" மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படவேண்டுமெனில் தொலைபேசி சின்னத்துக்கு வாக்களித்து சஜித் பிரேமதாசவை பிரதமராக்குவதற்கு மலையக மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.
அட்டன் வெளிஓயா பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" தமிழ், முஸ்லிம் வாக்குகள் தேவையில்லை. அதற்காக அவர்களிடம் கையேந்தமாட்டோம் என விமல்வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார். அதாவது தமிழ் மக்களே தங்களிடம் கையேந்தவேண்டும் என்பதே அவரின் நினைப்பாக உள்ளது.
வீடமைப்பு அமைச்சு பதவியை வகித்த விமல்வீரவன்ஸ, மலையகத்தில் வீடுகளை கட்டவில்லை. இனியும் அவர் அமைச்சரானால் எமது பகுதிகளில் வீடுகளை நிர்மாணிக்கமாட்டார்.
இந்நிலைமை மாறவேண்டுமானால் தொலைபேசி சின்னத்துக்கு வாக்களித்து சஜித்தை பிரதமராக்குவதற்கு எமது மக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மலையக கட்சிகளை விமர்சிப்பதற்கு நான் இங்கு வரவில்லை. எமக்கு தேவையான விடயங்களை எடுத்துரைக்கவே வந்துள்ளேன். வாக்கு என்பது உங்கள் உரிமை. அதனை எங்களுக்கு தாருங்கள் என பலவந்தமாகக்கேட்கமுடியாது. ஆனால், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்களின் குடும்பத்தில் நால்வர் இருந்தால் இரண்டு வாக்குகளை அவர்களுக்கும், இரண்டை எங்களுக்கும் வழங்கலாம். இது கோரிக்கை மாத்திரமே.
தமிழ் முற்போக்கு கூட்டணி கடந்த பொதுத்தேர்தலில் 6 ஆசனங்களை வென்றெடுத்தது. இம்முறை இரத்தினபுரி, கம்பஹா ஆகிய மாவட்டங்களிலும் ஒவ்வொரு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை எதிர்பார்க்கின்றோம். நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையில் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் முக்கியத்தும் மிக்கதாகும்." - என்றார்.