கொரோனா தொற்று ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு வலுச் சேர்க்கும் வகையில், ஆசிரியர்கள் தங்களின் ஒரு நாள் கொடுப்பனவை கொவிட் -19 சுகாதார மற்றும் பாதுகாப்பு நிதியத்துக்கு அர்ப்பணிக்க வேண்டும் என, கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
பூகோள மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும், அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து முன்னெடுத்த செயற்திட்டங்களை உலக நாடுகள் வரவேற்றுள்ளன. கொரோனா தொற்று நாட்டுக்குள் பரவலடைந்ததைத் தொடர்ந்து அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டன. இந்தத் தீர்மானத்தை உலக சுகாதார ஸ்தாபனம் ஒரு எடுத்துக்காட்டாக ஏற்றுக்கொண்டது.
கொரோனா தொற்று ஒழிப்புக்கு எதிராக அமைக்கப்பட்ட கொவிட் -19 சுகாதார மற்றும் பாதுகாப்பு நிதியத்திற்கு பல்வேறு தரப்பினர் இயலுமான நிதியுதவிகளை வழங்கியுள்ளனர். அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பு.
எனது இம்மாத முழுச் சம்பளத்தையும் நான் அந்த நிதியத்துக்கு வழங்கியுள்ளேன். அத்துடன், கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர்கள், உயர் அதிகாரிகள் தங்களின் மாதக் கொடுப்பனவை வழங்க முன்வந்துள்ளனர்.
கல்வி அமைச்சுக்குப் பொறுப்பாக 240000 ஆயிரம் ஆசிரியர்கள் சேவையாற்றுகின்றனர். அத்துடன் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் சேவையாற்றும் ஏனைய சேவையாளர்கள் உள்ளடங்களாக 3 இலட்சம் பேர் சேவை ஆற்றுகின்றனர்.
இவர்கள் அனைவரும் தங்களின் ஒரு நாள் சேவைக் கொடுப்பனவை, இந் நிதியத்துக்கு வழங்கினால் சுமார் 500 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப் பெறும். தற்போதைய நெருக்கடியான நிலையை வெற்றி கொள்ள அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
