20ஆவது திருத்த யோசனையில் உள்ள இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரத்தினால் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர்கள் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
கொழும்பு நாரஹேன்பிட்டியில் உள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று காலை நடைபெற்றது.
இதில் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கலந்துகொள்ள சந்தர்ப்பம் அளிக்கப்படாத போதிலும் தொலைபேசி வாயிலாக கேள்விகளைத் தொடுப்பதற்கு சந்தர்ப்பமளிக்கப்பட்டது.
இதன்போது 20ஆவது திருத்தத்தில் உள்ள சில யோசனைகளை நாடாளுமன்றப் பெரும்பான்மை பலத்துடனும் அதேபோல சர்வஜன வாக்கெடுப்புடனுமே நிறைவேற்ற வேண்டும் என்கிற வியாக்கியானத்தை உச்சநீதிமன்றம் அளித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இவ்விவகாரம் குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, குறித்த யோசனையில் இரட்டைப் பிரஜாவுரிமை பற்றிய விடயம் குறித்து தெளிவுபடுத்தினார்.
இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரம் யாருக்காக உள்ளடக்கப்பட்டது என்று கேள்வி கேட்கும் பிரிவினர், யாருக்காக அது நீக்கப்பட்டது என்பதையும் கேட்கவேண்டும் என்று குறிப்பிட்டார். இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் பதவிகளை இந்நாட்டில் வகிக்கலாமா இல்லையா என்பதை சர்வஜன வாக்கெடுப்பில் கேட்கவேண்டும் என்றால் அதற்கு மக்கள்தான் பதிலளிக்க வேண்டிவரும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதன்போது குறுக்கீடு செய்து கருத்து வெளியிட்ட அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில, தேசிய சுதந்திர முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய மூன்று கட்சிகளும் அண்மையில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் எழுதிய கடிதம் குறித்து நினைவுபடுத்தினார்.
இரட்டைப் பிரஜாவுரிமையை கொண்டு அரசியல் செய்யமுடியாது என்பதை ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிடத்தில் சுட்டிக்காட்டியிருந்ததாக தெரிவித்த அவர், அமைச்சரவையிலும் இதுபற்றி நீண்டநேர பேச்சுக்கள் நடத்தப்பட்டதாகவும், அதில் ஒருசில பிரிவுகள் குறித்து இணங்கிய போதிலும் இன்னும் இந்த விவகாரம் பற்றி இழுபறி நிலை உள்ளதையும் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார்.
0 comments :
Post a Comment