பாடும் நிலா என்று பலராலும் பாராட்டப்படும் அமரர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மரணச் செய்தி எம்மை பெரிதும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கின்றது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவையிட்டு அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
40 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பல்வேறு மொழிகளிலும் பாடி இரசிகர் உள்ளங்களை ஈர்த்துக் கொண்டு பரவசப்படுத்திய அந்த இனிமையான குரல் தற்போது எம்மை விட்டு பிரிந்திருக்கின்றது. உலகில் பிறந்த மனிதர்களில் ஒவ்வொருவரும் வெவ்வேறு நோக்கங்களைக் கொண்டு வாழ்வதுண்டு. இவ் உலகில் பிறந்த அனைவருக்கும் இறப்பு என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகும். சிலரது இறப்பினை நாம் ஒரு சம்பவமாகவே கருதுகின்றோம். ஆனால் சிலரது இறப்பு எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி விடுகின்றது. அந்த வகையில் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மறைவு எம்மை ஆராத்துயரில் ஆழ்த்தியிருக்கின்றது. அமைதியான சுபாவம் கொண்ட அவர் எல்லாரினது அன்புக்கும் பாத்திரமானவர்.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என இந்திய மொழிகளில் பலவற்றில் இசைவானை ஆக்கிரமித்துக் கொண்ட அந்த இசைபுயல் இன்று பிரிந்து சென்றுள்ளது. திரை இசை உள்ளங்களுக்கெல்லாம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வேளையில் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது மகன் எஸ்.பி. சரண் உட்பட குடும்பத்தினர், திரை உலகத்தினர், பன்மொழி ரசிகர்கள் அனைவரோடும் எமது ஆழ்ந்த துயரத்தை பகிர்ந்து கொள்கின்றேன்.
அத்துடன் எனது தந்தை அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியருக்கும் நல்லுறவு இருந்தது என்றார்.
0 comments :
Post a Comment