பல பக்க நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் சாய்ந்தமருது "பெலிவேரியன்" கிராமம் : துயர்துடைப்பது யார்?நூருல் ஹுதா உமர்-

"பெ
லிவேரியன்" கிராமம் இது வெறும் பெயரல்ல அடையாளம். சுனாமியால் உயிர்களையும் உடமைகளையும் இழந்த அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் உள்ள சாய்ந்தமருது மக்களுக்காக கடலுக்கு மறுதிசையில் வாழும் முகமே தெரியாத வெள்ளைக்கார மனிதர்களின் வெள்ளைமனதால் உருவான சுனாமிக்கிராமம். இந்த கிராமம் உருவாக்குதலில் பல அதிகாரிகளை கோடீஸ்வரர்களாக மாற்றியிருந்தாலும் இன்றும் அக்கிராம மக்கள் பல இன்னல்களை சந்தித்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

கடந்த 2004 சுனாமிப்பேரலையில் உயிர்களையும் உடமைகளையும் இழந்து அகதிமுகாம்களில் வாழ்ந்த மக்களுக்கு நிரந்தர வீடமைப்பை உறுதி செய்ய அப்போதைய மஹிந்த அரசினால் உருவான இந்த கிராமத்தில் தான் சாய்ந்தமருதின் முக்கிய அரச காரியாலயங்கள் பலதும் அமைந்துள்ளது. சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், காதி நீதிமன்றம், பெண்கள் குரான் மதரஸா, பள்ளிவாசல், விவசாய விரிவாக்கல் காரியாலயம், சமூக சேவைகள் திணைக்கள காரியாலயம், விதாதா வள நிலையம், நைட்டா, பாடசாலை, பாலர் பாடசாலை, உட்பட அரசின் மாவட்ட மற்றும் மாகாண காரியாலயங்களும் பல இங்குதான் உள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற குண்டுத்தாக்குதலின் போது அந்த தாக்குதல் சூத்திரதாரிகளை பாதுகாப்பு படைக்கு அடையாளம் காட்டி நாட்டின் கௌரவம் காத்த மக்கள் வாழும் பிரதேசம் என்பது கூடுதல் பெருமை. இருந்தாலும் இந்த கிராமத்தை அடையாளம் காட்டும் பெயர்ப்பலகை ஒன்று இல்லாமல் இருப்பது பெரும் துர்பாக்யமே.

சாய்ந்தமருதின் பொதுவிளையாட்டு மைதானம் மறைந்த அஷ்ரபின் பெயரால் இங்கு உருவானது. ஆனால் அந்த மைதானம் "நாய் சாப்பிட்ட பிலால்" போன்று உள்ளதுதான் கவலையான விடயம்.என்கின்றனர் பிரதேச வீரர்கள். சுற்றுமதில்கள் இல்லாமல், ஒழுங்கான மைதான அமைப்புக்கள் இல்லாமல் குறைப்பிரசவமாகி உயிர்வாழ முடியாமல் இருக்கும் இந்த மைதானத்தின் அவலத்தை பிரதேச வீரர்கள் எல்லா அரசியல்வாதிகளுக்கும் எத்திவைத்துள்ளனர். இருந்தும் இந்த பூனைக்கு மணிகட்ட யாரும் முன்வரவில்லை.

சுனாமியால் பாதிக்கட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த கிராமம் தசாப்தம் தாண்டியும் நிர்வாணமாக இருப்பதை தேர்தல் காலத்தில் மட்டுமே அரசியல்வாதிகள் அறிகிறார்கள். மேடையில் மட்டுமே அபிவிருத்தி கண்ட வீதிகள் இன்னும் நிஜத்தில் அபிவிருத்தி காணவில்லை. நின்று நிதானித்து அந்த கிராமத்தை பார்த்தால் அவலத்தின் அகல நீளம் விளங்கும். சிறிய பாலத்தினுடாக பல மெட்ரிக் தொன் நிறையுடன் வரும் லாரிகள் முதல் துவிசக்கர வண்டிகள் வரை பயணிக்கிறது. பாலத்தை பெரிதாக்க வேண்டும் எனும் அந்த மக்களின் கோரிக்கை இன்னும் யார் காதிலும் கேற்கவில்லை. அரைகுறையாக தர நிர்ணயம் பேணப்படாமல் சிலரின் இலாபத்தை மட்டுமே குறியாக கொண்டு அமைக்கப்பட்ட ஓரிரு வீதிகளினதும் விதி கூட மோசமாகவே தான் உள்ளது. அந்த வீதிகளை சாதாரணமாக பார்க்கும் போது "ஓட்டப்பல்லன்" போல அவ்வளவு ஓட்டைகள் இருக்கிறது. உடைந்து விழும் நிலையிலும் சில வீதிகள் உள்ளது என்பதை அதிகாரிகள் அறியாமலில்லை.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய கட்டிடம் இருக்கும் இந்த "பெலிவேரியன்" கிராம பிரதேசங்களில் தான் டெங்கின் தலைநகரமும் இருக்கிறது. 

அந்த சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய கட்டிடத்தை சுற்றி 500 மீட்டர் நடந்து சுத்தம் செய்தாலே குறைந்தது 5000 டெங்கு உற்பத்தியாகும் இடங்களை அழிக்க முடியும் என்பது எனது நம்பிக்கை. 

குப்பைகளினால் நிரம்பிவழியும் தோணா.

 அதில் தேங்கி நிற்கும் குப்பைகள். அந்த குப்பைகளில் கலந்திருக்கும் டெங்கின் உற்பத்தி சாதனங்கள் (டெங்கு உருவாகும் தன்மை கொண்ட நிறைய பிளாஸ்டிக் பொருட்கள்) என ஆபத்தில் இருக்கிறது "பெலிவேரியன்" கிராமம். 

மட்டுமல்ல ஊர்பட்ட அத்தனை தொற்றுநோய்களை உருவாக்கும் சாதக நிலைமைகளும் இங்கு இருக்கிறது. 

ஆனால் ஒவ்வொருநாளும் இந்த இடங்களை தாண்டித்தான் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர்கள் போகிறார்கள் என்பது கசப்பான உண்மை. இது தொடர்பில் கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, கல்முனை மாநகர சபை, கல்முனை பொலிஸ் என்பன மிக கடுமையான நடவடிக்கை எடுத்தால் நிலை தலைகீழாக மாறி அழகு செழிக்கும் பூமியாக பொலிவேரியன் மாறும்.

குப்பைகளை ஒழுங்கான பொறிமுறையூடாக அகற்றாமல் கண்ட இடங்களில் வீசும் அறிவற்ற மக்களினால் தூர்நாற்றம் வீசுகிறது பொலிவேரியன். 

மாடறுப்பு கழிவுகள், கோழியறுப்பு கழிவுகள் கூட இங்கு தினம் வரும் குப்பைகள்.

 ஏதாவது ஒரு குப்பை பையை அலசி ஆராய்ந்தால் படித்த குடும்பத்தின் குப்பைகளே அதிகம் இங்கு கொட்டப்படுகிறது என்பதை அறியலாம். இவைகள் எல்லாம் இப்படி இருக்க குப்பைகளின் கிடங்காக சில விஷமிகள் எங்கள் பிரதேசத்தை மாற்ற முயல்கிறார்கள் என்கிறார் பிரதேச வாசியான 69 வயது முதியவர்.

யானைகளின் அட்டூழியம் நிறைந்த சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமம் பல சொத்துக்களை யானைகளுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும். 

குடும்பத்தாரின் வீட்டுக்கு மாமா மச்சான் வருவது போல தினம் யானைகள் இங்கு வந்து அங்கு கொட்டப்படும் குப்பைகளையும் ஏனைய பயிர்களையும் சாப்பிட்டுவிட்டு ஆடியசைந்து செல்கிறது. யானையின் பயணத்தின் இடையில் யாரும் சிக்கினால் அவரின் உயிருக்கு உத்தரவாதமில்லை.

இரவு நேரங்களில் அங்கு வாழும் மக்களின் வீட்டில் ஒளிரும் மின்விளக்குகள் அணைந்தால் சில பிரதேசங்களில் இருள் ஆட்சி செய்ய ஆரம்பித்து விடுகிறது. அவ்வாறான இடங்கள் போதைவஸ்து பாவனைகள் முதல் மற்றும் பல சிக்கல்கள் நிறைந்த இடமாக மாறி பிரச்சினைகள் உருவாகிறது. இதன் மூலம் பிரதேசத்தின் கண்ணியம் கெட்டுப்போகிறது என்கின்றனர் கௌரவத்தை விரும்பும் பிரதேசவாசிகள். வீதி மின்விளக்குகளை பொருத்துவது யார்?

இந்த கிராமத்தின் பல பகுதிகளுக்கும் வடிகான்கள் இல்லை, சில இடங்களில் வடிகான்கள் இருந்தாலும் நீர் ஓட முடியாது தேங்கி நிற்கிறது, பல வடிகான்கள் உடைந்தும் மூடியில்லாமலும் இருக்கிறது. இதனால் பல விபத்துக்களும் நடந்திருக்கிறது. 

வயோதிபர்கள், சிறுவர்கள் காயம் பட்ட வரலாறுகளும் உள்ளது.

நானே ராஜா, நானே மந்திரி என்று கோஷமிடும் பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இந்த பிரச்சினைகளை தங்களின் கவனத்தில் எடுக்க வேண்டும். 

இங்கு வாழும் பல்லாயிரம் மக்களின் அடிப்படை உரிமைகள், சுகாதார தேவைகள் நிறைவேற்றி கொடுக்கப்பட வேண்டும். 

வாக்குசேகரிக்க வழங்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :