இம்முறை தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று நேற்று புதன்கிழமை (15) மாலை, கல்முனை வின்னர்ஸ் கல்லூரியின் ஏற்பாட்டில் கல்முனை, இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹிலால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் இஸ்லாமாபாத் மு.வி. அதிபர் ஏ.ஜி.எம்.றிஷாட், சாய்ந்தமருது மல்ஹர் ஷம்ஸ் மகா வித்தியாலய பிரதி அதிபர் எம்.ஏ.சலாம் மற்றும் சிரேஷ்ட ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இதன்போது கல்முனைப் பிரதேசத்தில் தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மாத்திரமல்லாமல் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்த மாணவர்களும் பாராட்டி கௌரவிக்கபட்டனர். மிகவும் கோலாகலமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இவ்விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. அவர்களுக்கும் அதிதிகளினால் பரிசுகள் வழங்கப்பட்டன.
அத்துடன் கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்கள், கல்லூரி சமூகத்தினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.