பழைய தும்புத்தடி, செருப்புக்களை காட்டி கடந்த காலங்களில் தனக்கு எதிராக செயற்பட்டு வந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினரின் வீட்டுக்கு வந்து அவரோடு எவ்வித சலனமுமில்லாது அமர்ந்து சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள். அவர் எங்களை உச்சகட்டமாக ஏமாற்றிவிட்டு சாய்ந்தமருத்துக்கு அன்று வந்தபோதும் ஜனநாயகத்தை மதித்து நாங்கள் அவரை எதிர்க்கும் நடவடிக்கைகளில் இறங்க வில்லை என தேசிய காங்கிரசின் வேட்பாளரும், ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாகசேவை அதிகாரியுமான ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.
பிரதேச ஊடகவியலாளர்களை தனியார் விடுதியொன்றில் திங்கட்கிழமை இரவு சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசுகையில்,
முன்னாள் மாகாண சபை உறுப்பினரிடம் பல படைகள் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் பாலமுனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசியிருக்கிறார். அந்த படைகளில் ஒன்றுதான் என் வீட்டுக்கும் கத்தியுடன் வந்து அச்சுறுத்தல் விடுத்தது. அது சம்பந்தமாக பாதுகாப்பு தரப்புக்கும் அறிவித்துள்ளேன். அந்த கூட்டத்தில் பேசிய ரவூப் ஹக்கீம் அவர்கள் தன்னை ஒரு குண்டர் படை தலைவர் போன்றும் அந்த மாகாணசபை உறுப்பினர் கட்டளைத்தளபதி போன்றும் அவர்களுக்கு கீழே மிகப்பெரும் சக்திகொண்ட குண்டர் படை இருப்பது போன்றும் பேசியுள்ளார். எதிர்காலத்தில் இது சம்பந்தமாக பாதுகாப்பு தரப்புக்குடன் பேச உள்ளோம். ஏனென்றால் ஜனநாயக நாட்டில் ஒரு கட்சி தலைவர் பேசுவது வெட்கக்கேடான விஷயம்.
சாய்ந்தமருது மண் தான் அவரை தலைவராக அறிவித்த மண். இன்றும் அவர் தலைவராக இருக்க காரணம் எமது மக்கள் அவருக்கு வழங்கிய ஆணையே. பாலமுனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர் சாய்ந்தமருதை புரட்டிபோடுவோம் என்றும் அதற்கான படை முன்னாள் மாகாணசபை உறுப்பிடமிருப்பதாக தெரிவித்துள்ளார். அதை சாய்ந்தமருது மக்களாகிய நாங்கள் மிகவும் கவலையுடனையே நோக்குகிறோம். ஒரு சிறந்த அரசியல் தலைமைத்து ஆளுமை உள்ளவரால் இப்படியலெல்லாம் பேச முடியாது. அவரது உரைகளே அவரின் அரசியல் முதிர்ச்சியையும், பக்குவத்தையும் காட்டுகிறது. இது சம்பந்தமாக பாதுகாப்பு தரப்பினரிடம் பேசி நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
அவரிடம் ஒரு படை இருப்பதாகவும் அந்த படை சாய்ந்தமருதை புரட்டி தள்ளும் என்று அவர் தெரிவித்திருப்பதானது சாய்ந்தமருத்துக்கு பயத்தையும் அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது. சாய்ந்தமருதில் மக்களாக முன்வந்து மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் அவர் இவ்வாறான கருத்துக்களை சாய்ந்தமருத்துக்கு வெளியே சென்று பேசி வருகிறார். கண்டியிலிருந்து வந்த ஒரு தலைமை அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பதானது அவரை நிராகரிக்க வசதியாக அமைந்துவிடுகிறது. இந்த கருத்துக்களுக்காக பெறுபேற்றை எதிர்வரும் ஐந்தாம் திகதி அவர் பெற்றுக்கொள்வார். அவருடைய தலைமைத்துவம் இந்த மாவட்டத்திலிருந்து கிளைந்தெறியப்படும் நாட்கள் கனிந்து வருகிறது என்றார்.