இலங்கையில் கொவிட் -19 நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் கனடா!


கொழும்பு, ஏப்ரல் 23, 2020 – இலகுவில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய சமுதாயங்களில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு இலக்கு வைக்கப்பட்ட நிவாரணம் ஊடாக, கொவிட்-19 நோய் பரவல் சார்ந்து இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு கனடிய அரசாங்கமானது 56,000 கனடிய டொலர்களை (அண்ணளவாக ரூ. 7.5 மில்லியன்) வழங்கியுள்ளது. உள்ளுர் முயற்சிகளுக்கான கனடிய நிதியுதவித் திட்டம் ஊடாக இலங்கையின் தேசிய சமாதானப் பேரவைக்கு இந்த நிதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் கொவிட்-19 செயலணியின் சிவில் சமூகக் குழுவின் ஒரு அங்கமாக இலங்கை தேசிய சமாதானப் பேரவை உள்ளது. மாவட்ட மட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான குழுக்கள் உள்ளடங்கலாக, நாடு முழுவதும் கட்டமைக்கப்பட்ட வலையமைப்புடன், நாடு முழுவதிலும் பல மாவட்டங்களில் உலர் உணவுப் பொதிகளை தேசிய சமாதானப் பேரவை வழங்கும். பெரும்பாலானோருக்கு முடக்கம் மற்றும் 24 மணி நேர ஊரடங்கு என்பன பெரும் சவாலாகியுள்ள நிலையில், உதவி அதிகம் தேவைப்படுபவர்களுக்கு தேசிய சமாதானப் பேரவை உதவி வழங்கும்.
'முன்னெப்போதும் இடம்பெற்றிராத இந்த உலகளாவிய நெருக்கடிக்கு பதிலளிப்பதில் இலங்கையில் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களைச் சேர்ந்தவர்களின் முயற்சியால் நான் ஈர்க்கப்பட்டேன்' என இலங்கைக்கான கனடாவின் உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் தெரிவித்தார். 'இந்த நோயையும் அதன் கடுமையான பொருளாதார தாக்கங்களையும் எதிர்த்துப் போராடும்போது இலகுவில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு, கனடாவின் ஆதரவின் மூலம் உதவ எதிர்பார்க்கின்றோம். பல்வேறு சமூகங்களுடனும், நாடு முழுவதும் அடையாளங் காணப்பட்ட தேவைக்கு விரைவாக பதிலளிப்பதற்கு தேசிய சமாதானப் பேரவையுடன் பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கொவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு பதிலளிப்பாக, மற்றும் சமூகத்தில் நம்பிக்கையை கட்டியெழுப்பல் மற்றும் இன மற்றும் மத குழுக்களுக்கு இடையில் உறவுகளை வலுப்படுத்தும் தமது பணிநோக்கத்தினைத் தொடர்வதற்கு, நாடு முழுவதிலும் உள்ள பங்காளர் வலையமைப்பு மற்றும் அரச அதிகாரிகளினால் அடையாளங் காணப்பட்ட நிறுவனங்கள், நலிந்த தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்குவதன் மூலம் நெருக்கடி தணித்தல் இடையீடுகளில் தேசிய சமாதானப் பேரவை ஈடுபடும். மாற்றுத்திறனாளிகள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், கைவிடப்பட்டோர் இல்லங்கள், நீண்ட கால பராமரிப்பு இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களும் இதில் உள்ளடங்கும்.
'மக்கள், இனங்கள், மதங்கள், பிராந்தியங்கள் மற்றும் நாடுகளில் இந்த நேரத்தில் ஒற்றுமைக்கான தேவையுள்ளது. கனடாவின் உதவியுடன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவதற்கான இந்த திட்டத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்' என தேசிய சமாதானப் பேரவையின் நிர்வாகப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் இன மற்றும் மத பிரிவுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் எனவும், எதிர்கால ஒருங்கிணைப்பை அது ஊக்குவிக்கும் தேசிய சமாதானப் பேரவை நம்புகிறது. எப்போதும் போல, கனடா ஒரு வளமான, உள்ளடக்கமான மற்றும் ஆரோக்கியமான இலங்கைக்காக உள்ளுர் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமைப்படுகிறது.


ஆசிரியர்களுக்கான குறிப்பு:

உள்ளுர் முயற்சிகளுக்கான கனடா நிதியுதவித் திட்டம் குறித்த தகவல்களை இந்த, இணைய முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.

கொவிட் -19 தொடர்பான நிதிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனங்கள் விண்ணப்ப படிவம் மற்றும் தகுதி பிரமாணங்களை அறிந்து கொள்வதற்கு CFLIColombo@international.gc.ca என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும் நேரடி மருத்துவத் தேவைகள் மற்றும் தொற்றுநோய் தொடர்பான தலையீடுகள் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் நாங்கள் நிதியளிக்க மாட்டோம் என்பதை நினைவில் கொள்க.

மேலும் தகவலுக்கு, ஊடக பிரதிநிதிகள் தொடர்பு கொள்ள வேண்டியது:
இந்திராணி ஜெயவர்தன
அரசியல் அதிகாரி
கனடா உயர்ஸ்தானிகராலயம்
33 A, 5வது ஒழுங்கை, கொழும்பு 03
@CanHCSriLanka
தொலைபேசி: 522 6232 Ext: 320 3352
மின்னஞ்சல்: indirani.jayawardena@international.gc.ca







எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -