இந்த சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பஞ்சாபில் 3 நாள் டிராக்டர் பேரணியை நடத்தி வருகிறார். இதில் 2-வது நாள் பேரணியை நேற்று சங்ரூரில் இருந்து தொடங்கினார். அப்போது பர்லானா சவ் என்ற இடத்தில் மக்கள் கூட்டத்துக்கு இடையே அவர் உரையாற்றினார்.
அப்போது அவர் மத்திய அரசு மீதும், பிரதமர் மோடி மீதும் கடும் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
உணவு கொள்முதல் மற்றும் பொது வினியோக திட்டத்தை மேம்படுத்துவதற்கான தேவை உள்ளது. இந்த அமைப்பை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அதிக உணவு தானிய குடோன்கள் அமைக்க வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வதற்கான தேவை உள்ளது. விவசாயிகளுக்கு உள்கட்டமைப்பை வழங்க வேண்டிய தேவை உள்ளது.
ஆனால் நரேந்திர மோடி இவற்றை எல்லாம் மேற்கொள்ளவில்லை. இந்த அமைப்பை மோடி வலுப்படுத்தவில்லை. சிறந்த பொது வினியோக திட்டத்தை மோடி தந்தால், குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்தி இருந்தால், அதிக குடோன்களை அமைத்திருந்தால், பின்னர் அம்பானியும், அதானியும் பணம் சம்பாதிக்க முடியாது.
ஆனால் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் அவர் அழித்து வருகிறார். பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. மூலம் சிறு வணிகர்களையும், சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளையும் அவர் அழித்தது போல, இந்த வேளாண் சட்டங்களால் உங்களையும் (விவசாயிகள்), தொழிலாளர்களையும் அழித்து வருகிறார். உங்களின் கழுத்தை அறுத்து வருகிறார்.
தனது தொழிலதிபர் நண்பர்களுக்காக அனைத்தையும் செய்து வருகிறார். அம்பானியோ, அதானியோ வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. ஆனால் சிறு, குறு, நடுத்தர தொழில்துறைதான் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். ஆனால் ஜி.எஸ்.டி. மற்றும் பணமதிப்பு நீக்கத்தால் இந்த துறைகளை மோடி அழித்து விட்டார்.
தனது கொள்கைகளால் கடந்த 6 ஆண்டுகளாக ஏழைகள் மீது மோடி தாக்குதல் நடத்தி வருகிறார். பணமதிப்பு நீக்கத்தால், மக்கள் அயராது பாடுபட்ட பணம் வங்கிகள் மூலம் பெரும் தொழிலதிபர் கைகளுக்கு சென்றன. இந்த கொரோனா காலத்தில் கூட, தனது கார்பரேட் நண்பர்களுக்கே பிரதமர் மோடி உதவி வருகிறார். அவர்களது கடன்களும், வரிகளும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய பஞ்சாப் முதல்-மந்திரி அமரீந்தர் சிங், வேளாண் சட்டங்களை கருப்பு சட்டங்கள் என வர்ணித்தார். இந்த சட்டங்களுக்காக விவசாயிகளுக்கு மொத்தமாக அநீதி இழைக்கப்பட்டு உள்ளது என கூறிய அவர், பஞ்சாப் மற்றும் நாடு முழுவதும் விவசாயப்பணிகள் எவ்வாறு நடக்கிறது? என்பது மோடி அரசுக்கு தெரியாது எனவும் கூறினார்.
இந்த பேரணியில் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், மாநில பொறுப்பாளருமான ஹரிஷ் ராவத், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் மற்றும் மாநில மந்திரிகள் பங்கேற்றனர்.
0 comments :
Post a Comment