இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் இன்று இடம்பெறவுள்ளது.
புதிய நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வினை சாதாரண முறையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த காலங்களை போன்று அல்லாது, இம்முறை ஜனாதிபதியை வரவேற்கும் நிகழ்வுகள் எவையும் இம்முறை முன்னெடுக்கப்பட மாட்டாதென குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நாடாளுமன்ற முதலாவது அமர்வின்போது இராணுவ அணிவகுப்பு, குதிரைப்படை அணிவகுப்பு மற்றும் கொண்டாட்ட நிகழ்வுகள் என்பன நடத்தப்பட மாட்டாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 9 ஆவது நாடாளுமன்ற கன்னி அமர்வுக்கான முற்னேற்பாட்டு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள 223 நபர்களின் பெயர் விபரங்கள் வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் எங்கள் மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு உரிய 2 தேசிய பட்டியல் உறுப்பினர்களின் விபரங்கள் இதுவரை பெயரிடப்படவில்லை.
இதன்காரணமாக அவர்களுக்கான ஆசனங்கள் இந்த கன்னி அமர்வின்போது வெறுமைப்படுத்தப்பட்டிருக்கும் எனவும், சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிலர் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்படப்பட்டுள்ளது.
இதன்படி, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதிமன்ற அனுமதியுடன் அமர்வில் பங்கேற்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், 9 ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் கலந்துகொள்வதற்கு பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் கலந்து கொள்வதற்கு சிவநேசதுரை சந்திரகாந்தனினால் அனுமதி கோரி நகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த மனு மீதான பரிசீலனை நேற்று இடம்பெற்ற போதே, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று குறித்த அச்ச நிலை மற்றும் உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை மிகவும் பாதுகாப்பாக நடாத்துவதற்கு வேண்டிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்றைய தினம் பொதுமக்கள் பார்வைகூடம் திறக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உதவி செயலாளர் நாயகம் நீல் இட்டவெல இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, புதிய சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பொதுமக்களை நாடாளுமன்றத்திற்கு அனுமதிப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது நாடாளுமன்றத்தின் சபை முதல்வராக தினேஸ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாடாளுமன்றத்தின் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளராக ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், புதிய நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தற்போது இணையத்தளம் ஊடாக தங்களது தகவல்களை வழங்கியுள்ளதாகவும் நாடாளுமன்ற உதவி செயலாளர் நாயகம் நீல் இட்டவெல தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment