கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின்கீழ் இயங்கி வரும் மீராவோடை ஹிதாயா விளையாட்டுக் கழகத்தினர் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியொன்றினை நடாத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த சுற்றுப் போட்டி கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிற்போடப்பட்டுள்ளது என்று கழக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காரணத்தினால் அன்றாடம் கூலித் தொழிலில் ஈடுபட்டு வந்த பலர் தொழிலின்றி வீட்டில் முடக்கப்பட்ட நிலையில் கஷ்டத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இதனைக் கருத்திற்கொண்ட கழகத்தினர் கழக நிதியிலிருந்து முதற்கட்டமாக ஐம்பது வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை திங்கட்கிழமை (6) வழங்கி வைத்தனர்.
எமது கழகம் விளையாட்டோடு மாத்திரம் நின்றுவிடாமல் சமூகப்பணிகளில் பல்வேறு முன்னெடுப்புக்களை எதிர்காலத்தில் மேற்கொள்ள உள்ளது என்று கழக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இதன் தொடரில் இரண்டாம்கட்ட உலர் உணவு வழங்கும் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம் என்றும் கழக உறுப்பினர்கள் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
