ஆளுநரிடம் இம்ரான் எம்.பி வேண்டுகோள்
கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாமல் முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கிழக்குமாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கிழக்குமாகாண ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போது சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக அங்கு பலர் மரணமடைந்தும், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும் உள்ளதை அறிவீர்கள். இவ்வைரஸானது தென்கிழக்காசிய நாடுகள்,ஆசிய நாடுகள் என்பவற்றுக்கும் பரவிவருகின்றது. நேற்று இலங்கையில் முதலாவது நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இலங்கைக்கு சுற்றுலா வந்த சுற்றுலாப்பயணி என கண்டறியப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணமானது சுற்றுலாத்துறைக்கு பெயர் போன இடமென்பதனை அறிவீர்கள். முக்கியமாக திருகோணமலையில் நிலாவெளி கடற்கறை, மட்டக்களப்பில் பாசிக்குடா கடற்கறை, அம்பாறையில் அறுகம்பே கடற்கறை என்பன புகழ்பெற்ற சுற்றுலாத்தளங்கலாகும். அதேபோன்று திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள துறைமுகத்திற்கு வெளிநாட்டு கப்பல்கள் வருவதனையும் அதேபோன்று பிரீமா மா ஆலையில் சீன இனத்தவர்கள் கடமை புரிவதனையும் கருத்திற்கொண்டு இங்கு கொரோனா வைரஸ் தொற்றாமல் இருப்பதனை தடுப்பதற்கு ஏதுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.