இந்தோனேஷியாவில் நடைபெற்ற சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் தங்கம் வென்று, இலங்கைக்கு முதலிடம் பெற்றுக் கொடுத்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் சாதனை மாணவி பாத்திமா ஷைரீன் மெளலானாவை பாராட்டி கெளரவிக்கும் பிரேரணை கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் ஜனவரி மாதத்திற்கான பொதுச் சபை அமர்வு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மாநகர சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் இப்பாராட்டு பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.
பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய உறுப்பினர் ஆரிகா காரியப்பர் தெரிவிக்கையில்;
"கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியானது பெண்களின் கல்விக்கு ஒரு கலங்கரை விளக்காக இருக்கின்றது. நாடு முழுவதிலும் இருந்து முஸ்லிம் மாணவிகள் இங்கு வந்து கல்விகற்று பல்கலைக்கழகம் சென்று, உயர் நிலைக்கு வருகின்றனர். நானும் இக்கல்லூரியில் கல்வி கற்றுத்தான் இன்று ஒரு சட்டத்தரணியாக இருக்கின்றேன்.
இத்தகைய ஒரு பாடசாலையில் இருந்து பாத்திமா ஷைரீன் மெளலானா எனும் மாணவி இந்தோனேஷியாவில் நடைபெற்ற சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் பங்குபற்றி, தங்கம் விருதை வென்று, இலங்கைக்கு முதலிடத்தை பெற்றுக் கொடுத்து, எமது நாட்டின் கீர்த்தியை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இது எமது கல்லூரிக்கு மிகப்பெருமையாக இருக்கிறது.
இவ்வாறு இலங்கைக்கு புகழை ஈட்டிக்கொடுத்துள்ள பாத்திமா ஷைரீன் எமது கல்முனைப் பிரதேசத்தை சேர்ந்தவர் என்ற ரீதியில் இப்பிராந்தியமும் பெருமையடைகிறது. அதனால்தான் கல்முனை மாநகர சபையில் அவரை பாராட்டி கௌரவிக்கிறோம்.
பெண்கள் நினைத்தால், முயன்றால் எதனையும் சாதிக்கலாம் என்பதற்கு இவரது சாதனை நல்லதோர் உதாரணமாகும். இவர் மிகச்சிறந்த அறிவாற்றல் மிக்கதொரு மாணவியாக காணப்படுகின்றார். இவரது திறமைகளை அனைவரும் மெச்சுகின்றனர். இம்மாணவி எமது கல்முனை மாநகரின் முன்னாள் முதல்வர், செனட்டர் மஷூர் மௌலானாவின் சகோதரரான கலைஞர் ஷக்காப் மௌலானாவின் புதல்வருடைய மகள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
பாத்திமா ஷைரீனின் திறமைகளும் சாதனைகளும் ஏனைய மாணவர்களுக்கு முன்மாதிரியாக அமைந்திருக்கின்றன. எதிர்காலத்தில் இம்மாணவி இன்னும் உயர்வுகளை அடைந்து, சிகரம் தொட வேண்டும் என கல்முனை மாநகர சபையின் சார்பில் வாழ்த்துகின்றேன்" என்றார்.
இப்பிரேரணை மீது மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப், மாநகர சபை உறுப்பினர்களான எம்.ஏ.அஸீஸ், சுஹைல் அஸீஸ் ஆகியோரும் இம்மாணவியின் சாதனையையை பாராட்டி உரையாற்றினர்.