காரைதீவு நிருபர் சகா-
உலகநாடுகளில் பரவிவரும் கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அவுஸ்திரேலியாவின் சிட்னிநகரில் எதிர்வரும் 2020.04.04 ஆம்திகதி நடைபெறவிருந்த முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்தஅடிகளாரது திருவுருவச்சிலை திறப்புவிழா பிற்போடப்பட்டுள்ளது என சிலைநிறுவும் குழுவின் பொதுச்செயலாளர் நா.குணரெட்ணம்(உதயசூரியன்) தெரிவித்தார்.
இச்சிலை திறப்புவிழாவிற்கு உலகநாடுகளிலிருந்து குறிப்பாக இந்தியா லண்டன்கனடா சிங்கப்பூர் மலேசியா பிரான்டஸ் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பல பேராளர்கள் சிட்னிக்கு வருகைதரவிருந்தனர். வித்தகர் சுவாமி விபுலாநந்தஅடிகளார் பிறந்த காரைதீவுமண்ணிலிருந்து சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்ற முன்னாள் தலைவர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா இச்சிலையை திறந்துவைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என ஏற்பாட்டாளர் நா.குணரெத்தினம் மேலும் தெரிவித்தார்.
உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் சுவாமி விபுலாநந்தஅடிகளாருக்கு இலங்கைநாட்டிற்குவெளியே முதன்முதல் அவுஸ்திரேலியமண்ணில் முதலாவது வெண்கலச்சிலை திறந்துவைக்கப்படவிருந்த சந்தர்ப்பம் இது.
சுவாமியின் அபிமானியும்எழுத்தாளரும் சமுகசேவையாளருமான அவுஸ்திரேலியாவின்தலைநகர் சிட்னியில் வாழும் காரைதீவைச்சேர்ந்த திரு.நா.குணரெத்தினம் தன்னந்தனியனாக நின்று இவ்வெண்கலச்சிலையை நிறுவவுள்ளார்.
சிலைதிறப்புவிழாவன்று "வித்தகனார் படிவமலர் " எனும் சிறப்பு மலரும் வெளியிடப்படவிருந்தது.
இச்சிலை திறப்புவிழாவிற்கு இலங்கையிலிருந்தும் பல பேராசிரியர்கள் கல்விமான்கள் புத்திஜீவிகள் வருகைதரவிருந்தனர்.அவர்களுக்கான விசா தொடக்கம் சகல பயண ஒழுங்குகளும்மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் கொரோனாவின் தாண்டவம் நாளுக்குநாள் அதிகரித்துவருவதனையடுத்து இவ் ஒத்திவைப்பு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
சுவாமியின் சிரார்த்ததினமான யூலைமாதம் 19ஆம் திகதி இவ்விழாவை நடாத்துவதென தற்சமயம் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின்தலைநகர் சிட்னியில் வாழும் காரைதீவைச்சேர்ந்த திரு.குணரெத்தினம் மேலும் தெரிவித்தார்.
