தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்தின் கீழ் விவசாய அமைச்சு மற்றும் விவசாய திணைக்களம் என்பன இணைந்து 'கொரேனாவை கட்டுப்படுத்துவோம் உணவு பற்றாக்குறையை வெற்றி கொள்வோம்' எனும் வேலைத்திட்டத்திற்கமைவாக சவளக்கடை கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் கீழுள்ள அன்னமலை விவசாய விரிவாக்கல் நிலையத்தினால் நிலக்கடலை செய்கையாளருக்கு நிலக்கடலை விதைகள் இலவசமாக நேற்று வழங்கி வைக்கப்பட்டது.
அம்பாரை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீரின் வழிகாட்டலில் அன்னமலை விவசாய விரிவாக்கல் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.சசிகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விவசாய திணைக்களத்தின் அம்பாரை மாவட்ட கரையோர களப்பயிர் செய்கையின் படவிதான உத்தியோகத்தர் எஸ்.எச்.ஏ.நிஹார் கலந்து கொண்டு நிலக்கடலை செய்கையாளருக்கு விதைகளை வழங்கி வைத்தார். இதில் விவசாய போதனாசிரியர் எம்.எஸ்.எம்.ஜெனித்கான், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தேசிய உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கடலை, உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட 15 வகையான உணவுப் பொருட்களை உள்ளுரிலேயே உற்பத்தி செய்து பொது மக்களுக்கு வழங்கும் நோக்குடனேயே இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.