கட்டங்கட்டமான தேர்தல் முஸ்தீபை சாடுகிறார் நஸிர் அஹமட்!
கொரானா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களது சிந்தனையில் பொதுத் தேர்தல் பற்றிய எண்ணங்கள் எதுவும் இல்லை. இந்நிலையில் கட்டங்கட்டமாகப் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என ஆலோசனை முன் வைக்கப்படுவதும் இதற்கான முஸ்தீபுகள் மேற்கொள்ள படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இவ்வாறான நடைமுறையானது செயற்படுத்தப்படும் பட்சத்தில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படும் என்பதே நிதர்சனமானது.
இவ்வாறு தெரிவிக்கின்றார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீல. முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸிர் அஹமட்.
அது விடயமாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவ தாவது:-
நாட்டின் இன்றைய நிலை பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றது. நாளாந்தம் கொரானா நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதுடன் மரணங்களும் அதிகரித்துள்ளன. இந்த நிலைமையானது மக்கள் மத்தியில் தொடர்ந்தும் அச்சத்தையே ஏற்படுத்தி வருகின்றது. அவர்கள் தற்போது அரசியலை பற்றி சிந்திக்கும் நிலையில் இல்லை. தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் அவர்கள் வாக்களிக்க முன்வருவார்களாக என்பது கூட கேள்விக்குரியது.
அரசு அடாவடியாகத் தேர்தலை நடத்தினாலும் வாக்களிப்பு வீகிதம் குறையும். இத்தகைய நிலை அரசுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். இது ஜனநாயகத்தை கேள்விக் குறியாக்கும் விடயமாகும். இத்தகைய நிலைமை ஏற்பட தேர்தல் ஆணைக்குழு ஒருபோதும் அனுமதியளிக்கக்கூடாது.
நாட்டில் சுமூகமான நிலை ஏற்பட்டவேண்டும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். ஓட்டோ ஒட்டுநர்கள், நாளாந்தம் தொழில் செய்து சம்பாரிப்பவர்கள், மீனவர்கள், வியாபாரிகள். கூலித் தொழிலாளர்கள் போக்குவரத்து தரப்பினர் என அனைத்து தரப்பினரும் பழைய நிலைக்கு வரவேண்டும். இப்போது தான் அவர்கள் வாக்களிக்க முன்வருவர். அத்தோடு நாடாளாவிய ரீதியில் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தவேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கின்றது. இதனையே அனைத்து தரப்பு அரசியல்வாதிகளும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் ஐயம் இல்லை.
தேர்தலை கட்டங்கட்டமாக நடத்துவது என்பது குறிப்பாக சிறுபான்மை மக்களை பெரிதும் பாதிப்படைய செய்யும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கொரானவை கட்டுப்படுத்தி நாட்டை வளமை நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்பதே நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜையினதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இதற்கான நடவடிக்கைகளில் ஜனாதிபதியும் அரசும் முழுவிச்சாக முன்னெடுக்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாகவும் இருக்கிறது. இதனைக் கருத்தி கொண்டு செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.
