ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா வனராஜா கீழ் பிரிவு பாடசாலைக்கு நீண்ட நாட்களாக விளையாட்டு மைதானம் இல்லாததன் காரணமாக தங்களது பிள்ளைகள் விளையாடுவதற்கு இடமின்றி பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்துள்ளனர்.
தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரை உள்ள இந்த பாடசாலையில் வனராஜா கீழ் பிரிவு,சவுத் வனராஜா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 90 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
இப்பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் ஒன்றினை அமைத்து தருமாறு பெற்றோர்கள் அரசியல் தலைவர்களிடமும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடமும் கேட்டு கொண்ட போதிலும் அது சாத்தியப்படவில்லை.
இந்நிலையில் ஏனைய மாணவர்களை போல் தங்களது பிள்ளைகளும் சகல வசதிகளுடன் கற்க வேண்டும் என்று எண்ணிய பெற்றோர்கள் வறுமைக்கு மத்தியில் தாங்கள் பெறும் தங்களது நாட் சம்பளத்த்னை தியாகம் செய்து விளையாட்டு மைதானத்தினை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த நாட் சம்பளத்தின் மூலம் வழங்கப்பட்ட பணம் ஒப்பந்தக்காரருக்கு உடனடியாக பெற்றுக்கொடுக்க முடியாததன் காரணமாக அந்த பணம் தோட்ட நிர்வாகத்தில் இருந்து கிடைக்கும் வரைக்கும் தங்களது தங்க நகைகளை அடகு வைத்து ஒப்பந்த காரருக்கு பணம் செலுத்தியுள்ளனர்.
எமது நாட்டின் வளப்பகிர்வுகள் முறையாக கிடைக்காததன் காரணமாக ஒரு சில மாணவர்களுக்கு ஏனைய மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் சலுகைகள் கிடைக்காதிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமே.
எனவே அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில் திட்டங்கள் முன்னெடுக்க வேண்டியது பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் கடமையல்லவா?

