புத்தூர் குமரகுருபரன் சனசமூக நிலையத்தின் 72 ஆவது ஆண்டு நிறைவு விழா சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சனசமூக நிலையங்கள் மக்கள் பங்கேற்புடன் கூடிய நிறுவனங்களாக இயங்கும் போது கிராம மட்டத்தில் எழுகின்ற அனேக பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் எட்டப்பட முடியும். புத்தூர் கிழக்கில் இச் சனசமூக நிலையம் 72 ஆண்டுகளை நிறைவு செய்கின்றமையின் அடிப்படையில் எமது முன்னோர்கள் எமது கிராமத்தின் பாரம்பரியம், கலை, கலாச்சாரம், விளையாட்டு, பொருளாதாரம், அரசியல் விடயங்களில் எந்தளவு தூரம் கிராமமாகச் சிந்தித்து முன்னேற்றங்களுக்காக ஒன்றிணைந்தனர் என்பதை புரிந்து கொள்ள முடியும். சனசமூக நிலையம் என்ற அலகை ஓர் மையப்புள்ளியாக வைத்து முன்னேற்றம் கண்டனர். இவைகள் எமது பாரம்பரியங்கள்.
இன்று அபிவிருத்தியில் மக்கள் பங்கேற்புபை ஏற்படுத்துவதை மேலைத்தேய வியாக்கியானங்களுடன் பட்டப்படிப்பில் எமது தலைமுறையினர் கற்கின்றனர். இந்நிலையில், எம்மிடம் தான் கிராம மட்டத்தில் மக்கள் பங்கேற்பிற்கான அபிவிருத்தி மற்றும் ஜனநாயகப் பண்புமிக்க சனசமூக நிலையங்கள் இருந்துள்ளன என்பதை நாம் பறைசாற்ற தவறிவிடுகின்றோம்.
கிராமங்களில் சமூக பொருளாதார கலாசார ரீதியில் உரிய திட்டமிடல்கள் இன்மையால் பல பிரச்சினைகள், இழப்புக்கள் உள்ளன. குடும்ப வருமானத்திற்கும் செலவுக்கும் இடையிலான முகாமைத்துவம் இன்றி பலர் பிரச்சினைப்படுகின்றனர். இவ் நலிவடை நிலையினைப் பயன்படுத்தி நுண்பாக நிதி நிறுவனங்கள் உரிய கடன் முகாமைத்துவம் இன்றி மக்களை கடன்பொறிக்குள் தள்ளிவிடுகின்றன. இதனால் பலர் வாழ முடியாது தற்கொலை போன்ற முட்டாள்தனமான முடிவுகளை கூட எடுத்து விடுகின்றனர்.
ஒருவர் பிரச்சினையில் சிக்கியிருக்கிறார் என்றால் அவரை கண்டுகொள்வதற்கு கிராமமட்டத்தில் பொரியோர்களால் தலைமைதாங்கப்படும் சனசமூக நிலையங்கள் இயங்கவேண்டும். இன்று பலரும் தொலைக்காட்சி நாடகங்களுக்குள்ளும் சினிமாவிற்குள்ளும் சிக்கியிருக்கும் நேரத்தினைக் குறைத்து பொதுப்பணிகளில் ஈடுபாடுகாட்டவேண்டும். எமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கும் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கும் உழைக்கவேண்டும்.
கிராம அளவில் என்னதான் கருத்து வேறுபாடுகள் காணப்படினும் பொதுவான ஐக்கியம் கட்டியெழுப்பப்பபட்டு இவ்வாறாக எல்லோரும் ஒன்று கூடுவதற்கான நிகழ்வுகள் அவசியமாகும். அதனை குமரகுருபரன் சனசமூக நிலையம் சிறப்பாக ஆற்றியுள்ளது. இவ்விடத்தில் கிராமத்தின் புலம் பெயர் உறவுகளும் இங்குள்ள தன்னார்வலர்களும் இந்தச் சனசமூக நிலையத்திற்கான மைதானக் கொள்வனவுக்காக நடவடிக்கை எடுத்துள்ளனர். இவைகளினால் இப் பகுதியில் குமரகுருபரனின் சேவைகள் மேலும் வலுப்பொற வாழ்த்துகின்றேன்.
