மினியாபிலிஸ் நகரில் பிளாய்டு என்ற கருப்பினத்தவர் கடந்த 25-ம் தேதி போலீசார் பிடியில் கொல்லப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
பிளாய்டு கொலையில் தொடர்புடையதாக பணிநீக்கம் செய்யப்பட்ட நான்கு காவலர்கள் மீதும் கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அட்டர்னி ஜெனரல் அறிவித்துள்ளபோதும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
நியூயார்க் நகரில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி ஆயிரக்கணக்கானோர் மிதிவண்டியில் பேரணி சென்றனர். நியூயார்க் சிட்டி வீதியில் போராட்டக்காரர்கள் ஒன்று கூடி ஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு நீதி கேட்டு முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றனர்.
நியூயார்க் நகர மேயர் அலுவலகம் முன் மூன்றாவது நாளாக நூற்றுக்கணக்கானோர் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது இளம்பெண் உட்பட இருவர் பிளாய்டு மரணத்தை நினைவுகூறும் வகையில் முழங்காலால் மண்டியிட்டு போராட்டத்தை முன்னெடுத்தனர்,
காவலர்கள் பிடியில் பிளாய்டு அனுபவித்த துன்பத்தை சித்தரிக்கும் வகையில் சீட்டெல் நகரில் நூற்றுக்கணக்கானோர் கைகளை பின்புறமாக வைத்து சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜார்ஜ் பிளாய்டு படுகொலை செய்யப்பட்ட மினியாபிலிஸ் நகரில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் ஹாலிவுட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது காவலர் பிடியில் பிளாய்டு சித்தரவதை அனுபவித்ததை நினைவுபடுத்தும் வகையில் 8 நிமிடங்கள் 46 வினாடி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது
தெற்கு கலிபோர்னியாவில் கடற்கரை பகுதியில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று இன பாகுபாடுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
அமைதி வழியில் போராட்டத்தை முன்னெடுத்து வருவதால் லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
இதேபோன்று கருப்பினத்தவர்களுக்கு ஆதரவாக நியூயார்க் நகரில் சுகாதாரப் பணியாளர்கள் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.