மஹிந்த – அதாவுல்லாஹ்வின் கூட்டு முயற்சியே சாய்ந்தமருது நகரசபை பிரகடனம்.


எம்.எம்.எம்.நூறுல்ஹக்
சாய்ந்தமருது – 05-
சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி மன்றம் வேண்டும் என்ற கோரிக்கையும் அதற்கான போராட்டங்களும் சுமார் 33 வருடங்கள் தொடர்ந்த ஒரு பெருந்துயர்கதையாகும். அன்று இந்த உள்ளுராட்சி மன்றம் வருமா? வராதா என்ற பிரதிவாதங்கள் தொடந்த வண்ணம் இருந்தன. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாற்போல் கடந்த 14.02.2020 வெளிவந்த அதிவிஷேட வர்த்தமானியில் சாய்ந்தமருதுக்கு நகரசபை பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. அதுவும் இன்று கேள்விக்குறியாக மாறி இருக்கிறது மட்டுமன்றி வர்த்தமானி இன்னும் வலுவிலிருக்கிறதா? இல்லையா என்கின்ற அடுத்த பிரதிவாதமாக இது இன்று பெருக்கெடுத்துக் கொண்டது.

சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றக் கோரிக்கைக்குப் பின்னால் 33 வருட காலம் இருந்தாலும் மஹிந்த, பஷில் தரப்பின் பக்கம் சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றக் கோரிக்கை நேரடியாகப் பேசப்படும் சந்தர்ப்பம் வாய்த்தது என்பது கடந்த ஜனாதிபதித் தேர்தல் (2019) காலத்திற்கு அண்மித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையை அரசியல் ரீதியாக முன்வைக்கப்பட்ட வரலாற்றை நோக்கினால், முறையே முன்னாள் அமைச்சர்களான ஏ.ஆர்.எம்.மன்சூர் 1988-1994 வரையும் எம்.எச்.எம் அஷ்ரஃப் 1989-2000 வரையும் நமதூரின் உள்ளுராட்சி மன்றக் கோரிக்கை செயற்பாட்டாளர்கள் முன்வைத்திருந்தனர். (இங்கு மன்சூரின் காலம் அவரது எம்.பிக் காலத்தை சுட்டுவதல்ல.) கடந்த 2000 இலிருந்து 2019 ஒக்டோபர் வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்திடமும், சிறிய காலம் அமைச்சர் றிஷாத் பதியூதினிடமும் இக்கோரிக்கையின் செயற்பாட்டாளர்கள் தங்கி நின்றனர். இதற்குப் புறநடையாக 2006களில் அமைச்சர் அதாவுல்லாஹ்வுடன் இது பற்றி பேசுவது என்று ஒரு குழுவினர் நியாயமான காரணங்களை முன்வைத்து செயற்பட்டனர்.

இந்த இடத்தில் 2004-2015 வரை அமைச்சராக இருந்த அதாவுல்லாஹ் மஹிந்த அணியாக இருந்தும் அவர்களிடம் அது பற்றிப் பேசவில்லை. அதேநேரம் சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையின் முழுச் செயற்பாட்டாளர்களாக அன்றைய காலகட்டத்தில் இயங்கிய மறுமலர்ச்சி அமைப்பினர் அதாவுல்லாஹ் சார்பானவர்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான இவ்வூரின் பெரும் பகுதியினர் தமது அரசியலை முன்னகர்த்தினர். அதேநேரம் சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி மன்றம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாகவே சாத்தியமாகும் என்ற பொய்யான நம்பிக்கை மீது நமதூரும் கட்டுண்டு கிடந்தது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் (2019) காலகட்டத்தில்தான் மஹிந்த, பஷில் தரப்பினரிடம் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்றக் கோரிக்கை சரியான முறையிலும் நேரடியாகவும் முன்வைக்கப்பட்டது. இதில் முக்கிய பாத்திரம் வகித்த தரப்புக்கள் இரண்டாகும். (1) ஐக்கிய சமதானக் கூட்டமைப்பு எனும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி (2) சாய்ந்தமருது சுயேட்சைக் குழு (தோடம்பழச் சின்னத்தில் சாய்ந்தமருது பள்ளிவாசலின் ஆதரவுடன் உள்ளுராட்சி மன்றமே நமது ஊரின் தாகம் என்பதை நிரூபிக்கும் வகையில் கல்முனை மாநகர சபையில் போட்டியிட்டு வெற்றிபெற்ற) அணி. இவ்விரு தரப்பினர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி மன்றம் தர வேண்டும் என ஒப்பந்தம் செய்து கொண்டனர். இதற்கு அப்பால் சாய்ந்தமருது ஜும்மாஆப் பள்ளிவாசலும் உள்ளுராட்சி சபைக்காக வேண்டி கோட்டாபயவை ஆதரிப்பது என்று முடிவெடுத்து பகிரங்கமாக அறிவித்திருந்தது.




சாய்ந்தமருது பள்ளிவாசலின் ஆதரவுடன் களமிறங்கிய தோடம்பழம் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை அணியினர் சுமார் 13000 வாக்குகள் ஐனாதிபதித் தேர்தலில் தருவோம் என்ற வாய்மொழி மூலமான இணக்கத்தையும் வழங்கி இருந்தனர். ஆயினும் கோட்டபாயவின் தேர்தலில் இவ்வூர் மக்கள் சுமார் 4000-4500க்குட்பட்ட வாக்குகளையே அளித்திருந்தனர். இதற்கப்பால் முழு நாட்டிலும் வாழும் முஸ்லிம்களில் பெரும் பகுதியினர் சஜித்தை ஆதரிப்பது என்ற கருத்தில் பிடிவாதமாக இருந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில் பெரும்பாலான முஸ்லிம்களின் முடிவை எதிர்த்து சாய்ந்தமருது பள்ளிவாசல் எடுத்த முடிவு மஹிந்த - கோட்டாபய அணிக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இருந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இராது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது மஹிந்த, பஷில் ஆகியோர் சாய்ந்தமருதுக்கு வெவ்வேறு சந்தர்ப்பத்தில் வருகை தந்து, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அந்தச் சமயங்களில் இருவராலும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை தருவது என்ற உறுதி மொழியையும் பகிரங்கமாகத் தந்திருந்தனர். இதனடிப்படையில் தான் பிரதமர் மஹிந்த 06.02.2020இல் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில்தான் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்றத்தை வழங்குமாறு உரிய அமைச்சருக்கு விடுத்த பணிப்புரைக்கு அமைவாகவே கடந்த 14.02.2020இல் வெளிவந்த வர்த்தமானியில் சாய்ந்தமருதுக்கு நகரசபை பிரகடனம் செய்யப்பட்டது.
இக்கலந்துரையாடலில் பங்குபங்றிய முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்தான் கல்முனை விடயங்கள் தொடர்பில் தெளிவான விளக்கங்களை பிரதமர் மஹிந்த அவர்களுக்கு சுட்டிக் காட்டினார். கல்முனை விவகாரத்தை உள்வாங்கிக் கொண்ட பிரதமர் மஹிந்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனிடம் சாய்ந்தமருது நகரசபையை வழங்குமாறும் அதற்கு தேவையான அறிவுறுத்தல்களை அதாவுல்லாஹ்விடம் இணைந்து செயலாற்றுமாறும் பணித்திருந்தார். அதற்கிணங்கவே இந்த வர்த்தமானி செயலுருவம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இது இவ்வூர் மக்களின் வாக்குகளை சுவீகரித்துக் கொள்ளும் எண்ண மேலீட்டினால் நடைபெற்ற பிரகடனம் எனப் பார்ப்பதை விட, பொருந்திக்கொண்டு வாக்குறுதி அளித்த விடயமாகும். முஸ்லிம்களின் கோட்டாபய மீதான ஆதரவுத் தளம் தளர்ந்திருந்தபோது முஸ்லிம்களும் எங்களுடன் இருக்கின்றனர். அதுவும் பள்ளிச் சமூகம் கைகோர்க்கத் துணிந்த நடவடிக்கையின் நிமிர்த்தமே சாய்ந்தமருதுக்கு நகரசபை வழங்கப்பட்டதே அன்றி, தேர்தலில் இவ்வூர் மக்கள் அளித்த வாக்குகளுக்காக அல்ல. நாம் சொன்னபடி சுமார் 13000 வாக்குகள் செலுத்தவில்லை என்பதற்கப்பால் மிகக் குறைந்த தொகை வாக்குகளே இங்கு கோட்டாபயவுக்கு கிடைத்திருந்தன.
சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை கோரிக்கையை அரசியல் மயப்படுத்திய இடம் சரியானது என்பதினால்தான் நகரசபை கிடைத்தது. இதற்கு முன்னர் அணுகப்பட்ட அரசியல் உறவு இதனை சாத்தியப்படுத்த இயலாத பக்கம் சார்ந்து நின்றதும் பின்னடைவுக்கு ஒரு காரணமாக அமைந்திருக்கின்றது. ஆகவே, எமது வாக்குப் பலத்தினால் சாய்ந்தமருதுக்கான நகரசபை வர்த்தமானி பிரகடனப்படுத்தப்பட்ட தீர்வு பெறப்படவில்லை. மாறாக பிரதமர் மஹிந்த, பஷில் ஆகியோர்களின் வாக்குறுதியும், முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் பங்களிப்பு மற்றும் எமது பள்ளிவாசலின் துணிகரமான முடிவான ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாயவை ஆதரிப்பது என்பதும் இணைந்தே உதவி இருக்கிறது. இது குறித்த அதீத கவனம் நமது சாய்ந்தமருது மக்களுக்கு இருந்தாக வேண்டும்.
சாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி கிடைத்தவுடன் 'எலிக்கு மரணம் பூனைக்கு விளையாட்டு' எனும் தலைப்பிலும், கடந்த 19.02.2020 நடைபெற்ற அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவித்த சாய்ந்தமருது நகரசபை குறித்தான கூற்றுக்களை அடுத்தும் 'சாய்ந்தமருது வர்த்தமானி ரத்தின் பின்னால் உள்ள அரசியல் யதார்த்தம்' என்ற தலைப்பிலும் சட்ட முதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் இரு கட்டுரைகளை வலைத்தளம் உட்பட ஊடகங்களிலும் அதனை வெளிக்கொணர்ந்திருந்தார். இதில் நகரசபை பிரகடன வர்த்தமானி வெளிவந்ததும் எழுதிய கட்டுரையில் முன்னுக்குப் பின் அவரே முரண்படும் போக்கும், உண்மை நிலைக்கு மாறான சில பதிவுகளையும் சபைப்படுத்தி இருக்கின்றார். அவற்றில் காணப்படும் பலவீனமான வாதங்களை முதலில் அடையாளப்படுத்தி, அதற்கான நியாயங்களையும் இங்கு நோக்குவோம்.
சாய்ந்தமருது நகரசபை உருவாக்கம் குறித்தான வர்த்தமானி வெளிவந்ததும் இவ்வூர் மக்களில் சிலர் மகிழ்வை வெளிப்படுத்தும் இயல்பான பாங்கிற்கு உட்பட்ட பட்டாசு கொழுத்தியும், பால்சோறு உண்டும் மகிழ்ந்தனர். 'இதனை விடவும் விரிவாக கொண்டாடினாலும் தப்பில்லை. அடுத்த ஊருக்கு அது அநியாயமில்லாமல் இருந்தால்' என வை.எல்.எஸ்.ஹமீட் குறிப்பிடுகின்றார். ஆனால், கல்முனை மாநகர சபையின் ஆள்புலத்திலிருந்து சாய்ந்தமருது பிரிவதினால், கல்முனை-கல்முனைக்குடி, மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய ஊர்களில் வாழும் முஸ்லிம்களுக்கு எப்படி அநியாயம் ஏற்படுகிறது என்பது பற்றியோ, அல்லது சாய்ந்தமருதை அடுத்து இருக்கும் கல்முனை-கல்முனைக்குடி சார்ந்த ஊருக்கு எந்த வகையில் அநியாயம் என குறிப்பாக எந்தக் காரணத்தையும் சுட்டாது, மொட்டையாகச் சொல்வது சட்டத்தரணி என்ற பதவிக்குரிய ஒருவருக்கு முறையான நடவடிக்கை அல்லவே.
சாய்ந்தமருது மக்கள் சுமார் 33 வருடங்களாக தமக்கான உள்ளுராட்சி சபை வேண்டும் எனக் கோரி வருகின்றனர் எனும்போது நீண்டகாலம் அவர்கள் பொறுத்துத்தான் வந்திருக்கின்றனர் என்பது மிக வெளிப்படையானது. நீண்டகாலமாக காத்திருந்த மக்கள் என்ற வகையில் கிடைத்தவுடன் அதனை ஏற்க வேண்டும் என்ற உணர்வுதான் மேலோங்கும். இது இயல்பான மனித உணர்வுக்கு உட்பட்ட பண்பு என்பது யதார்த்தமானது. இதற்கப்பால் இன்னும் மூன்று மாதம் அல்ல, மூன்று வருடம் காத்திருந்தாலும் ஒரேநேரத்தில் கல்முனை மாநகர சபையை நான்கு சபைகளாகப் பிரிக்கும் நிலை அறவே வராது என்பது எமது தரப்பு நம்பிக்கை மட்டுமன்றி, வை.எல்.எஸ்.ஹமீட் சார்ந்திருக்கும் அணியினரினதும் நம்பிக்கையும் அதுவேயாகும். இதற்குச் சான்றாக அவரது மேற்படி கட்டுரையே அமைகின்றது. அதிலொரிடத்தில், 'நடக்கப் போவதென்ன? தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எல்லை விடயத்தில் உடன்பாடு எட்டப் போவதில்லை' எனச் சொல்லும் அதேநேரம் நான்காக ஒரேநேரத்தில் பிரியும்வரை சாய்ந்தமருதை காத்திருக்கச் சொல்வது முன்னுக்குப் பின் முரண்பாடானதில்லையா?

'கல்முனையில் சபையும் செயலகமும் எமக்கிருக்கிறது. இல்லாதவர்களுக்கு கல்முனையை விட்டுவிட்டு பிரித்துக் கொடுங்கள்' என்கின்ற ஒரு வாதத்தை வை.எல்.எஸ் ஹமீட் கொண்டு வருகின்றார். இல்லாதவர்கள் என்ற வகையில் சாய்ந்தமருக்கு சபையும் தமிழர்களுக்கு பிரதேச செயலகமும் கேட்டு நிற்கின்றனர். இதில் சாய்ந்தமருதுக்கு கல்முனை-கல்முனைக்குடி பகுதியில் எல்லைப் பிரச்சினை இல்லை. ஆகவே இதிலிருந்து சாய்ந்தமருது விலக்குப் பெறுகிறது. பிரதேச செயலகத்தை தமிழ் தரப்பும் சுமார் 23 வருடங்களாகக் கோரி வருகின்றனர். இவர்களோடு கல்முனை-கல்முனைக்குடிக்கு எல்லைப் பிரச்சினை இருக்கிறது. ஆகவே, இது தொடர்பில் அவசரமாக கவனம் செலுத்தி நேர்மையான தீர்வுக்கு வரவேண்டிய தேவையுடைய தரப்பான கல்முனை-கல்முனைக்குடி முஸ்லிம் தரப்பினர் ஆர்வம் இல்லாமால் இருப்பது யாருடைய பலவீனம்? சிந்தித்ததுண்டா?
இப்படி அவசரம் காட்டும் இரு தரப்பு இருந்தும் அது குறித்து கவனத்திற்கு எடுத்து தீர்வு காணும் வகையில் ஒரே மேசையில் இருந்து பேசுவதற்கு ஆர்வம் காட்டாதவர்களாக இருந்து கொண்டு, எங்களை பொறுமையாக இருங்கள் என்றோ, காத்திருக்க முடியாதா? என்றும் சாய்ந்தமருது மக்களை நோக்கி கேள்விக்கணை தொடுப்பதும் அறிவுரை பகர்வதும் நியாயமில்லாத செயற்பாடுகள் என உணர முடியாது போன்று காட்டிக்கொண்டு காலத்தை நீடித்தும், வீணடித்துக் கொள்ளும் உங்கள் எண்ணத்திற்கு நாம் இரையாக வேண்டுமா?

'கல்முனை மாநகர சபையில் தமிழ்த் தரப்பு முதல்வராக வந்தால் கல்முனைச் சந்தையில் வாடகை பாக்கி இருப்போர்கள் கடைகளை இழக்க வேண்டி வரும்' என்கின்றீர்கள் அப்படியானால் பாக்கி இன்றிக் செலுத்துவதற்கு முயற்சி எடுக்காது இப்படி கதையளந்து கொண்டிருந்தால் தீர்வு வீடு தேடி வருமா? 'அனுமதி பெறாது கடைகளை அந்த நாட்களில் கட்டி இருந்தால்', அவற்றை எப்படி உரித்துடையதாக மாற்றுவது என்று வழி தேடாது காலத்தை கடத்திக் கொண்டிருந்தால் பிரச்சினை தீர்ந்து விடுமா?

கல்முனை மாநகர சபையில் சாய்ந்தமருது பிரிந்து சென்றாலும் முஸ்லிம்கள்தான் தமிழர்களைவிட அதிகமாக இருக்கின்றனர். இது முன்னனய விகிதாசாரத் தேர்தல் முறைமை மீண்டும் வந்தாலும் சரி, தற்போதைய கலப்புத் தேர்தல் (வட்டாரம், விகிதாசாரம் இணைந்த) முறைமையாலும் முஸ்லிம்களை மேவிவிடும் வகையில் தமிழர்கள் இங்கு வாழவில்லை. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சாய்ந்தமருது தவிர்ந்து கல்முனை மாநகரத்தின் ஆட்சி தமிழர்களுக்கு கைமாறி விடாது என்பது தேர்தல் முடிவுகளினூடாக ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றது என்பதை இங்கு கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். ஆனால் 'முஸ்லிம்கள் முப்பது கட்சிகளாகப் போட்டி இடுவர்' என்கின்றார். இது தமது மக்களின் பலவீனம் அதுமட்டுமன்றி கல்முனையின் ஆட்சி அதிகாரத்திற்கு ஆபத்து என்று தெரிந்தும் முப்பதாகப் பிரியும் அவர்களுக்கு யார்தான் உதவ முடியும்?
இன்றைய ஆட்சியாளர்கள் கடும் இனவாதப் போக்காளர்கள் என்றும் தனிச் சிங்கள வாக்குகளால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 150 ஆசனங்களை கைப்பற்ற வேண்டும் என்கின்ற வியூகத்தின் வழியில் சென்று கொண்டிருக்கும் இன்றைய அரசாங்கம் சாய்ந்தமருதுக்கு நகரசபை தந்தால், அதனை மகிழ்ந்து ஏற்காது, காத்திருந்து பெறலாம் என்று சொல்வது நியாயமா? நல்லாட்சி காலத்தில்கூட இது கைகூடவில்லையே? இவை எல்லாவற்றுக்கும் அப்பால் கல்முனையில் எல்லைத் தீர்வு வராது என்கின்றார் வை.எல்.எஸ்.ஹமீட். இப்படி கருத்துரைத்த பின்னர் சாய்ந்தமருதை காத்திருக்கச் செல்வதும், கல்முனையில் மொத்தம் நாலு சபைகள் உருவாக்கப்படல் வேண்டும் என்கின்ற கருத்தெல்லாம் யாருக்குப் பயன்பாடானது? இது யதார்த்தபூர்வமான கருத்துக்கள்தானா என்று அலசுவது இவ்வூர் மக்களுக்கு அவசியமாக இருக்கிறது. காத்திருப்பது யாருக்குப் பயன் என்ற கேள்வியும் எழாமலில்லை.
சாய்ந்தமருது நகரசபை பிரகடனம் செய்யப்பட்ட வர்த்தமானி இரத்துச் செய்யப்படும் அறிவிப்பை கொண்டுள்ள மற்றொரு வர்த்தமானி பத்திரிகை வெளிவரும்வரை சாய்ந்தமருது நகரசபை உருவாக்கம் குறித்து வெளிவந்த வர்த்தமானி பத்திரிகை வலுவுடையதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தனவின் கருத்துக்களை ஊன்றி வாசித்தால் இது புரியும்.

எதிர்வரும் பொதுத் தேர்தலை அடுத்து அமையும் அரசாங்கம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினதாகவே இருக்கும். அதன் ஆயுட்காலம் ஐந்து வருடம் என்பதினால், சாய்ந்தமருது நகரசபை விடயத்தை இந்த அரசாங்கத்தினால்தான் முழுமைப்படுத்தி தர முடியும். ஆதலால் கடந்த 19.02.2020இல் நடைபெற்ற அமைச்சரவை சர்ச்சையை வைத்து மாற்றுத் தீர்வுகளைத் தேடுவது, அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு எதிரான அரசியல் செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரதிநிதிகளை நாடிச்செல்ல முனைவது ஆரோக்கியமான நகர்வுகளை சாய்ந்தமருது நகரசபை விடயத்தில் தரப்போவதில்லை.
நமது நாட்டில் சிங்கள பேரினவாதம் நாளுக்கு நாள் கூடிச் செல்லும் நிலைதான் பெருக்கெடுத்துக் காணப்படுகின்றது. இதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மட்டும் விதிவிலக்காக பயணிக்கும் தன்மையை அப்பட்டமாக காட்டுவதற்கு துணிய முடியாத ஒரு இக்கட்டும் அக்கட்சிக்குண்டு. மிக விரைவில் பொதுத் தேர்தல் அறிவிப்பு வரும் சூழல் இருப்பதினால், சாய்ந்தமருது நகரசபை குறித்து தனி முஸ்லிம் இராஜ்ஜியம் என்று வர்ணித்து எழுப்பப்பட்டிருக்கும் இன, மதவாத கருத்துக்கள் குறித்து ஏட்டிக்குப் போட்டியான எதனையும் உடனடியாக முன்னகர்த்தாது ஆறப்போடுவது தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு இன்றிருக்கும் ஆறுதலான பக்கம் என்பதையும் நமது மக்கள் சரியாகப் புரிந்து கொள்ளுதல் அவசியப்படுகின்றது. இச்சந்தர்ப்பத்தில் நகரசபை விடயத்தை முன்னிறுத்தி சாய்ந்தமருது சார்பான எந்தத் தரப்பும், ஆளும் தரப்பினை சங்கடத்திற்குள்ளாக்கும் விதத்திலான செயற்பாடுகளை முன்னெடுப்தோ, அறிக்கைகளை விடுவதோ புத்திசாதுரியமான முயற்சியல்ல.
சாய்ந்தமருது நகரசபை விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதயசுத்தியுடன் நடந்து கொண்டதாக அதன் தலைவர் றஊப் ஹக்கீம் தமது கட்சியின் 21.02.2020இல் நடைபெற்ற கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் பகிரங்கமாகக் கூறிக் கொண்டாலும், ஹரீஸ் எம்.பியின் திருகுதாளங்களுக்குள் அவரும் இரையாகிப் போனதற்கு எத்தனையோ சம்பவங்கள் ஆதரமாக இருக்கின்றன. இதற்கு அப்பால் அக்கட்சியினால் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு எதுவும் செய்ய முடியாத கையறு நிலைதான் இருக்கும் என்பதை நமது மக்கள் தெட்டத்தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

கடந்த 2015இல் கல்முனையில் நடைபெற்ற பொதுத் தேர்தல் பிரசார மேடையில் அப்போதைய பிரதமர் ரணில், தேர்தலின் பின்னர் சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி மன்றம் வழங்கப்படும் என உறுதியளித்தார். இக்கூட்ட ஏற்பாடே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான். பின்னர் 2018இல் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரசார மேடையில் இறக்காமம், மற்றும் மீராவோடை ஆகிய இடங்களில் கட்சியின் தலைவர் றஊப் ஹக்கீமே, ரணிலைக் கொண்டு பொய்யாக வாக்குறுதி அளித்தேன், அதனால் இன்று மிகவும் கஷ்டப்படுகிறேன் என்ற கருத்துப்பட உரைத்தமை பகிரங்கமானது. இது ஒன்றே சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற விவகாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் உண்மையாக ஒருபோதும் கட்சியும் அதன் தலைமைத்துவமும் இருந்தது இல்லை என்பதற்கு தக்க சான்றாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை விடவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும் அதன் தலைவரையும் சாய்ந்தமருது நகரசபை விடயத்தில் விலத்திவைக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கின்றது. கடந்த 2018 பெப்ரவரியில் நடைபெற்ற கல்முனை மாநகரசபைத் தேர்தல் பிரசார மேடையில் முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் சாய்ந்தமருது நகரசபை கோரிக்கையை கைவிட்டதாக பகிரங்கமாக அறிவித்திருந்தது நாமறிந்தது. மற்றும் சஹ்ரான் குழுவினருடன் அமைச்சருக்கு தொடர்பு உண்டு என்று பெருந்தேசியவாதிகளும் சிங்கள பேரினவாத கடும்போக்காளர்களும் குற்றஞ்சாட்டி பேசப்படும் ஒருவராகவும் இன்று இருக்கின்றார். இந்நிலையில் முன்னாள் அமைச்சரை நாம் நெருங்குவதோ, அல்லது நகரசபை கோரிக்கையை முன்னிறுத்தி அவர் எமக்கு சாதகமாகப் பேசுவதோ இந்தச் சந்தர்ப்பத்தில் மிக ஆபத்தானதாக அமையக் கூடியது. ஆகவே, இவரது உறவு சாய்ந்தமருது நகரசபை விடயத்திற்கு மிக மிக பாதகமானதாகவே அமைய முடியும்.
ஏனெனில், உண்மை இல்லாததும் பொருத்தமில்லாததும் என மிக வெளிப்படையாக நன்கறிந்த ஒன்றான சஹ்ரான் குழுவினருடன் எந்த வகையிலும் நேசவுறவு கூட இல்லாத, பகைவர்களான சாய்ந்தமருது மக்களை தொடர்புபடுத்தி, இவ்வூருக்கான நகரசபை தனி இராஜ்ஜியமாக மாறும் என்ற இன, மதவாதத்தை முன்னிறுத்தி பேசுபொருளாக்கப்பட்ட இந்தச் சந்தர்ப்பத்தில், இதே பதிவுக்குரிய முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் சம்பந்தப்பட்டாலே, அது மெய்யான குற்றச்சாட்டோ என்ற சிறிய அச்சத்தையேனும் ஏற்படுத்திவிடும். இது நமது நகரசபைக்கு நேர்எதிரான விளைவுகளை விதைத்து விடும்.
ஐக்கிய தேசிய கட்சியினரும் அவர்களது நல்லாட்சிக் காலத்தில் நமது நகரசபையை தருவதற்கு ஆக்கபூர்வமான முன்னகர்வுகளை மேற்கொள்ளவில்லை. மற்றும் வர்த்தமானி பத்திரிகை குறித்தும் இக்கட்சியினர் இன, மதவாத பிரசாரங்களை முன்வைத்திருந்தனர். இதனைக் கூட ரணிலோ, சஜித்தோ பெயருக்காவது கண்டிக்க முற்படவில்லை. இவை எல்லாவற்றையும் வைத்து கூட்டுமொத்தமாக நாம் நோக்கினால், சாய்ந்தமருது நகரசபையின் பூரணத்துவம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கைகளிலேயே தங்கி இருக்கிறது.
இத்தகைய நெருக்கடியில் நமதூர் மக்கள் எடுக்கக்கூடிய ஒரே தெரிவு ஸ்ரீலங்கா பொதுஐன பெரமுனவை ஆதரித்துக் கொள்வதாகும். இது சிலவேளை நமது அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் களம் பெரமுனவின் நேசக் கட்சி அல்லது சார்புக் கட்சி என்ற வகையில் நமதூர் மக்களின் நன்றி செலுத்துதல் - வாக்களித்தல் என்பதை குறித்து நிற்கும்.
சாய்ந்தமருது பள்ளிவாசல், நகரசபை செயற்பாட்டாளர்கள் அடையாளப்படுத்தும் அத்துடன் ஊர் மக்ளின் பெருவாரியான அங்கீகாரத்தைப் பெற்ற மற்றும் அதாவுல்லாஹ் ஆகியோர் போட்டியிடும் கட்சியே நமது நன்றியைச் செலுத்துவதற்கு உரித்தான நமது ஒரே தெரிவு ஸ்ரீலங்கா பொதுஐன பெரமுன அல்லது அதன் சார்பு நிலை கட்சி என்ற வகைக்குள் ஒன்றிணைவதுதான் நமது நகரசபையின் பூரணத்துவத்திற்கு வலுச்சேர்க்கவல்லது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -