மசகு எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபெக் முடிவு - எரிபொருளின் விலையும் உயர வாய்ப்பு!


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
லகெங்கிலும் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலிலுள்ளது. வாகன போக்குவரத்து பெருமளவு முடங்கியுள்ளது. அனைத்து நாடுகளிலும் விமானங்கள் ஓய்வெடுத்து வருகின்றன. அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை தவிர்த்து, மற்ற தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் எரிபொருளின் தேவை 60 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளது.

எனவே மசகு எண்ணெய் தேவையை காட்டிலும் உற்பத்தி மற்றும் தேக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மசகு எண்ணெயின் விலை பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனை சரிசெய்ய உற்பத்தியை குறைப்பது மட்டுமே ஒரே வழி என மசகு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் கருதின. சவுதி அரேபியாவும், ரஷ்யாவும் மசகு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் முதன்மையான நாடுகளாகும்.
எனவே உற்பத்தியை குறைப்பது தொடர்பாக சவுதி அரேபியா தலைமையிலான எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (ஒபெக்) ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மசகு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் முடிவில் இருந்து பின்வாங்கப்போவது இல்லை என்று ரஷ்யா அறிவித்ததே இதற்கு காரணமாகும்.
ரஷ்யாவின் இந்த முடிவு சவுதி அரேபியாவுக்கு அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. ரஷ்யாவின் வழியிலேயே சென்று அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாமும் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கப்போவதாக சவுதி அரேபியா அறிவித்தது. சவுதி அரேபியா-ரஷ்யா இடையேயான உற்பத்தி போட்டி காரணமாக எண்ணெய் விலை உலக சந்தையில் கடுமையாக குறைந்தது. இது எண்ணெய் சந்தையில் வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தும் என பிற உற்பத்தி செய்யும் நாடுகள் தனது கவலையை தெரிவித்தது.
இந்நிலையில் ஒபெக் மற்றும் அதன் கூட்டணி நாடுகள், நேற்று முன்தினம் இரவு காணொளி காட்சி மூலம் அவசர ஆலோசனை நடத்தின. இதில் உற்பத்தியை குறைக்கும் விவகாரத்தில் ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, நேற்று காலை மீண்டும் நடந்தது. இறுதியாக எண்ணெய் உற்பத்தியை குறைக்க ரஷ்யா ஒப்புக்கொண்டது. அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் வரை நாளொன்றுக்கு, ஒரு கோடி பீப்பாய் (ஒரு பீப்பாய் 158.9 லிட்டர்) அளவிற்கு உற்பத்தியை குறைக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும் ஜூலை மாதத்துக்கு பிறகு இந்த வருடம் முடியும் வரை நாளொன்றுக்கு 80 லட்சம் பீப்பாய்களும், 2021ம் ஆண்டு முதல் அடுத்த 16 மாதங்களுக்கு நாளொன்றுக்கு 60 லட்சம் பீப்பாய் உற்பத்தியை குறைக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆனால் ஒரு கோடி பீப்பாய் அளவு உற்பத்தி குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேச்சுவார்த்தையிலிருந்து மெக்சிக்கோ வெளியேறியது. எனினும் மெக்சிக்கோ அனுமதியளித்தால் மட்டுமே உற்பத்தியை குறைக்கும் நடவடிக்கை அமுலுக்கு வரும் என சவுதி அரேபியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஆனால் மெக்சிகோ உடனடியாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனினும் உற்பத்தியை குறைக்கும் நடவடிக்கைக்கு மெக்சிகோ அனுமதியளிக்கும் என சர்வதேச நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்படி எண்ணெய் உற்பத்தி நாளொன்றுக்கு ஒரு கோடி பீப்பாய் அளவில் குறைக்கப்படும் பட்சத்தில் எரி பொருளின் விலை கணிசமாக அதிகரிக்கும் என தெரியவருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -