கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினர்களாக வடிவேல்கரசு சந்திரன், குஞ்சித்தம்பி விஜயலெட்சுமி ஆகியோர் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
கல்முனை மாநகர சபை முதல்வர் செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபையின் பொறியியலாளர் கே.சர்வானந்தன், மாநகர சபை உறுப்பினர் எம்.செல்வராசா உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
கல்முனை மாநகர சபையின் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் உறுப்பினர்களாக பதவி வகித்து வந்த பிரதி மேயர் காத்தமுத்து கணேஷ் மற்றும் சுமித்ரா ஜெகதீசன் ஆகிய இருவரும் பதவி விலக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரியின் பரிந்துரையின் பேரில் இவர்கள் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களது நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியான திலின விக்கிரமரத்னவினால் வெளியிடபட்டிருக்கிறது.
புதிய உறுப்பினர்களான வடிவேல்கரசு சந்திரன், குஞ்சித்தம்பி விஜயலெட்சுமி ஆகியோர் கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.]