காரைதீவில் கருணா அம்மான் காட்டம்!
காரைதீவு சகா-அம்பாறை மாவட்டத்தில் நாம் களமிறங்கி அவர்களைவிட கூடுதல்வாக்குகளைப்பெற்று தோற்கடித்து நெருக்கடி கொடுத்த காரணத்தினால்தான் த.தே.கூட்டமைப்பு கலையரசனுக்கு நியமன எம்.பி.பதவியை வழங்கியது.
இவ்வாறு தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணித்தலைவரும் அகில இலங்கை தமிழர்மகாசபை சார்பில் திகாமடுல்ல மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட கருணா அம்மான் என அழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்..
2020 பாராளுமன்றத்தேர்தலுக்குப் பிற்பாடு நேற்றுமுன்தினமிரவு(27) அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் அக்கரைப்பற்று பொத்துவில் போன்ற பகுதிகளுக்கு விஜயம் செய்து மக்களுக்கு நன்றிதெரிவித்துவிட்டு இறுதியில் காரைதீவில் இரவு 8மணியளவில் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.
காரைதீவு அலுவலகத்தில் கருணாஅம்மானுடன் இணைந்து காரைதீவில் போட்டியிட்ட தியாகராசா ஞானேந்திரம்(வின்சன்) தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.
அங்கு கருணா அம்மான் மேலும் பேசுகையில்:
கலையரசனது நியமனம் அம்பாறை தமிழர் மீதோ கலையரசன் மீதோ கொண்ட விருப்புக்காக அல்லது அககறையின் நிமித்தம் வழங்கப்பட்டதல்ல. அவர் வரட்டும். அவர் எதைச்செய்வாரோ தெரியாது. இருந்தும் மக்களுக்கு உதவிதான். அந்தவிடயத்தில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் கடந்தகாலங்களில் பலவழிகளாலும் பாதிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டு அநாதரவாக உள்ளனர். அவர்களை காப்பாற்றுவதே எனது இலட்சியம். நான் ஒருபோதும் உங்களைவிட்டு ஓடிவிடமாட்டேன்.
சிலர் கூறினராம் கருணா வந்தார். வாக்குகளைப்பிரித்தார். வேலை முடிந்துவிட்டது. ஓடிவிட்டார். அவரை நம்பியோர் நடுத்தெருவில். அவர் இனி வரமாட்டார் என்று. அவர்களிடம் கூறுங்கள். நான் ஒருபோதும் அம்பாறை மக்களைவிட்டு ஓடப்போவதில்லை. உண்மையில் மட்டக்களப்பில் நான் கேட்டிருந்தால் 2 ஆசனங்களைப் பெற்றிருப்பேன். ஆனால் அதற்கு நான்விரும்பவில்லை. அங்கு தேவையான வசதிகளை அபிவிருத்திகளை நிறையவே செய்துள்ளேன். எனவேதான் பின்தங்கி நாதியற்று இருக்கின்ற அம்பாறை தமிழ்மக்களுக்கு உதவிசெய்யவேண்;டும். நல்ல அரசியல் ஸ்திரமான அடித்தளத்தை போடவேண்டும்.அதனூடாக மக்களுக்கு வேலைவாய்ப்பு அபிவிருத்திகளைச் செய்யவேண்டும் என்று சிந்தித்தே இங்கு களமிறங்கினேன்.
இரு மாதங்களுள் 30ஆயிரம் வாக்குகளை பெற்றதென்பது வெற்றிதான். அடுத்தது. பழைய கட்சியான த.தே.கூட்டமைப்பை சுமார் 5000 வாக்குகளால் தோற்கடித்து வெற்றிவாகைசூடியுள்ளோம்.
அனைத்திற்கும் நீங்கள்தான் காரணம். இளைஞர்படையணி மகளிரணி புத்திஜீவிகள் என பலதரப்பினர் இரவுபகலாக நின்று பணியாற்றினர். அனைவருக்கும் நன்றிகள்.
இன்றைய பிரதமர் மஹிந்தராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோட்டபாய ஆகியோர் அம்பாறை மாவட்டத்தில் இருமாதகாலத்துள் 30ஆயிரம் வாக்குகளை தமிழ்மக்கள் அள்ளிப் போட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தமது பிரத்தியேகமான நன்றிகளைத் தெரிவியுங்கள் என்று என்னிடம் கூறினார்கள்..
இந்த 30ஆயிரம் வாக்குகளை 60ஆயிரம் வாக்குகளாக மாற்றி அம்பாறை தமிழர்க்கு நல்லதொரு அரசியல் அடித்தளத்தை இட்டு அதனூடாக நல்லபலவேலைத்திட்டங்களை செய்யவுள்ளேன். எனக்கு பாராளுமன்றம் கிடைக்கவில்லiயென்பதையிட்டு நீங்கள் சற்றும் கவலைப்படவேண்டாம்.
எனக்கு பதவி தேவையில்லை. சகல அமைச்சர்களிடமும் சென்று தேவையான உதவியைபபெறுவதற்கு பிரதமர் பச்சைக்கொடி காட்டியுள்ளார். இருமாதங்களுக்கொருமுறை இரு அமைச்சர்களை இங்கு கொண்டுவந்து உங்கள் பிரச்சினைகளை தீர்க்க திட்டமிட்டுள்ளேன். ஒரு மாதகாலம் கொழும்பில் நின்று அதற்கான சகல ஏற்பாடுகளையும் திருப்தியாக செய்துள்ளேன்.
இன்னும் சில வாரங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள். அரசாங்கம் வழமைக்குதிரும்பியதும் சகலதும் நடக்கும். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்ட அனைத்தையும் செய்வேன். யாரும் அச்சமடையத்தேவையில்லை.
இந்த அரசாங்கம் எமது அரசாங்கம். சகல ஒத்துழைப்புகளும் கிடைக்கும்.எனவே மாவட்டத்திலுள்ள 77 தமிழ்க்கிராமங்களுக்கும் வின்சன் அண்ணன் சென்று அங்கு கிராமமட்ட அபிவிருத்திக்குழுக்களை எதிர்வ ரும் இருவாரங்களுள் தோற்றுவித்து அதனூடாக எமது வேலைத்திட்டங்களை செய்வோம்.
அனைவருக்கும் நன்றிகள். குறிப்பாக கல்முனை வாழ் தமிழ்மக்களுக்கு விசேடமான நன்றிகள். என்றார்.
0 comments :
Post a Comment