தலவாக்கலை பி.கேதீஸ்-
நாடளாவிய ரீதியில் 26.2.2020 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களால் மேற்கொள்ளப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக நுவரெலியா மாவட்டத்தில் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் 90 வீதமானோர் இப்போராட்டத்திற்கு ஆதரவை வழங்கியுள்ளதாக ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ்.நாதன் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக சுகயீன விடுமுறை பெற்றுள்ளனர். இந்த நடவடிக்கைகளுக்கு நுவரெலியா மாவட்டத்தில் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் நிலை எவ்வாறு என்பது தொடர்பில் ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ்.நாதன் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது குறித்த தொழிற்சங்க நடவடிக்கையானது மிக நீண்டகாலமாக நிலவிவரும் அதிபர்,ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்த்து சம்பளத்தை அதிகரிக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் போலியான வாக்குறுதிகளை வழங்கி அரசு தொடர்ச்சியாக தங்களை ஏமாற்றி வருகின்றது, அரசியல் ரீதியாக நியமனங்களை வழங்கி கல்வித்துறையை சீரழித்து வருகின்றது, ஆசிரியர்களுக்கு தேவையற்ற அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றது.
அரசியல் பழிவாங்கல் என்னும் போர்வையில் இடம்பெறும் அனைத்து நிபந்தனைகளையும் வரப்பிரசாதங்களையும் உடனடியாக நீக்கவேண்டும், அதிபர், ஆசிரியர்களுக்கு படிவங்கள் நிரப்புதல் உட்பட நெருக்கடி தரும் மேலதிக வேலைகளை நிறுத்தி மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு இடம்கொடுக்க வேண்டும், பாடசாலை பராமரிப்புக்காக பெற்றோரிடம் இருந்து பணத்தை திரட்டுவதை நிறுத்தி மொத்த தேசிய உற்பத்தியில் கல்விக்காக 6 சதவீதத்தை ஒதுக்கச் செய்தல் வேண்டும் போன்ற பிரச்சினைகளுக்கு அரசிடம் தீர்வை வலியுறுத்துவதாக இந்த போராட்டம் அமையும். இதனை வலியுறுத்தியே 26.2.2020 தினம் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையை பெற்றுள்ளனர்.
அந்தவகையில் நுவரெலியா கல்வி வலய அதிபர் மற்றும் ஆசிரியர்கள் 90 வீதமானோர் இப்போராட்டத்திற்கு ஆதரவை வழங்கி சுகயீன விடுமுறையில் உள்ளனர்.சில பாடசாலைகளில் அதிபர்கள் பெற்றோர்களிடம் மாணவர்களை ஒப்படைத்துவிட்டு தங்களது சுகயீன போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். எனவே இனிவரும் காலங்களிலும் எமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவோம் என்றார்.
