேவேளை எங்களது தொடர் முயற்சிகளின் பயனாக டிசம்பர் 10ஆம் திகதி பிரதமர் தலைமையில் பாராளுமன்ற தொகுதியில் நடைபெற்ற எங்களது கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாகவே உயிரியல் தொற்று ஆய்வாளர்களையும் உள்ளடக்கிய நிபுணர்களை உள்ளடக்கிய குழுவொன்று அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையானது, விஞ்ஞான ரீதியில் மரணித்த உடலங்களை நல்லடக்கம் செய்யலாம் என்ற பரிந்துரை வழங்கியுள்ளது. இது எமது முயற்சியினால் கிடைக்கப்பெற்றுள்ள அதியுயர் தீர்வு என்பதை எவரும் மறுக்க முடியாது.

இது எமக்கு மிகவும் சாதகமான ஒரு தருணமாகும். இதன் அடுத்த கட்டம் என்பது உறுதியான அரசியல் தீர்மானமாகும். இதனை அரசியல் தலைமைகள் செயற்படுத்த வேண்டும். இதனை செயற்படுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு உத்வேகம் கொடுப்பதற்கும் பௌத்த கடும்போக்காளர்களை மௌனமடையச் செய்து, கட்டமைப்பதற்கும் பஷில் ராஜபக்ஷவினால் முடியும் என்ற நம்பிக்கை எம்மிடம் காணப்படுகிறது.

விடயங்கள் இவ்வாறு இருக்கத்தக்கதாக நாங்கள் 20ஆவது திருத்தத்தை ஆதரித்து விட்டு, பணத்தையும் பெற்றுக்கொண்டு, பதவிகளையும் எதிர்பார்த்தே அமைதியாக இருக்கிறோம் என்று சிலர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் என்னைப்பொறுத்தவரை பணத்தின் மீதோ பதவியின் மீதோ எவ்வித ஆசையுமில்லை என்பதை கடந்த காலங்களில் பதவியை தூக்கியெறிந்ததன் மூலம் நிரூபித்திருக்கிறேன். இது விடயத்தில் எவருக்கும் சந்தேகம் இருக்குமாயின் உலமாக்கள் முன்னிலையில் சத்தியம் செய்வதற்கும் தயாராகவுள்ளேன்.

20ஆவது திருத்தத்தை ஆதரித்த விடயத்தில் பிக்குகளுக்கு சந்தேகம் இருக்கிறது. எமது தரப்பு ஊடக செய்திகள் தென்னிலங்கை பௌத்த கடும்போக்காளர்களை மேலும் தூண்டிவிடும் என்பதனாலேயே எமது முயற்சிகள் குறித்து நாங்கள் எதையும் வெளிப்படுத்தாமல் மௌனமாக இருந்து காய்நகர்த்தி வருகின்றோம்.

எமது செயற்பாடுகள் பற்றி ஊடகங்களிலோ முகநூல்களிலோ எதுவும் வெளிவரவில்லை என்பதற்காக நாம் மௌனமாக இருந்து கொண்டு தூங்குகிறோம் என்பது அர்த்தமல்ல. எங்களது அயராத முயற்சிகளை பட்டியலிட்டால் அது தெற்கில் பாரதூரமான எதிர்ப்பலைகளை ஏற்படுத்தி, அரசாங்க மட்டத்தில் எமக்கு சாதகமாக முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது எங்களது இலக்கு ஜனாஸா எரிப்பை நிறுத்த வேண்டும் என்பதேயன்றி, எங்களை ஜனரஞ்ஜக அரசியல்வாதிகளாக வெளிக்காட்ட வேண்டுமென்பதில்லை. அதனால்தான் எங்கள் மீது எவ்வளவுதான் விமர்சனங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டாலும் பொறுப்புள்ள அரசியல் தலைமைகள் என்ற ரீதியில், கசப்பாக இருந்தாலும் சகிப்புத்தன்மையுடன் இலக்கை நோக்கியே பயணிக்க வேண்டியுள்ளது. நிபுணர் குழுவின் பரிந்துரை எமது சமூகத்திற்கு சாதகமாக வருமளவுக்கு நாங்கள் பின்னணியில் நாம் செயற்பட்டோம் என்கிற ஆத்ம திருப்தியுடனேயே பேசிக்கொண்டிருக்கிறேன்.

நிபுணர் குழுவின் பரிந்துரையை அமுல்படுத்துகின்ற விடயம் தொடர்பாக அடுத்த சில தினங்களில் அரசின் முக்கிய தலைவர்களை சந்தித்து, அவர்களின் கால்களைப்பிடித்து மன்றாடியாவது சமூகத்தின் இறுதி ஆசையை சாத்தியப்படுத்திக் கொள்வதற்கு முயற்சிப்போம். இது எமது இறுதி முயற்சியாக இருக்கும். ஜனாஸா நல்லடக்கத்திற்காக முன்னெடுக்கப்படும் நகர்வுகள் திருப்தியற்ற முறையில் அமையுமாயின் சமூகத்தின் பிரதிநிதி என்ற ரீதியில் சமூகம் எடுக்கின்ற தீர்மானத்தோடு மாற்று நடவடிக்கைகளில் இறங்கவும் தயங்க மாட்டோம்" என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :