க.கிஷாந்தன்-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அமையவுள்ள பலம்பாய்ந்த அரசாங்கத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பலமாக இருந்தால் தான் எமது மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து, சாதனைகளை படைக்ககூடியதாக இருக்கும். எனவே, மக்கள் பேராதரவை வழங்கவேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், ஊடகப்பேச்சாளருமான கணபதி கணகராஜ் தெரிவித்தார்.
அட்டனில் 12.07.2020 அன்று இரவு அட்டன் நகர வர்த்தகர்களுடான நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
" இன்று எமது சமுகத்தின் எதிர்ப்பார்ப்பு, இளைஞர்களின் அபிலாசைகள் எல்லாம் வெவ்வேறான நோக்கங்கள், இலக்குகளை கொண்டனவாக அமைந்திருக்கின்றன. அவற்றை அடைவதற்கான வழியை காட்டுவதற்காக மலையகத்திலிருந்து புதிய தலைமைத்துவம் புறப்பட்டிருக்கின்றது. தம்பி ஜீவனின் பேச்சு, சிந்தனை என்பவற்றை பார்க்கும்போது, ஒரு சாதாரண வட்டத்துக்குள் சுழழாமல், தூரநோக்கு சிந்தனை இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இன்னும் 50 வருடங்களுக்கு தேவையான அடித்தளத்தை இந்த தேர்தல் போடவுள்ளது. ஒற்றுபட்டிருந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் நாம் வென்றிருக்கின்றோம். ஐயா சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்திலும், மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் காலத்திலும் இது நடைபெற்றுள்ளது. தற்போதும் மக்கள் ஒன்றுபட்டுள்ளனர். இதன்வெளிப்படாகவே கூட்டங்களுக்கு அணி திரண்டு வருகின்றனர். காங்கிரசுடன் இணைகின்றனர். பல துறைகளை சேர்ந்தவர்களும் ஆதரவை வெளிப்படுத்திவருகின்றனர்.
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியே வெற்றிபெறும். மூன்றிலிரண்டு பலத்துடன் ஆட்சியமைப்பதே இலக்காக இருக்கின்றது. இவ்வாறு அமையும் பலம்வாய்ந்த அரசாங்கத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பலமாக இருக்குமானால் மிக கூடுதலான சாதனைகளை நிலைநாட்ட முடியும். மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். அதற்கான சூழல் தற்போது உருவாகியுள்ளது.
இதற்காகவே ஐந்து வேட்பாளர்களை ஆறுமுகன் தொண்டமான் நிறுத்தினார். ஐவரும் வெற்றிபெறக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. எனவே, மக்களிடம் இருந்து பெரும் ஆதரவை எதிர்ப்பார்க்கின்றோம். அதனை மக்கள் வழங்குவார்கள் எனவும் உறுதியாக நம்புகின்றோம். " - என்றார்.