'தமிழர்களின் உறவுப்பாலம் சரிந்தது': கலாநிதி ஜனகன்..!


லங்கை - இந்திய தமிழர்களின் உறவுப்பாலமாகச் செயற்பட்டதோடு, மலையக மக்களின் விடிவுக்காகவும் தொடர்ந்து சிம்மக் குரலெழுப்பிக் கொண்டிருந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு, தமிழ் மக்களின் அரசியல் பரப்பில் ஈடிணையற்றதென ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியில் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான கலாநிதி வி.ஜனகன் கவலை தெரிவித்தார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், உடல்நலக் குறைவு காரணமாக, தனது 56ஆவது வயதில் நேற்று (26) இரவு மரணமடைந்தமை தொடர்பில், தான் வௌியிட்டுள்ள இரங்கல் செய்திலேயே கலாநிதி ஜனகன், இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்விரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்,
“தன்னுடைய 21ஆவது வயதில் அரசியலுக்குள் கால்பதித்த அமரர் ஆறுமுகன் தொண்டமான், 56 வயதுவரை ஓயாமல் உழைத்த ஒரு பெரும் தமிழ்த் தலைவர். 1964ஆம் ஆண்டு பிறந்த ஆறுமுகன் தொண்டமான், 1985 காலப்பகுதியில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பிரத்தியேக செயலாளராக அரசியலுக்குள் முதற் பிரவேசத்தை மேற்கொண்டார். அதன் பின்னர், 1994ஆம் ஆண்டு ஓகஸ்ட் 16இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கிய ஆறுமுகன் தொண்டமான், 75 ஆயிரத்து 297 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் தெரிவானார். அன்றிலிருந்து இன்றுவரை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அங்கம் வகிக்கும் தமிழ்த் தலைவராக ஆறுமுகன் தொண்டமான் திகழ்ந்தார். 1999 ஒக்டோபர் 30ஆம் திகதி, சௌமியமூர்த்தி தொண்டமான் உயிரிழந்ததையடுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப் பதவியையும் ஆறுமுகன் பொறுப்பேற்றார்.
“26 வருட நாடாளுமன்ற பயணத்தில் இலங்கை வாழ் தமிழர்களின் உறவுப் பாலமாக மாத்திரமன்றி, இலங்கை - இந்தியத் தமிழர்களின் உறவுப் பாலமாகவும் அமரர் ஆறுமுகன் தொண்டமான் திகழ்ந்திருக்கிறார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடக்கம், அனைத்துத் தமிழர் தலைவர்களுடனும் நெருக்கமான உறவைப் பேணிவந்தார். இலங்கை அரசியலில், மலையகத் தமிழ் மக்களின் விடிவுக்காக எப்போதும் சிம்மக்குரல் எழுப்பி வந்த பெருந் தலைவனின் இளவயது இழப்பு, தமிழர் அரசியலில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
“அரசியல் ரீதியாக, இளவயதிலிருந்து பயிற்றப்பட்ட அமரர் ஆறுமுகன் தொண்டமான், தன் மகனான ஜீவன் தொண்டமானையும் இளவயதில் அரசியல் களத்தில் இறக்கியமை வரவேற்புக்குரியது. இளம் சந்ததியின் கைகளில் தமிழர் அரசியல் எதிர்காலத்தைக் கையளிக்க வேண்டுமென்ற அமரர் தொண்டமானின் கனவு நனவாக வேண்டும். ஜீவன் தொண்டமான் என்னுடைய நெருங்கிய நண்பன் மாத்திரமன்றி, கல்வித் துறையில் சாதிக்கத் துடிக்கும் நல்ல இளைஞனும்கூட. தன் தந்தையின் வழித்தடத்தை ஜீவன் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
“தமிழர்களுக்கு ஒரு பிரச்சினையென்றால் பிரதேசம் பாராது தன் எதிர்ப்புக் குரலைக் கொடுப்பதற்குப் பின்னின்றவரில்லை அமரர் தொண்டமான். அத்தகைய தமிழ்த் தலைவனின் மரணத்தைக் கேள்விப்பட்டவுடன் தலைவர் மனோ கணேசனுடன் தலங்கமை வைத்தியசாலைக்கு நேரடியாகச் சென்று எமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினோம். அவரைச் சுற்றியிருந்த இளம் சந்ததியின் கண்களில், அமரர் ஆறுமுகன் தொண்டமானின் கனவுக் கணைகள் தெறிப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. அவரின் கனவு மெய்ப்பட வேண்டும்.
“ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் பிரிவால் துயருறும் குடும்பத்தவர்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அரசியலுக்கு அப்பால், நல்லதொரு மனிதத்தை இழந்திருக்கிறோம். இளவயது இளப்பு ஏற்புடையதல்ல. இருப்பினும், தான் வழிகாட்டிய இளைஞர்கள் நிச்சயமாக அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இலட்சியப் பயணத்தைத் தொடர்வார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது. அன்னாரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கிறேன்”
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -