தொடர் 03
தகவல் தொகுப்பு கலீல் எஸ்.முஹம்மத்-
வல்ல இறைவன் வழங்கிய நிறைவான கல்வியையும் பல வர்த்தக வாய்ப்புகளின் மூலம் பாடசாலைகள், பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள், பொது அமைப்புகள் உட்பட ஏனைய சகோதர இனத்தவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் தனிப்பட்ட வகையிலும் ஏழை எளிய மக்களுக்கும் உதவிகளை வழங்கியது மட்டுமில்லாமல் 1988இல் மயோன் கணனி கல்லூரியை உருவாக்கி பல லட்சம் மாணவர்களுக்கு அதனை அறிமுகப்படுத்தி பணியாற்றிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்தான் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் மர்ஹூம் அஷ்ரபினாலும் எமது பிரதேச கல்விமான்கள், புத்திஜீவிகள், உலமாக்கள், மற்றும் இளைஞர் அமைப்புகளின் வேண்டுதலினாலும் அரசியலுக்குள் இழுத்து வரப்பட்டேன்.
எனது அரசியல் பிரவேசத்தின் பிரதான நோக்கம் தனிப்பட்ட ரீதியில் மக்களுக்கு உதவுவதற்கு மேலதிகமாக அரசியலுக்கூடாக முழு அம்பாறை மாவட்ட மக்களினதும் அபிவிருத்தியை மையப்படுத்தியதாக கல்முனை நகரை கட்டியெழுப்புவதேயாகும்.
1994 இல் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு மூன்று மணித்தியாலங்களின் பின்னர் அந்த முடிவு சூழ்ச்சியின் காரணமாக மாற்றப்பட்டது. அன்று தொடக்கம் மிகவும் பொறுமையோடு இருந்த எனது அரசியல் பயணம் எப்போதும் எதிர்நீச்சல் நிறைந்ததாகவே காணப்பட்டது.
இருந்தபோதிலும் 1994 தேர்தல் முடிவுகளின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்ட கையோடு மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களை சந்திக்க விரும்பினேன். அன்றைய சந்திப்பு கண்டி குயின்ஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது சுஹைர் எம்.பி அவர்களும் சட்டத்தரணி அபுல் கலாம் அவர்களும் பிரசன்னமாகி இருந்தனர்.
அன்றய சந்திப்பில் எனது முதலாவது கோரிக்கை கல்முனை பிராந்திய மக்கள் சார்பாக புதிய கல்முனை நகர அபிவிருத்தி திட்டமாகும். எமது பிரதேசத்தில் காணப்படும் குடியிருப்பு நில தட்டுப்பாட்டிற்கான தீர்வு, புதிய பல அரசு அலுவலகங்களை நிறுவுதல், தமிழ் முஸ்லீம் வியாபாரிகளை உள்ளடக்கிய பாரிய வர்த்தக நிலையங்களை அமைத்தல், சர்வதேச விளையாட்டு மைதானம், நூலகம், கல்வி மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களை நிறுவுதல் போன்ற பரந்துபட்ட எண்ணத்தின் அடிப்படையில் கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்தை முன்வைத்தேன். இது காரைதீவில் தொடங்கி நீலாவணை வரைக்கும் உள்ள அனைத்து வயல் பிரதேசத்தையும் உள்ளடக்கிய புதிய நகர அபிவிருத்தி திட்டமே இதுவாகும்.
இது தொடர்பாக ஆழ்ந்து செவிமடுத்த மர்ஹூம் அஷ்ரப் இது தொடர்பாக நீர்ப்பாசன பொறியியலாளர் திரு செந்தில்நாதனுடன் கதைப்பதாக கூறினார். இதனை அவரோடு பேசுவதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை, அவர் ஒரு நீர்ப்பாசன பொறியியலாளர். நான் குறிப்பிடுகின்ற விடயம் ஒரு பாரிய வேலைத் திட்டமாகும். இது சாதாரண ஒரு பொறியியலாளருடன் பேசி நடைமுறைப்படுத்துகின்ற ஒரு விடயம் அல்ல, இது தொடர்பாக அமைச்சரவையின் அனுமதியுடன் கல்முனை நகர அபிவிருத்தி அதிகார சபையொன்று உருவாக்கப்பட வேண்டும்.
அந்த அதிகார சபைதான் இதன் அடிப்படை விடயங்கள் அனைத்தையும் திட்டமிட வேண்டும். அதன் அடிப்படையில் வரைபடம் தயாரித்தல் வேண்டும், அதன் பின்னரே இதனை நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என தெளிவுபடுத்தி முதலில் ஒரு அமைச்சரவை பத்திரத்தை சமர்பித்து குறித்த அதிகார சபை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறினேன். இதனை முழுமையாக ஏற்றுக்கொண்ட மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் பல வருடங்களாக அதனை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் எந்த விதமான கரிசனையும் காட்டியதாக எனக்கு தெரியவில்லை.
இந்த சந்தர்ப்பத்தில் இதனை ஒரு குற்றச்சாட்டாக சொல்லவில்லை, ஆனால் மக்கள் இது விடயம் தொடர்பில் தெரிந்திருத்தல் வேண்டும் என்பதற்காக தெளிவுபடுத்த விரும்புகின்றேன். காலங்கள் உருண்டோடின என்னுடைய கோரிக்கைகள் எதுவும் கணக்கில் எடுக்கப்படுவதாக தெரியவில்லை. எனது மாமனார் மர்ஹூம் எம்.சி.அஹமது அவர்களால் உருவாக்கப்பட்ட கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் தொடக்கி கல்முனை நகர் வரைக்கும் மேற்குப்பகுதியில் அதாவது அஹமது பஸார் அமைந்துள்ள கடைத்தொகுதியை உள்ளடக்கியதாக ஒரு சிறிய வரைபடத்தை நகர அபிவிருத்திகான வரைபடமாக காட்டப்பட்டது.
நான் கொண்டு வந்த திட்டமோ காரைதீவில் தொடங்கி மாவடிப்பள்ளி சம்மாந்துறை மற்றும் நாவிதன்வெளி பிரதேசங்களையும் இணைத்துக்கொண்டு கல்முனை நீலாவனை வரைக்கும் இந்த நகரத்தை கொண்டு சென்று விஸ்தரிப்பு செய்கின்ற ஒரு பாரிய வேலைத்திட்டமாகும்.
கல்முனை நகரை பொலிவுள்ள நகரமாக செல்வம் கொழிக்கும் நகராக உருவாக்க வேண்டும் என்கிற எனது வேண்டுதலுக்கு உரிய அக்கறை காட்டாத நிலை தோன்றியது. அத்தகையதொரு சந்தர்ப்பத்தில்தான் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியோடு முரண்பட்டுக் கொண்டு விலகி சிறிது காலம் ஒதுங்க வேண்டியிருந்தது.
அவ்வாறு இருக்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்களிடமிருந்து ஐக்கிய தேசிய காட்சியோடு இணையுமாறு நேரடி அழைப்பு வந்தது. அந்த சந்தர்பத்திலேதானே தனிநபராக ரணில் விக்ரமசிங்கவோடு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தானது. அதில் மிக்கப் பிரதானமானது பாராளுமன்ற தேர்தலில் 2 சிங்கள வேட்பாளர்களை நிறுத்துதல், இதன் மூலம் மூன்றாவது முஸ்லீம் வேட்ப்பாளருக்கான சந்தர்ப்பத்தினை வழங்கி முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தல்.
அடுத்து எனது முக்கியமான கோரிக்கைதான் கல்முனை நகர அபிவிருத்தி அதிகார சபையை உருவாக்குதல் வேண்டும் என்பதாகும். ரணில் விக்ரமசிங்க அவர்களை அன்று கல்முனைக்கு அழைத்து வந்து இந்த திட்டத்தினை விளக்கினேன். பல தடவை எனது அழைப்பில் கல்முனைக்கு வந்த போதிலெல்லாம் கல்முனை நகரை கட்டியெழுப்பும் திட்டத்தினையே பிரஸ்தாபிப்பார்.
எனக்கு பின்னரும் இங்கு பல அரசியல் தலைமைகள் கல்முனைக்கு ரணிலை அழைத்து வந்திருந்தனர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கல்முனை நகரை அபிவிருத்தி செய்வதற்கு அதிகார சபையை உருவாக்குவேன் என்று கூறிச் சென்ற வரலாறுகளே காணப்பட்டது.
தொடர்ந்து 2001ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகும் சந்தர்ப்பம் கிட்டியது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் தான் எனது நகர அபிவிருத்தி அதிகார சபை உருவாக்கத்தை மிகவும் துல்லியமாக வடிவமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அன்று நகர அபிவிருத்தி அதிகார சபை அமைச்சராக இருந்த எம்.எச். முஹம்மத் அவர்களை அனுகி அமைச்சரவை பத்திரத்தை தயார் செய்து அதனை கல்முனையில் நிறுவ போதிய இடவசதி இல்லாதிருந்த சூழ்நிலையில் சகோதரர் Dr. ஆரிபின் இல்லத்தை வாடகைக்கு எடுத்து திறந்து வைக்க உரிய அமைச்சரை அழைத்து வர ஏற்பாடுகளை செய்தேன்.
இதனை அறிந்துகொண்ட ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தரப்பினர் இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையிலும் திறப்பு விழாவினை தடுத்து நிறுத்தவும் கோரி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து அச்சுறுத்தினர், நகர அபிவிருத்தி அமைச்சர் எம்.எச். முஹம்மத் கல்முனைக்கு மயோனின் அழைப்பில் சென்றால் அரசில் இருந்து உடனடியாக விலகுவோம் என ரணிலை பயம் காட்டினார்.
இவர்களின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்த ரணில் விக்கிரமசிங்க அடுத்த கனமே என்னை தொடர்புகொண்டு "சொறி மயோன்" முஸ்லீம் காங்கிரஸ் தரப்பினர் எமது அரசில் இருந்து விலகபோவதாக சொல்கின்றனர். நகர அபிவிருத்தி அமைச்சர் கல்முனைக்கு வரக்கூடாது என்று கூறுகின்றனர், எனவே நீங்களே நகர அபிவிருத்தி காரியாலத்தை திறந்து வையுங்கள் என்ற அந்த வேண்டுகோளை அடுத்து மிகவும் பொறுமையோடு நானே அன்று அதனை திறந்து வைத்தேன்.
அன்றய ரணில் விக்ரமசிங்கவின் இருவருட ஆட்சி யாருக்கும் எந்தத் தொழிலும் வழங்காமல் உலக நாடுகளில் பட்ட கடனை அடைக்க வேண்டும் என்று பட்டினியில் கிடந்த காலமாகும். அத்தகைய சந்தர்ப்பத்தில் தான் நான் இந்த அலுவலகத்தை உருவாக்கி சதாத் என்பவரை அதன் இணைப்பாளராக நியமித்து வாகன வசதியையும் பெற்றுக் கொடுத்து ஆரம்பித்து வைத்தது வரலாறாகும்.
இந்த அலுவலகம் கல்முனை நகருக்கு மாத்திரம் உரியதல்ல. இதனை முழு கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகமாகவே இங்கு கொண்டு வந்தேன். கிழக்கு மாகாணத்தின் அத்தனை திட்டமிடல்களும் நடைபெறுகின்ற ஒரு இடமாக இந்த நகர அபிவிருத்தி காரியாலத்தை வடிவமைத்தேன்.
கல்முனை பிரதேசத்தின் முழுமையாக Master plan வரைபடத்தை செய்கின்ற வேலை திட்டத்தை ஒவ்வொரு வாரமும் கிரமமாக கூட்டங்களை நடத்தி புதிய நகரத்தினுடைய பஸ் தரிப்பு நிலையம், பொதுச்சந்தை, விளையாட்டு மைதானம், பூங்காக்கள், நூலகம், அரச வர்த்தக கட்டிடம், அரசு அலுவலக கட்டிடங்கள், குடியிருப்பு நில ஒதுக்கீடு, கழிவுநீர் வடிகாலமைப்பு திட்டம், விவசாய நிலங்களுக்கான ஒதுக்கீடு போன்ற பல விடயங்களை என்னால் திட்டமிட முடிந்தது. துரதிர்ஷ்டவசமான எனது அரசியல் இடைவெளி காரணமாக இவை அனைத்தும் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளன.
இப்போது இந்த அலுவலகம் தரம் குறைக்கப்பட்டு மாவட்ட காரியாலயமாக மாற்றப்பட்டு, பின்னர் மாவட்ட காரியாலயத்தின் ஒரு பிரதேச உப காரியாலயமாக தற்போது கல்முனை மாநகர வளாகத்தின் ஒரு சிறிய பிரிவில் இயங்கிக் கொண்டுவருகிறது.
இதனை முழுமையான அதிகாரம் மிக்க அலுவலகமாக மீண்டும் கொண்டுவந்து இந்த பிராந்திய மக்களின் அடிப்படை வசதிகளையும் அதனோடு இணைந்த உள்ளக கட்டமைப்பையும் பரந்துபட்ட அடிப்படையில் உருவாக்கக்கூடிய சக்தி என்னிடம் இருக்கிறது, அல்ஹம்துலில்லாஹ்.
எதிர்காலத்தில் எனக்கு அதிகாரம் கிடைக்கும் போது நிச்சயம் இதனை மீளவும் கொண்டு வருவேன் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் திடமான நம்பிக்கையுடன் தெரிவிக்கிறேன்.
