நுவரெலியா பிரதேச சபை மூலம் 24 இலட்சம் பெறுமதியான நிவாரணப்பொருட்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம் ஆனால் அந்த நிவாரண பொருட்களை வழங்க முற்படும் போது மத்திய மாகாண ஆளுனர் மற்றும் பிரதேச சபை ஆணையாளர் இவற்றினை வழங்குவது என்றால் மக்களிடன் அவற்றுக்கான பெறுமதியினை பெற்றுக்கொண்டு வழங்கவேண்டும் என தெரிவித்ததன் காரணமாக அவை கடந்த 25 ம் திகதி முதல் எமது பிரதேச சபையில் தேங்கிக்கிடந்தன.இது தொடர்பாக ஊடகங்கள் மூலம் நான் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தினேன் இந்நிலையிலும் இதற்கு அனுமதி கிடைக்காததன் காரணமாகவும் குறித்த உலர்உணவுப்பொருடகள் அழிவடையும் அபாயத்தினை எட்டியுள்ளதாலும் இது தொடர்பாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களுக்கு அறிவித்துவிட்டு இந்த உலர் உணவுப்பொருட்களை மிகவும் வறிய குடும்பங்களுக்கு இலவசமாக பெற்றுக்கொடுத்தேன்.
நான் செய்தது பிழையென அரசாங்கம் கருதினால் எந்தத்தண்டனையினையும் ஏற்றுக்கொள்ளத்தயார் என நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலு யோகராஜ் தெரிவித்தார்.
கடந்த 12ம் திகதி நுவரெலியா பிரதேச சபையில் உலர் உணவுப்பொருட்கள் தேங்கிக்கிடப்பதாகவும் இவை அழிவடையும் நிலையின் காணப்படுவதாகவும் ஊடகங்களில் சுட்டிக்காட்டியதனை தொடர்ந்து இன்று குறித்த பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகித்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மலையகப்பகுதியில் வாழும் மக்கள் வறட்சி காரணமாகவும் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அனர்த்தம் காரணமாகவும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். இந்நிலையில் நான் பிரதேச சபையின் ஊடாக மக்களி;ன் வரிப்பணத்தில் 24 இலட்சம் ரூபாவுக்கு உலர்உணவுப்பொருட்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தேன்.
ஆனால் இது தொடர்பாக ஆளுனர் அவர்கள் மக்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டுதான் பொருட்களை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கூறியதால் இதனை வழங்கமுடியாத நிலை உருவானது.இந்நிலையில் மக்களிடமிருந்து பணத்தினை பெற்று பொருட்களை வழங்குவதும் சிரமமான காரியம் என்பதால் ஏற்பட்டுள்ள நிலை தொடர்பாக ஆறுமுகன் தொண்டமான் அவர்களை தெளிவுபடுத்தியதனை தொடர்ந்து அவர் அப்பொருட்களை மக்களுக்கே பகிர்ந்தளிக்குமாறு தெரிவித்ததனையடுத்து நேற்றும் இன்றும் பொருட்களை பகிர்ந்தளித்துள்ளேன்.இந்த பொருட்களுக்கான நிதியினை என்னிடமிருந்து அரசாங்கம் அறவிடுமானால் அதனை செலுத்த தயாராகவே இருக்கின்றேன்.இந்தப்பொருட்களை நான் மக்களுக்காகவே கொடுத்திருக்கின்றேன் மக்கள் நான் செய்யும் சேவைகளை நன்கு அறிவார்கள் ஆகவே மக்கள் சேவையை செய்ததற்காக எவ்வாறான தண்டனையும் அனுபவிக்க தயாராக இருக்கிறேன்.அதற்காக நான் ஒருபோதும் தயங்கப்போவதில்லையென அவர் மேலும் தெரவித்தார்.
